Monday, March 14, 2016

166. தோழி கூற்று

166. தோழி கூற்று

பாடியவர்: கூடலூர் கிழார். சங்க காலத்தில், கூடலூர் என்ற ஓரூர், இன்று கேரள மாநிலத்தில் உள்ள பாலைக்காட்டு வட்டத்தில் இருந்தது. இப்புலவர் அந்த ஊரைச் சார்ந்தவராக இருந்திருக்கலாம் என்று ஔவை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இப்புலவர் புறநானூற்றில் இயற்றிய  ஒருபாடல் (229) மட்டுமின்றி, குறுந்தொகையில் மூன்று பாடல்களையும் (166,167, 214) இயற்றியுள்ளார்.  சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் வேண்டுகோளுக்கு இணங்கி, எட்டுத்தொகையில் உள்ள ஐங்குறுநூறு என்னும் நூலை இவர் தொகுத்ததாகக் கூறப்படுகிறது. இவர் வானவியலில் மிகவும் சிறந்த அறிஞர் என்பது அவர் இயற்றிய புறநானூற்றுப் பாடலிலிருந்து நன்கு தெரியவருகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தாய் முதலியோரின் பாதுகாவலில் வைக்கப்பட்டதால், தலைவி தலைவனோடு பழக முடியவில்லை. தலைவனைச் சந்திக்கும் வாய்ப்பு இல்லாததால், தலைவி வருத்தமாக இருந்தாள். அவள் வருத்தத்தைக் கண்ட தோழி, “ இந்த மரந்தையூர் நல்ல ஊராக இருந்தாலும், தனிமையில் இருப்பவர்களுக்கு அது மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறதுஎன்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை
நாரை நிரைபெயர்ந் தயிரை யாரும்
ஊரோ நன்றுமன் மரந்தை
ஒருதனி வைகிற் புலம்பா கின்றே. 

கொண்டு கூட்டு: தண்கடற் படுதிரை பெயர்த்தலின், வெண்பறை நாரைநிரை பெயர்ந்து அயிரை ஆரும். மரந்தை ஊரோ நன்றுமன். ஒருதனி வைகின் புலம்பாகின்றே. 

அருஞ்சொற்பொருள்: தண் = குளிர்ச்சி; படு திரை = தோன்றும் அலை; பறை = சிறகு; நிரை = கூட்டம்; அயிரை = அயிரை மீன்; ஆர்தல் = உண்ணுதல்; மரந்தை = சேர நாட்டிலிருந்த கடற்கரை நகரம்; ஒருதனி = தனியாக; வைகுதல் = இருத்தல்; புலம்பு = தனிமையால் வரும் வருத்தம்.
உரை: குளிர்ந்த கடலில் தோன்றும் அலைகள் மீன்களைப் இடம்பெயரச் செய்வதால்,  வெண்மையான சிறகுகளையுடைய நாரையின் கூட்டம் அங்கிருந்து  பெயர்ந்து அயிரை மீன்கள் உள்ள இடத்திற்குச் சென்று அவற்றை உண்ணும். அத்தகைய ஊராகிய மரந்தை, தலைவனோடு இருக்கும்பொழுது மிகவும் நன்றாக உள்ளது. ஆனால், தலைவனைப் பிரிந்து தனியே இருந்தால் வருத்தத்தைத் தருகிறது.


சிறப்புக் குறிப்பு:  அலைகள் அயிரை மீன்களை இடம்பெயரச் செய்தாலும், அவை இருக்கும் இடத்தே சென்று, நாரைகள் அவற்றை உண்பது போல, தாய் முதலியோர் தலைவியை வீட்டில் காவலில் வைத்திருந்தாலும் தலைவன் தலைவியிருக்குமிடத்து வந்து அவளைக் கண்டு இன்புற வேண்டுமென்பது குறிப்பு.

No comments:

Post a Comment