Saturday, March 26, 2016

174. தலைவி கூற்று

174. தலைவி கூற்று

பாடியவர்: வெண்பூதியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 97 – இல் காணலாம். திணை: பாலை.
கூற்று: பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிவதாக முடிவு செய்துவிட்டான். இதை அறிந்த தோழி, தலைவியிடம் வந்து தலைவனின் முடிவைப் பற்றிக் கூறுகிறாள். அதைக் கேட்ட தலைவி, அவர் செல்லும் பாலை நிலத்து வழிகள் கடத்தற்கு அரியவை. அவற்றைக் கடப்பதில் உள்ள இன்னல்களை எண்ணிப் பார்க்காமல் அவர் என்னைவிட்டுப் பிரியப் போகிறார் என்றால், இவ்வுலகில், பொருள்தான் பெறுதற்கரியது என்பதும் அருளை மதிப்பவர் யாரும் இல்லை என்பதும் தெளிவு என்று தோழியிடம் கூறுகிறாள்.

பெயன்மழை துறந்த புலம்பு உறு கடத்துக்
கவைமுள் கள்ளிக்காய் விடு கடுநொடி
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார் நம் துறந்து
பொருள்வயிற் பிரிவாராயின் இனி இவ்வுலகத்துப்
பொருளே மன்ற பொருளே
அருளே மன்ற ஆரும் இல்லதுவே. 


கொண்டு கூட்டு: பெயல் மழை துறந்த புலம்புறு கடத்து, கவைமுள் கள்ளிக் காய்விடு கடுநொடிதுதை மென்தூவித் துணைப்புறவு இரிக்கும் அத்தம் அரிய என்னார், நம் துறந்து பொருள் வயின் பிரிவாராயின் இவ்வுலகத்து மன்ற பொருளே பொருள்மன்ற அருளே ஆரும் இல்லது. 

அருஞ்சொற்பொருள்: பெயல் = பெய்யும்; துறந்த = நீங்கிய; புலம்பு = தனிமை; கடம் = காடு; கவை = பிளப்பு; கடு = விரைவு; நொடி = வெடிக்கும் ஒலி; துதைத்தல் = செறித்தல்; தூவி = சிறகு; புறவு = புறா; இரிக்கும் = ஓடச் செய்யும்; அத்தம் = பாலை நிலம்; மன்ற = உறுதியாக; பொருள் = செல்வம், மதிக்கத் தக்கது; ஆரும் = யாரும்.

உரை:  மழை பெய்யாத்தால் வறட்சி மிகுந்துள்ள, தனிமைமிக்க பாலை நிலத்தில், பிளவுபட்ட, முள்ளையுடைய கள்ளியின் காய்கள் வெடிக்கும் பொழுது எழும் விரைவான ஒலியானது, நெருங்கிய மெல்லிய சிறகுகளையுடைய, ஆணும் பெண்ணுமாக இணைந்திருக்கும் புறாக்களைப் பிரிந்து ஓடச் செய்யும். அரிய வழிகள் உள்ள பாலைநிலம், கடத்தற்கரியது என்று கருதாமல், பொருளைத்தேடும் பொருட்டு நம் தலைவர் பிரிவாராயின், உறுதியாக, இந்த உலகத்தில் செல்வம் மட்டுமே மதிக்கத் தக்கது என்பதிலும், அருளை ஒரு பொருளாக ஏற்றுக் கொள்வார் யாரும் இல்லை என்பதிலும் நிச்சயமாக ஐயமில்லை.


சிறப்புக் குறிப்பு: பாலை நிலம் கடத்தற்கரியதாக இருப்பதை எண்ணிப் பார்க்காமல், தம் துணையைப் பிரிந்து செல்லுவது அருளுக்கு மாறுபாடான செயலாக இருப்பதால் பொருள்தான் பெறுதற்கரியது என்று இவ்வுலத்தில் உள்ளவர்கள் கருதுவதாகத் தலைவி கூறுகிறாள். கள்ளிக்காய் வெடிப்பதால் தோன்றிய ஒலி, இணைந்திருக்கும் புறாக்களைப் பிரிப்பதைப்போல், பொருள்மேல் தலைவனுக்கு உள்ள விருப்பம் தலைவனையும் தலைவியையும் பிரிக்கிறது என்ற கருத்து இப்பாடலில் உள்ளுறையாக இருப்பதாகத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment