Saturday, March 26, 2016

175. தலைவி கூற்று

175. தலைவி கூற்று

பாடியவர்: உலோச்சனார். இவர் சோழ நாட்டில் இருந்த கண்ப வாயில் என்னும் ஊரைச் சார்ந்தவராகக் கருதப்படுகிறது.  இவர் நெய்தல் திணைப் பாடல்களை இயற்றுவதில் வல்லவர்.  இவர் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி உறையூரிலிருந்து ஆட்சிபுரிந்த போது அவனைப் பாடிப் பரிசில் பெற்றவர் (புறநானூறு - 377).  இவர் புறநானூற்றில் மூன்று பாடல்கள் ( 258, 274, 377) இயற்றியதோடு மட்டுமல்லாமல், நற்றிணையில் இருபது பாடல்களும் (11, 38, 63, 64, 74, 131, 149, 191, 203, 223, 249, 254, 278, 287, 311, 331, 354, 363, 372, 398), அகநானூற்றில் எட்டுப் பாடல்களும் ( 20, 100, 190, 200, 210, 300, 330, 400), குறுந்தொகையில் நான்கு பாடல்களும் (175, 177, 205, 248) இயற்றியுள்ளார்.
திணை: நெய்தல்.
கூற்று: பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லி வற்புறுத்துவாட்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பிரிந்திருந்த பொழுது, வருத்தத்தோடு இருந்த  தலைவியை நோக்கி, “தலைவனுடைய பிரிவினால் நீ வருந்துவது எனக்குப் புரிகிறது. அவர் விரைவில் வந்துவிடுவார். அதுவரை பொறுத்துக்கொள். ஊரில் உள்ளவர்கள் உன்னைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்என்று தோழி கூறுகிறாள். தோழியின் கூற்றுக்கு மறுமொழியாக,  “ஊரார் எதை வேண்டுமானாலும் பேசட்டும். அதற்காக நான் வருந்தப் போவதில்லை.” என்று தலைவி கூறுகிறாள்.    

பருவத் தேன் நசைஇப் பல்பறைத் தொழுதி
உரவுத் திரை பொருத திணிமணல் அடைகரை
நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம்
மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்கு
இரங்கேன் தோழி ஈங்கு என் கொல் என்று
பிறர்பிறர் அறியக் கூறல்
அமைந்தாங்கு அமைக, அம்பல் அஃது எவனே. 


கொண்டு கூட்டு: தோழி! பருவத் தேன் நசைஇப் பல்பறைத் தொழுதி உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம் மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்கு இரங்கேன். ஈங்கு என் கொல் என்று பிறர்பிறர் அறியக் கூறல் அமைந்தாங்கு அமைக! அம்பல் அஃது எவன்

அருஞ்சொற்பொருள்: நசைஇ = விரும்பி; பறை = பறவை (வண்டு); தொழுதி = கூட்டம்; உரவு = வலிமை; உரவுத்திரை = வலிய கடலலை; பொருத = மோதிய; திணிதல் = செறிதல்; மா = பெரிய, கரிய; சினை = கிளை; தொகூஉம் = கூடுகின்ற; அம்பல் = பழிச்சொல்.

உரை: தோழி! பருவ காலத்தில் உள்ள தேனை விரும்பி, பல வண்டுக்கூட்டங்கள், வலிமையான அலைகள் மோதுகின்ற மணல் செறிந்த கரை ஓரத்தில் உள்ள நனைந்த புன்னை மரத்தின் பெரிய கிளையில் மொய்க்கும்படி மலர்ந்த மலர்களையும், கரிய நீரையுமுடைய கடற்கரைத் தலைவன் என்னைப் பிரிந்ததற்காக நான் வருந்தேன். இங்கு,”இவள் ஏன் இங்ஙனம் ஆனாள்?” எனப் பிறர், பிறர் அறியும்படி கூறுதல், அவர்களுடைய மனத்திற்கேற்றபடி  அமையட்டும். அவர்கள் கூறும் பழிச்சொற்கள் என்னை  என்ன செய்யும்?

சிறப்புக் குறிப்பு: பறப்பதைத் தொழிலாகக் கொண்டதால் பறை என்ற சொல்  பறவையைக் குறிக்கிறது. தேன் நசைஇஎன்ற குறிப்பால் பறை என்ற பொதுப்பெயர் இங்கே வண்டைக் குறிக்கிறது     “தலைவன் என்னைப் பிரிந்தான் என்று நான் வருந்தவில்லை; ஆயினும் என்னை அறியாமால் என்னிடம் சில மாற்றங்கள் உண்டாகின்றன. அவற்றைக் கண்டு பிறர் என்ன வேண்டுமானாலும் கூறட்டும்; அவற்றால் என் காமம் வலிமையடையுமே தவிர எனக்குத் துன்பம் ஒன்றுமில்லைஎன்று தலைவி கூறுகிறாள்.


பலவிடங்களிற் பறந்து செல்லும் வண்டுகள் சரியான காலத்தில் பருவத் தேனை உண்ண வருவதைப்போல், தலைவன் பலவகை முயற்சிகளில் ஈடுபட்டு என்னைப் பிரிந்து சென்றாலும், உரிய காலத்தே வந்து என்னோடு மகிழ்ச்சியாக இருப்பான் என்ற நம்ம்பிக்கை எனக்கு உள்ளதால் நான் அவன் பொருட்டு வருந்த மாட்டேன்என்று தலைவி கூறுவதாகவும் பொருள் கொள்ளலாம்

No comments:

Post a Comment