Tuesday, November 17, 2015

111. தோழி கூற்று

111. தோழி கூற்று

பாடியவர்: தீன்மதி நாகனார்.    இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.  
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவு (திருமணம்) நீட்டித்த வழித் தலைமகள் வேறுபாடு கண்டு வெறியெடுப்பக் கருதிய தாயது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்குத் தலைவன் காலம் தாழ்த்துகிறான். அதனால், தலைவி வருந்துகிறாள். வருத்தத்தால், தலைவி உடலில் மாற்றங்கள் தோன்றியுள்ளன. ஒருநாள், தலைவன் தலைவியைக் காணவந்திருக்கிறான், அவன் வேலிப்புறத்தில் நின்றுகொண்டிருக்கிறான். அவன் வந்திருப்பதை அறிந்த தோழி, “உன்னுடைய உடலில் காணும் வேறுபாடுகளைக் கண்டு, அவற்றிற்குக் காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள உன் தாய் வெறியாட்டக்காரனை அழைக்கப் போகிறாள். அவன் இந்த வேறுபாடுகள் தெய்வத்தால் வந்தன என்று கூறுவான். இந்த நகைச்சுவையான காட்சிகளைக் காண்பதற்குத் தலைவன் நம் இல்லத்திற்கு சிறிது வந்து செல்ல வேண்டும்.” என்று தலைவனின் காதுகளில் கேட்குமாறு கூறுகிறாள்.

மென்தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும்
அதுவென உணரும் ஆயின் ஆயிடைக்
கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன
கேழிருந் துறுகற் கெழுமலை நாடன்
வல்லே வருக தோழிநம்
இல்லோர் பெருநகை காணிய சிறிதே.

கொண்டுகூட்டு: தோழி! மென்தோள் நெகிழ்த்த செல்லல், வேலன் வென்றி நெடுவேள் என்னும், அன்னையும் அதுவென உணரும் ஆயின், ஆயிடைக் கூழை இரும்பிடிக் கைகரந்தன்ன கேழ் இரும் துறுகல் கெழும் மலைநாடன்  நம் இல்லோர் பெருநகை காணிய சிறிதே வல்லே வருக.

அருஞ்சொற்பொருள்: நெகிழ்த்த = மெலியச் செய்த; செல்லல் =  துன்பம்; வேலன் = வெறியாட்டம் ஆடுபவன்; வென்றி = வெற்றி; வேள் = முருகன்; ஆயிடை = அப்பொழுது; கூழை = குறுகியது, குட்டையானது ; இரு = கருமையான ; பிடி = பெண்யானை; கரத்தல் = மறைத்தல்; கேழ் = நிறம்; துறுகல் = பாறை (குண்டுக்கல்) ; கெழு = பொருந்திய; வல்லே = விரைவில்; நகை = சிரிப்பு; காணிய = காண்பதற்கு.

உரை: தோழி! உன்னுடைய மெல்லிய தோளை மெலியச் செய்த துன்பம், வெற்றியையுடைய நெடிய முருகக் கடவுளால் வந்ததென்று வெறியாட்டாளன் சொல்லுவான். நம் தாயும்,  அதுவென்றே நினைப்பாளாயின், அப்பொழுது, சிறிய கருமையான பெண்யானை, தன் கையை மறைத்துப் படுத்திருப்பது போல் காட்சி அளிக்கும் கரிய நிறத்தையுடைய பெரிய குண்டுக்கல் பொருந்திய மலைநாட்டின் தலைவன்,  நம் வீட்டில் உள்ளவர்களின் பெரிய நகைக்கிடமான செய்கையைக் காணும் பொருட்டு, சிறிது நேரம், இங்கே விரைந்து வந்து செல்வானாக.


சிறப்புக் குறிப்பு:   தும்பிக்கையை மறைத்துக்கொண்டு படுத்திருக்கும் சிறிய யானையைப் போல் பாறை காட்சி அளிப்பதை ஆராய்ந்து அறிபவர்களுக்குத்தான் அதன் உண்மைத் தோற்றம் தெரியும் அதுபோல், ஆராயமல் காண்பவர்க்குத் தலைவியின் நிலைக்கு முருகன் காரணம் என்பதும்  ஆராய்வார்க்கு, அவள் தலைவன்மீது கொண்ட காதல்தான் காரணம் என்பதும் புலனாகும் என்பது குறிப்பு. ”இல்லோர் பெருநகைஎன்றது, தலைவியின் தாயும் மற்றவர்களும், தலைவியின் வேறுபட்ட நிலைக்குக் காரணம் தெரிந்துகொள்வதற்காக வேலனை அழைத்து வெறியாட்டம் நடத்துவது, கட்டுவிச்சியை அழைத்துக் குறிசொல்லச் சொல்லுவது போன்ற நிகழ்ச்சிகளைக் குறிக்கிறது

No comments:

Post a Comment