Tuesday, November 17, 2015

112. தலைவி கூற்று

112.  தலைவி கூற்று

பாடியவர்: ஆலத்தூர் கிழார். இவர் ஆலத்தூர் என்னும் ஊரைச் சார்ந்தவர் என்று கருதப்படுகிறது. இவர் குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (112, 350), புறநானூற்றில் ஐந்து பாடல்களும் (34, 36, 69, 225, 324) இயற்றியுள்ளார்
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவு (திருமணம்) நீட்டித்த வழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளாமல் காலம் கடத்துகிறான். அதனால் வருந்திய தலைவி, “ நான் ஊரார் பழிச்சொற்களுக்கு அஞ்சி மறைந்து வாழ்ந்தால் என் காமம் குறைந்துவிடும். காமத்தை முழுமையாக விட்டுவிட்டால் என்னிடம் எஞ்சியிருப்பது நாணம் ஒன்றுதான். என் பெண்மை நலன் தலைவனால் நுகரப்பட்டு சிறிதளவே எஞ்சி உள்ளது.” என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழியவர் உண்டஎன் நலனே.

கொண்டுகூட்டு: தோழி! கௌவை அஞ்சிற் காமம் எய்க்கும்எள் அறவிடினே உள்ளது நாணே; அவர் உண்டஎன் நலன், பெருங்களிறு வாங்க, முரிந்துநிலம் படாஅ நாருடை ஒசியல் அற்றே; கண்டிசின்

அருஞ்சொற்பொருள்: கெளவை = பழிச்சொல்; எய்த்தல் = தேய்தல், குறைதல்; எள் = இகழ்ச்சி; அறவிடுதல் = முற்றாக நீக்குதல்; ஒசியல் = ஒடிந்த மரக்கிளை; கண்டிசின் = காண்பாயாக.

உரை: தோழி! பிறர் கூறும் பழிச்சொற்களுக்கு அஞ்சினால், காமம் குறையும்.  பிறருடைய பழிச்சொற்கள் இல்லாமல் இருக்க வேண்டுமானால் காமத்தை விட்டுவிடவேண்டும். அவ்வாறு காமத்தை விட்டுவிட்டால், என்னிடம் இருப்பது நாணம் மட்டுமே ஆகும்; தலைவர் நுகர்ந்த எனது பெண்மை நலம், பெரியகளிறு உண்ணும் பொருட்டு வளைக்க, வளைந்து,  நிலத்தில் விழாமல் நாருடன் ஒட்டிக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கும் ஒடிந்த கிளையைப் போன்றது.    இதனை நீ  காண்பாயாக!


சிறப்புக் குறிப்பு: தலைவனுக்குக் களிறும், தலைவியின் பெண்மை நலத்திற்கு ஒடிந்த கிளையும் உவமை. தலைவையின் பெண்மை நலன் தலைவனால் நுகரப்பட்டிருந்தாலும், தலைவன் தன்னை மணந்துகொள்வான் என்று தலைவி நினைப்பதால், அவள் பெண்மை நலன், முற்றிலும் முறிந்து கீழே விழாத கிளையைப்போல் சற்று எஞ்சியிருக்கிறது என்று தலைவி நினைக்கிறாள்

No comments:

Post a Comment