Showing posts with label 320. தலைவி கூற்று. Show all posts
Showing posts with label 320. தலைவி கூற்று. Show all posts

Wednesday, March 8, 2017

320. தலைவி கூற்று

320. தலைவி கூற்று

பாடியவர்: தும்பிசேர் கீரனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 61 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று : அலரஞ்சி யாற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத் தோழிக்குக் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைக் காண வந்து வீட்டுக்கு வெளியே நிற்கிறான். “நான் என் தலைவனோடு ஒருநாள்கூடக் கூடி மகிழ்ந்தது இல்லை. ஆனால், இவ்வூரில் உள்ள மக்கள் அதற்குள்  அலர் பேசத் தொடங்கிவிட்டனர்.” என்று தலைவன் காதுகளில் கேட்குமாறு தலைவி தோழியிடம் கூறுகிறாள். தான் கூறுவதைத் தலைவன் கேட்டால், அவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்று தலைவி எண்ணுகிறாள்.

பெருங்கடற் பரதவர் கொண்மீன் உணங்கல்
அருங்கழிக் கொண்ட இறவின் வாடலொடு
நிலவுநிற வெண்மணல் புலவப் பலவுடன்
எக்கர்தொறும் பரக்குந் துறைவனொ டொருநாள்
நக்கதோர் பழியு மிலமே போதவிழ்
பொன்னிணர் மரீஇய புள்ளிமிழ் பொங்கர்ப்
புன்னையஞ் சேரி யிவ்வூர்
கொன்னலர் தூற்றுந்தன் கொடுமை யானே. 

கொண்டு கூட்டு: பெருங்கடல் பரதவர் கொள்மீன் உணங்கல் அருங்கழிக் கொண்ட இறவின் வாடலொடு,  நிலவுநிற வெண்மணல் புலவ, பலவுடன் எக்கர்தொறும் பரக்கும் துறைவனொடு, ஒருநாள் நக்கதோர் பழியும் இலம். போது அவிழ் பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப் புன்னை அம் சேரி இவ்வூர் தன் கொடுமையான் கொன்அலர் தூற்றும்.

அருஞ்சொற்பொருள்: பரதவர் = நெய்தல் நிலமக்கள் (மீனவர்கள்); கொள்மீன் = பிடித்துக் கொண்டுவந்த மீன்; உணங்கல் = வற்றல் (கருவாடு); கழி = கடலோர நீர்நிலை; இற = இறால் மீன்; வாடல் = வற்றல்; புலவு = புலால் நாற்றம்; எக்கர் = மணல்மேடு; துறைவன் = நெய்தல் நிலத்தலைவன்; நகுதல் = நகைத்தல் (மகிழ்ச்சியோடு இருத்தல்); போது = அரும்பு; இணர் = கொத்து; மரீஇய = மருவிய (பொருந்திய); இமிழ்தல் = ஒலித்தல்; பொங்கர் = மரக்கொம்பு; புன்னை = ஒருவகை மரம்; கொன் = வீணே; அலர் = பழிச்சொற்கள்.

உரை: பெரிய கடலிலிருந்து மீனவர்கள்  பிடித்துக் கொண்டுவந்த மீனின் வற்றலோடு (கருவாட்டோடு), நீந்துதற்கு அரிய கழிநீரிலிருந்து அவர்கள் கொண்டுவந்த, இறாமீனின் வாடிய வற்றலும், நிலவைப் போன்ற நிறத்தைக் கொண்ட வெண்மையான மணலில் புலால் நாற்றம் வீசும். இத்தகைய  பல இடங்கள் மணல்மேடு தோறும் பரவி இருக்கின்ற துறையையுடைய தலைவனோடு, ஒரு நாள்கூட மகிழ்ந்து இருந்ததாக ஒருபழியும் இல்லாதவர்கள் நாம். அவ்வாறு இருக்க, மொட்டுக்கள் மலர்கின்ற, பொன்போன்ற பூங்கொத்துக்கள் பொருந்திய, வண்டுகள் ஒலிக்கின்ற, கிளைகளை உடைய புன்னைமரங்கள் உள்ள சேரிகளில் வாழும் இவ்வூரார், தம்மிடத்தில் உள்ள  கொடுந்தன்மையால் நம்மை வீணே பழித்துரைக்கிறார்கள்.

சிறப்புக் குறிப்பு: மீனவர்கள்  கடலிலிருந்து பிடித்துக் கொண்டுவந்த  மீனும், கழியிலிருந்து  கொண்டுவந்த இறால் மீனும்  மணல் முழுவதும் நாற்றத்தைப் பரப்புகின்றன என்றது, தலைவன் தன்னோடு கொண்ட நட்பால் ஊர் முழுதும்அலர் பரவியது என்று தலைவி கூறுவதைக் குறிக்கிறது.