Sunday, August 20, 2017

399. தலைவி கூற்று

399. தலைவி கூற்று

பாடியவர்: பரணர்.
திணை: மருதம்.
கூற்று : வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்திவந்தான். அதனால் வருத்தம் அடைந்த தலைவி, தோழியை நோக்கி, “தலைவர் என்னோடு இருக்கும் பொழுது பசலை நீங்குகிறது. அவர் என்னைவிட்டுப் பிரியும் பொழுது பசலை என்னைப் பற்றிக்கொள்கிறதுஎன்று கூறுகிறாள்.

ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே. 

கொண்டு கூட்டு: பசலை காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கிவிடுவுழி விடுவுழிப் பரத்தலான்ஊருண் கேணி உண்துறைக் தொக்க பாசி அற்று.

அருஞ்சொற்பொருள்: கேணி = குளம்.

உரை: பசலையானது, தலைவர், நம்மைத் தொடுந்தோறும் தொடுந்தோறும் நம் உடலை விட்டு அகன்று, அவர் நம்மை விட்டுப் பிரியுந்தோறும் பிரியுந்தோறும் பரவுவதால், ஊரார் நீர் உண்ணும் குளத்தில், அவர்கள் நீரை உண்ணும் துறையில் திரண்டிருக்கும்  பாசியைப் போன்றது.

சிறப்புக் குறிப்பு: பசலைக்குப் பாசியை உவமையாகக் கூறியிருப்பது மிகவும் பொருத்தமானதாகவும் சிறப்பானதாகவும் உள்ளது. பாசி படர்ந்த குளத்தில் நீரை உண்ணுபவர்கள் பாசியை விலக்கி நீரை உண்பர். அவர்கள் கையால் நீரைத் தொட்டு, முகந்து குடிக்கும் பொழுது, பாசி விலகி இருக்கும். அவர்கள் நீரைக் குடித்து முடித்துக் கரையேறிய பிறகு பாசி மீண்டும் ஒன்று சேர்ந்துகொள்ளும். அதுபோல், தலைவனோடு இருக்கும் பொழுது பசலை விலகியும், தலைவன் பிரியும் பொழுது பசலை தலைவியைப் பற்றிக்கொண்டு அவள் உடலில் பரவுவதும் பசலையின் இயல்பு. பசலை என்பது, காமநோயால் உடலில் தோன்றும் நிறமாற்றத்தையும் பொலிவிழந்த நிலையையும் குறிக்கிறது. தலைவைனைத் திருமணம் செய்துகொண்டு அவனைவிட்டுப் பிரியாமல் வாழ்ந்தால் பசலை முழுமையாகத் தன்னைவிட்டு நீங்கும் என்பது  தலைவியின் கருத்து.
தலைவனின் பிரிவால், தலைவியின் உடலில்  பசலை உடனே பரவும் என்ற கருத்தைத் திருக்குறளிலும் காணலாம்.
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.                                             (குறள் – 1186)

பொருள்: விளக்கொளி எப்பொழுது மறையும் என்று பார்த்துகொண்டிருந்து, அப்பொழுதே பரவக் காத்திருக்கும் இருளைப்போல், கணவன் என்னைத் தழுவுவதைச் சற்றே தளர்த்தும் சமயம் பார்த்து, பசலைநிறம் என் உடலில் பரவக் காத்திருக்கின்றது.

 புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
 அள்ளிக்கொள் வற்றே பசப்பு.                                           (குறள் -  1187)

பொருள்: என் கணவனைத் தழுவிக்கொண்டு கிடந்த நான், பக்கத்தே சிறிது அகன்றேன். அவ்வளவிலேயே பசலை நிறம் என்னை அள்ளிக்கொள்வது போல் பற்றிகொண்டது.


2 comments:

  1. "தலைவன் தலைவியைப் பார்க்கிறான். அழகில் மயங்கி அவள் தேவதையோ என வியக்கிறான்!
    இல்லை கால் தரையில் இருக்கிறது. கூந்தல் மலரில் வண்டு மோதுகிறது. எனவே இவள் பூவுலகப் பெண்ணே என அறிகிறான்"

    இந்த கருத்துள்ள குறுந்தொகைப் பாடல் எது?

    ReplyDelete
  2. நீங்கள் குறிப்பிட்டது போன்ற கருத்துள்ள பாடல் குறுந்தொகையில் இல்லை. அது போன்ற கருத்து தொல்காப்பியத்தில் உள்ளது. ஒரு ஆடவன் ஒரு பெண்ணை முதன்முதலாகப் பார்க்கும்பொழுது, அவள் அழகில் மயங்கி, அவள் மானுடப் பெண்ணா அல்லது காதலைத் தூண்டி இளைஞர்களை வருத்தும் தெய்வப் பெண்ணோ (தெய்வப்பெண் - அணங்கு) என்று ஐயப்படுவான். பின்னர், அவள் தலையில் சூடிய பூவில் வண்டு மொய்ப்பதையும், நல்ல அணிகலன்களையும் அணிந்திருப்பதையும், மார்பில் ஒவியம் வரைந்திருப்பதையும், கண்களை இமைப்பதையும், அவளுடைய கால்கள் நிலத்தில் படிந்திருப்பதையும் பார்த்து, அவள் மானுடப் பெண்தான் என்று ஐயம் தெளிவான். இந்தக் கருத்துகள் தொல்காப்பியத்தில், பொருளதிகாரத்தில் களவியலில் உள்ள பாடல்கள் 1040 மற்றும் 1041 ஆகியவற்றில் உள்ளன.
    அந்தப் பாடல்கள்:

    1040 சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப
    இழிந்துழி இழிபே சுட்டலான.

    1041 வண்டே இழையே வள்ளி பூவே
    கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்று
    அன்னவை பிறவும் ஆங்கு அவண் நிகழ
    நின்றவை களையும் கருவி என்ப.

    ReplyDelete