Sunday, August 13, 2017

384. தோழி கூற்று

384. தோழி கூற்று

பாடியவர்: ஓரம்போகியார்.
திணை: மருதம்.
கூற்று : “நின் பரத்தையர்க்கு நீ உற்ற சூளுறவு நன்றாயிருந்தது!என்று நகையாடித் தோழி வாயில் மறுத்தது.
கூற்று விளக்கம்: பரத்தையரிடமிருந்து பிரிந்து வந்த தலைவன், தலைவியோடு வாழ விரும்புகிறான். அவன், தோழியிடம், “இனி நான் தலைவியைவிட்டுப் பிரிய மாட்டேன்என்று சூளுரைத்து, அவளைத் தனக்காகத் தலைவியிடம்  சென்று அவள் ஊடலைத் தணிக்குமாறு  வேண்டுகிறான். அவன் வேண்டுகோளுக்கு மறுமொழியாக, ”உன் சூள் பொய்யானதுஎன்று கூறித் தோழி, தலைவனின் வேண்டுகோளை மறுக்கிறாள்.  

உழுந்துடைக் கழுந்திற் கரும்புடைப் பணைத்தோள்
நெடும்பல் கூந்தற் குறுந்தொடி மகளிர்
நலனுண்டு துறத்தி யாயின்
மிகநன் றம்ம மகிழ்நநின் சூளே. 

கொண்டு கூட்டு: மகிழ்ந! உழுந்து உடைக் கழுந்தின், கரும்புடைப் பணைத்தோள் நெடும்பல் கூந்தல் குறுந்தொடி மகளிர் நலன் உண்டு, துறத்தி ஆயின் நின் சூள் மிக நன்று

அருஞ்சொற்பொருள்: உழுந்து = உளுந்து; கழுந்து = உலக்கையின் முனை; பணை = பருமைசூள் = சபதம் (உறுதி மொழி); அம்மஅசைச்சொல்.

உரை: மருத நிலத்தலைவ! உழுத்தங்காயை அடித்தற்குரிய உலக்கையின் முனையைப் போன்றதும், கரும்பின் படம் வரையப்பட்டதுமான  பருத்த தோளையும், நீண்ட நிறைந்த கூந்தலையும், குறுகிய  வளையல்களையும் உடைய பரத்தையரின், பெண்மைநலத்தை நுகர்ந்து, அவர்களைத் துறந்து இங்கு வருவாயாயின், நீ அவர்களுக்கு  அளித்த உறுதிமொழி  மிக நன்றாக இருந்தது!

சிறப்புக் குறிப்பு: உழுந்தை இடிக்கும் உலக்கையின் முனை தேய்ந்து வழுவழுப்பாகவும் பருத்ததாகவும் இருப்பதால், அது தோளுக்கு உவமையாகக் கூறப்பட்டது. காமனது வில்லாகிய கரும்பின் உருவத்தைக் குங்குமக் குழம்பால் மகளிர் தோளில் எழுதுதல் வழக்கம் என்று உ.வே. சாமிநாத ஐயர் தம் நூலில் கூறுகிறார்.  மகளிர்என்று பன்மையில் கூறியது தலைவன் பரத்தையர் பலரோடு அன்புடையவன் என்பதைக் குறிக்கிறது. தலைவன் பல பரத்தையரோடு கூடி மகிழ்ந்தவன் என்று தோழி கருதுவதால், அவள் அவனுக்காகத் தலைவியிடம் சென்று பேச மறுக்கிறாள்மற்றும், தலைவன் பரத்தையரோடு இருந்த பொழுது, அவர்களைவிட்டு பிரியாமல் இருப்பதாக அவர்களிடம் சூளுரைத்து, இப்பொழுது அவர்களைத் துறந்து, தலைவியை நாடி வந்துள்ளான். அதனால், “ மிகநன்று அம்ம மகிழ்ந நின் சூள்என்று தோழி அவனை எள்ளி நகையாடுகிறாள்.


No comments:

Post a Comment