Sunday, August 20, 2017

389. தோழி கூற்று

389. தோழி கூற்று

பாடியவர்: வேட்ட கண்ணனார்.
திணை: குறிஞ்சி
கூற்று : தலைமகன் குற்றேவல் மகனால் வரைவுமலிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. (வரைவு மலிதல் = திருமண முயற்சிகள் நடைபெறுவதை அறிதல்)
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டதை அவனுடைய குற்றேவல் மகன் வழியாக அறிந்த தோழி, அக்குற்றேவல் மகனை  வாழ்த்துவது போல் அச்செய்தியைத் தலைவிக்கு அறிவிக்கிறாள்.

நெய்கனி குறும்பூழ் காய மாக
ஆர்பதம் பெறுக தோழி அத்தை
பெருங்கல் நாடன் வரைந்தென அவனெதிர்
நன்றோ மகனே யென்றனென்
நன்றே போலும் என்றுரைத் தோனே.

கொண்டு கூட்டு: தோழி! பெருங்கல் நாடன் வரைந்தென அவன்எதிர் நன்றோ மகனே?” என்றனென்.  ”நன்றே போலும் என்று உரைத்தோன், நெய்கனி குறும்பூழ் காயமாக ஆர்பதம் பெறுக!

அருஞ்சொற்பொருள்: கனிதல் = உருகுதல்; குறும்பூழ் = ஒருவகைப் பறவை (கௌதாரி); காயம் = குழம்பில் வெந்த கறித்துண்டு; ஆர்பதம் = உண்ணும் உணவு; அத்தை அசைநிலை; வரைந்து என = வரைய (திருமணம் செய்துகொள்ள) முயற்சி செய்கிறான் என; அவன் எதிர் = அவனுக்கு முன்; மகன் குற்றேவல் செய்பவன் (பணிவிடை செய்பவன் என்ற பொருளில் வந்தது.)


உரை: தோழி!  பெரிய மலைநாட்டையுடைய தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டான் என்று கேள்விப்பட்டேன். அவனுடைய  குற்றேவல்  மகனின் எதிர்நின்று, ”குற்றேவல் மகனே, திருமணத்திற்கான முயற்சிகள் நன்றாக  நடைபெறுகின்றனவா?” என்று கேட்டேன்அவன், ”அனைத்தும் நன்றாகவே நடைபெறுகின்றனஎன்று கூறினான். அவன், நெய்யில் நன்கு ஊறி வெந்த குறும்பூழ் இறைச்சியை உண்ணுகின்ற உணவைப் பெறுவானாக!

No comments:

Post a Comment