Sunday, August 20, 2017

395. தலைவி கூற்று

395. தலைவி கூற்று

பாடியவர்:
இவர் பெயர் தெரியவில்லை.
திணை: பாலை.
கூற்று : வரைவிடை வைத்துப் பிரிய, ஆற்றாளாகிய, கிழத்தி நாம் ஆண்டுச் சேறும் எனத் தோழிக்கு உரைத்தது. (சேறும் = செல்லுவோம்)
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடச் சென்றிருக்கிறான். அவன் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாத தலைவி, “ நாம் தலைவன் இருக்கும் இடத்திற்குச் செல்வோம்என்று கூறுகிறாள்.
நெஞ்சே நிறையொல் லாதே யவரே
அன்பின் மையின் அருள்பொருள் என்னார்
வன்கண் கொண்டு வலித்துவல் லுநரே
அரவுநுங்கு மதியினுக் கிவணோர் போலக்
களையார் ஆயினுங் கண்ணினிது படீஇயர்
அஞ்ச லென்மரும் இல்லை அந்தில்
அளிதோ தானே நாணே
ஆங்கவர் வதிவயின் நீங்கப் படினே. 

கொண்டு கூட்டு: நெஞ்சு நிறை ஒல்லாது. அவர்அன்பு இன்மையின் அருள் பொருள் என்னார்வன்கண் கொண்டு, வலித்து வல்லுநர் அரவு நுங்கு மதியினுக்கு இவணோர் போலக் களையார் ஆயினும், கண் இனிது படீஇயர்அஞ்சல்என்மரும் இல்லை. அந்தில் ஆங்கு அவர் வதிவயின் நீங்கப்படின் நாண் தான் அளிது

அருஞ்சொற்பொருள்: நிறை = ஒரு நிலையில் நிற்றல்; ஒல்லாது = இயலாது; வன்கண் = கொடுமை; வலித்து = துன்புறுத்தி; அரவு = பாம்பு; நுங்குதல் = விழுங்குதல்; இவண்= இங்கு (இவ்வுலகம்); கண்படல் உறங்குதல்; அந்தில் = அசைநிலையாக வரும் இடைச்சொல்; வதிவயின் = இருக்கும் இடம்.

உரை: என் நெஞ்சத்தை ஒருநிலையில் நிறுத்த முடியவில்லை. தலைவர், என்பால் அன்பில்லாமல், அருளைச் சிறந்த பொருளாகக் கருதாமல், இரக்கம் இல்லாமல் என்னைத் துன்புறுத்துவதில் வல்லுநராகிவிட்டார்பாம்பால் விழுங்கப்படும்  திங்களுக்காக  இவ்வுலகத்திலுள்ளோர் பாம்பிடமிருந்து திங்களை மீட்க முயலாதது போல, இங்குள்ளவர்கள் எனது துன்பத்தை நீக்காமல் இனிமையாக உறங்குகின்றனர்.  ”அஞ்சாதேஎன்று கூறி நம்மைத் தேற்றுவார் எவரும் இங்கே இல்லை; ஆதலின், அங்கே அவர் இருக்கும் இடத்திற்கு நாம் நீங்கிச் சென்றால், நம் நாணம் இரங்கத் தக்கதாகும்.


சிறப்புக் குறிப்பு: தலைவன் இருக்கும் இடத்திற்குத் தலைவி அவனை நாடிச் செல்வது, அவளுக்கு இயற்கையாக உள்ள நாணத்தைக் கைவிட்டால்தான் இயலும். அதனால், தன் நாணம் அழியப் போகிறது என்பதை நினைத்துத் தலைவி, “நாணம் இரங்கத் தக்கதுஎன்றாள்.

1 comment: