Sunday, August 13, 2017

387. தலைவி கூற்று

387. தலைவி கூற்று

பாடியவர்: கங்குல் வெள்ளத்தார்.
திணை: முல்லை.
கூற்று : பிரிவிடை வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிரழிந்து கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவால் வருந்திய தலைவியை நோக்கித் தோழி, “நீ பிரிவைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்என்று வற்புறுத்துகிறாள். அதற்கு மறுமொழியாகத் தலைவி, “ தலைவனைப் பிரிந்திருப்பதால், மாலைக்காலம் எனக்கு மிகுந்த துன்பத்தை அளிக்கிறது. அதைப் பொறுத்துக் கொண்டாலும், இரவு நேரம் மாலைநேரத்தைவிட அதிகமாக என்னை வருத்துகிறதுஎன்று கூறுகிறாள்.

எல்லை கழிய முல்லை மலரக்
கதிர்சினந் தணிந்த கையறு மாலையும்
இரவரம் பாக நீந்தின மாயின்
எவன்கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே. 

கொண்டு கூட்டு: தோழிவாழி! எல்லை கழிய, முல்லை மலரகதிர்சினந் தணிந்த கையறு மாலையும் இர வரம்பு ஆக நீந்தினமாயின்கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே.
எவன் கொல்?

அருஞ்சொற்பொருள்: எல்லை = கதிரவன்; கையறுதல் = செயலற்று வருந்துதல்; இர = இரவு; கங்குல் = இரவு.

உரை: தோழி! பகல் நீங்க, முல்லைக் கொடிகள் மலர, கதிரவனின் வெப்பம் குறைந்த, செயலற்றுப் போகும்படியான மாலைக் காலத்தைக் கடல் என்று கருதிக் கடந்தாலும், அந்த மாலைக் காலத்தின் எல்லையாகிய இரவு ஆகிய வெள்ளம்  கடலைக் காட்டிலும் பெரியது.   நாம் என்ன செய்வது?


சிறப்புக் குறிப்பு: செயலற்று வருந்தும் மாலைக்காலத்தைக் கடலாகவும், மாலைக்காலம் முடிந்தபின் தொடங்கும் இரவு, அதைவிடப் பெரியகங்குல் வெள்ளம்என்றும் தலைவி கூறுகிறாள். காதலரைப் பிரிந்து வாழும் மகளிர்க்கு மாலைக்காலம் மிகுந்த துன்பத்தைத் தரும் காலம். மாலைக்குப் பின்னர் வரும் இரவில், உறங்காமல் வருந்துவதால், இரவில் தான் அடையும் துன்பம் மாலைக்காலத்தில் அடையும் துன்பத்தைவிட மிகப் பெரியது என்று தலைவி கூறுகிறாள்

No comments:

Post a Comment