Sunday, October 16, 2016

261. தலைவி கூற்று

261. தலைவி கூற்று

பாடியவர்: கழார்க் கீரனெயிற்றியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 35 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : இரவுக் குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காக இரவில், தலைவியின் வீட்டுக்கு அருகில் வந்து நிற்கிறான். அவன் வந்திருப்பது தலைவிக்கும் தோழிக்கும் தெரியும். ”தலைவரது வரவை எதிர்பார்த்து நான் வருந்தி இரவெல்லாம் தூங்காமல் இருந்தேன்." என்று தலைவனின் காதுகளில் கேட்குமாறு, தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள். அவள் வருத்தத்தை அறிந்தால், தலைவன் விரைவில் திருமணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வான் என்று தலைவி நினைக்கிறாள்.

பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய
சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள்
சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
நள்ளென் யாமத் தையெனக் கரையும்
அஞ்சுவரு பொழுதி னானு மென்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்காய் வகையின் வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! காவலர் கணக்கு ஆய் வகையின் வருந்தி என்  நெஞ்சு புண்ணுற்ற விழுமத் தானே பழமழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய சிதட்டுக் காய் எண்ணின் சில்பெயல் கடைநாள் சேற்றுநிலை முனைஇய செங்கண் காரான்
நள்ளென் யாமத்து ஐ எனக் கரையும் அஞ்சுவரு பொழுதினானும் என்கண் துஞ்சா.  

அருஞ்சொற்பொருள்: பதன் = பதம்; உருகுதல் = மெலிதல்; சிதடு = உள்ளீடின்மை; சிதட்டுக்காய் = உள்ளீஈடு இல்லாத காய்; எண் = எள்ளு; முனைஇய = வெறுத்த; காரான் = எருமை; நள் = செறிந்த; யாமம் = நள்ளிரவு; கரைதல் = ஒலித்தல்; துஞ்சுதல் = தூங்குதல்; காவலர் = நாழிகைக் கணக்கர்; கணக்கு = நாழிகைக் கணக்கு; விழுமம் = துன்பம்.
உரை: தோழி!, வாழி! நாழிகைக் கணக்கர் இரவில் காலக் கணக்கை ஆராய்வதைப் போல், ஆராய்ந்து வருந்தி,  நெஞ்சம் புண்பட்ட  துயரத்தால் நான் உறக்கம் இழந்தேன். முன்பு, மிகுதியாக மழை பெய்ததால் பதம் கெட்டு அழிந்து மெலிந்த,  உள்ளீடு இல்லாத காய்களை உடைய எள்ளுச்செடிகளைப் போல், மன உளைச்சலுடன் தன் நிம்மதியை இழந்து,குறைவாக மழை தூறும் கார்காலத்தின் இறுதி நாட்களில்,  சேற்றில் நிற்பதை வெறுத்து,  சிவந்த கண்களை உடைய எருமை,  இருள் செறிந்த நடு இரவில்,  என்று கத்துகின்ற,  அச்சம் உண்டாகும் காலத்திலும், என்னுடைய கண்கள், தூங்காமல் விழித்திருந்தன.
சிறப்புக் குறிப்பு: நாழிகைக் கணக்கர் இரவில் தூங்காமல் நாழிகையைக் கணக்கிட்டு அதை மணியோசையால் ஊரில் உள்ளவர்களுக்கு அறிவிப்பர். ”நாழிகைக் கணக்கர் உறங்கிவிட்டால், நாழிகை அறிவிப்பது தவறிவிடும். அதுபோல், நான் உறங்கிவிட்டால், தலைவன் வரும் நேரத்தை அறியாமல் அவனைச் சந்திக்க முடியாமல் போய்விடும்.” என்று தலைவி கூறுகிறாள். அச்சம் தரும் இரவு நேரத்தில், தான் துயரத்தோடு உறங்காமல் இருப்பதை அறிந்தால் தலைவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்ற நோக்கத்தோடு, தலைவன் காதுகளில் கேட்குமாறு தன் நிலையைத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

பழமழை பொழிந்து எள் பதன் அழிந்து சிதட்டுகாய் எண்ணின்என்றது கார்காலத்தில் மிகுந்த அளவில் மழை பெய்ததால் எள்ளுச்செடிகளில் உள்ள காய்கள் பதம் அழிந்து, அழுகி உள்ளீடு ஒன்றும் இல்லாமற் போனது என்பதைக் குறிக்கிறது. கார்காலத்தில் அதிக மழை பெய்ததால் எருமை இருக்கும் இடத்தில், கார்காலத்தின் இறுதி நாட்களில்கூட சேறு மிகுதியாக இருக்கிறது. சேற்றை விரும்புவது எருமையின் இயல்பு. அத்தகைய எருமைகூட, கார்காலத்தில் அதிகமாகப் பெய்த மழையால் சேற்றில் இருப்பதை வெறுக்கிறது. அதிகமாக மழை பெய்த கார்காலம் முழுவதும் தலைவனுக்காகக் காத்திருந்து, எள்ளுச் செடி தன் உள்ளீட்டை இழந்தது போல், எருமை தன் மன நிம்மதியை இழந்தது போல், தலைவியும் தன் மன வலிமையை இழந்து வருந்தி உறங்காமல் இருக்கிறாள் என்றும் பொருள்கொள்ளலாம்.


No comments:

Post a Comment