Showing posts with label 17. குறிஞ்சி - தலைவன் கூற்று. Show all posts
Showing posts with label 17. குறிஞ்சி - தலைவன் கூற்று. Show all posts

Monday, May 18, 2015

17. குறிஞ்சி - தலைவன் கூற்று

17. குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடியவர்: பேரெயின் முறுவலார்.   எப்பொழுதும் முறுவலோடு (புன்னகையோடு) இருந்தமையால் இவர் முறுவலார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. அது அவருடைய இயற்பெயராகவும் இருந்திருக்கலாம்.  இவர் பாண்டிய நாட்டில் இருந்த பேரெயில் என்னும் ஊரைச் சார்ந்தவராகையால் இவர் பேரெயில் முறுவலார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  இவர் புறநானூற்றில் ஒருபாடலும் (239) குறுந்தொகையில் ஒருபாடலும் (17) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைப் பார்ப்பதற்காக வருகிறான். தலைவிக்குப் பதிலாக, அங்கே தோழி வந்திருக்கிறாள். தலைவி வரவில்லையா என்று தலைவன் தோழியைக் கேட்கிறான். ”உங்கள் காதல் தலைவியின் பெற்றோருக்குத் தெரிந்துவிட்டது. ஆகவே, தலைவி இனி உன்னைப் பார்க்க வரமாட்டள்.” என்று தோழி கூறுகிறாள். அதைக் கேட்ட தலைவன், “காமம் முற்றினால் ஆண்கள் மடலேறத் துணிவார்கள்என்று தான் மடலேற எண்ணியிருப்பதைத் தோழியிடம் கூறுகிறான்.    

மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ் கொளினே. 

அருஞ்சொற்பொருள்: மா = குதிரை; மடல் = பனை மட்டை; குவிதல் = கூம்புதல்; முகிழ் = அரும்பு; கண்ணி = தலையில் அணியும் மாலை; மறுகு = தெரு; ஆர்த்தல் = ஆரவாரித்தல்; காழ்கொள்ளுதல் = முதிர்தல்.

உரை: காம நோயானது முதிர்வடைந்தால், பனை மட்டையையும் குதிரை எனக் கொண்டு, ஆடவர் அதனை ஊர்வர்; குவிந்த அரும்பை உடைய எருக்கம் பூ மாலையை அணிந்து கொள்வர்; தெருவில் பிறர் தம்மைக் கண்டு ஆரவாரித்தாலும் அதைப்பற்றிக் கவலைப் படமாட்டார்கள். தாம் எண்ணியது நிறைவேறாவிட்டால், வேறு செயல்களையும்  செய்வர்.

விளக்கம்: இப்பாடலில் கதலர்களின் புணர்தல் தொடர்பான செய்தி மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதால் இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது