Showing posts with label 205. தலைவி கூற்று. Show all posts
Showing posts with label 205. தலைவி கூற்று. Show all posts

Sunday, June 12, 2016

205. தலைவி கூற்று

205.  தலைவி கூற்று

பாடியவர்: உலோச்சனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 175 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்காகப் பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன்  தன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றான். அவன் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தலைவி வருந்துகிறாள்தலைவி வருந்துவதைக் கண்டு வருந்திய தோழியை நோக்கி, “ என் தலைவன் இப்பொழுதுதான் பிரிந்து சென்றான். அதைப் பசலை எப்படித் தெரிந்து கொண்டதோ? என் நெற்றியில் அது உடனே படர்ந்து விட்டதுஎன்று தலைவி கூறுகிறாள்

மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க
விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப்
பொலம்படைப் பொலிந்த வெண்டேர் ஏறிக்
கலங்குகடல் துவலை ஆழி நனைப்ப
இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன்
யாங்கறிந் தன்றுகொல் தோழியென்
தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே. 

கொண்டு கூட்டு:  தோழி! இடுமணற் சேர்ப்பன் மின்னுச்செய் கருவிய பெயல் மழை தூங்க விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்குப் பொலம்படைப் பொலிந்த வெண்தேர் ஏறிக்கலங்கு கடல் துவலை ஆழி நனைப்பஇனிச் சென் றனன்.  பசப்பு யாங்கு அறிந்தன்றுஎன் தேம் கமழ் திருநுதல் ஊர்தரும்.

அருஞ்சொற்பொருள்: கருவி = மேகம்; மழை = மேகம்; தூங்கல் = பொழிதல் (பெய்தல்); விசும்பு = ஆகாயம்; பறை = பறத்தல்; நிவந்தாங்கு = உயரத்தில் செல்வதுபோல்; பொலம் = பொன்; படை = தட்டு; பொலிவு = அழகு; துவலை = நீர்த்துளி; ஆழி  = சக்கரம்; இனி = இப்பொழுது; சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்;தேம் = மணம்.

உரை: தோழி! அலைகள் மணலைக் கொண்டுவந்து சேர்க்கும் கடற்கரையையுடைய நெய்தல் நிலத் தலைவன்,  மின்னலோடு கூடிய பெருமழை பெய்ய,  வானத்தில் பறக்கின்ற அன்னப் பறவை, உயர்ந்து பறப்பதைப்போல், பொன்னாலான பக்கங்களுடன் அழகுடன் விளங்கும்,  யானையின் தந்தத்தால் செய்யப்பட்ட  வெண்மையான தேரில் ஏறி,  கலங்கிய கடலிலுள்ள அலையின் நீர்த்துளிகள், அத்தேரின் சக்கரங்களை நனைக்கும்படி,   இப்பொழுதுதான் என்னைப் பிரிந்து சென்றான்; இந்தப் பசலை இதனை எப்படி அறிந்தது?   எனது மணம் கமழ்கின்ற அழகிய நெற்றியில் இந்தப் பசலை உடனே பரவியது.

சிறப்புக் குறிப்பு: மழைத்துளியில் நனைந்து உயரப் பறந்து செல்லும் வெண்ணிற அன்னம், கடலலைகளின் நீர்த்துளிகள் சக்கரங்களை நனைக்குமாறு செல்கின்ற வெண்ணிறமான தேருக்கு உவமை. தான் தலைவனின் பிரிவை நினைத்து வருந்துவதற்கு முன்னரே, பசலை அவன் பிரிவை அறிந்து கொண்டதே என்று தலைவி தன் வியப்பைத் தோழியிடம் கூறுகிறாள்.

தலைவனைப் பிரிந்ததால்தலைவியை உடனே பசலை பற்றிக் கொண்டது என்ற கருத்தைத் திருக்குறளிலும் காணலாம்.

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பு ஊர்வது.                                                          (குறள் – 1185)
பொருள்: அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.                                             (குறள் – 1186)

பொருள்: விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.                                            (குறள் – 1187)

பொருள்: தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!