Showing posts with label 39. பாலை - தலைவி கூற்று. Show all posts
Showing posts with label 39. பாலை - தலைவி கூற்று. Show all posts

Sunday, June 14, 2015

39. பாலை - தலைவி கூற்று

39. பாலை - தலைவி கூற்று

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 15-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவியின் வருத்தத்தைக் கண்ட தோழி, “ நீ பிரிவைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்; வருந்தாதே!” என்று ஆறுதல் கூறுகிறாள். அதற்குத் தலைவி, “அவர் சென்ற வழி மிகவும் வெம்மையான காற்று வீசும் பாலைநிலம் என்று கூறுகிறார்களே! அதைக் கேட்ட பிறகும் நான் எப்படி வருந்தாமல் இருக்க முடியும்?” என்று கூறுகிறாள்.

வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென
நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்பநம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே. 

அருஞ்சொற்பொருள்: வெம்மை = சூடு; திறல் = வலிமை; வளி = காற்று; பொங்கர் = மரக்கிளை; போந்தென = வீசுவதால்; நெற்று = உலர்ந்த பழம்; உழிஞ்சில் = வாகை மரம்; ஆர்த்தல் = ஒலித்தல்; சுரம்பாலைநிலம்; முனிதல் = வெறுத்தல்; ஆறு = வழி.
உரை: தோழி, என்னுடைய மார்பைத்தழுவி உறங்குவதை வெறுத்த என் தலைவர், என்னைவிட்டுப் பிரிந்து சென்றார். அவர் சென்ற வழியானது, வெம்மையான, வலிமையுடைய, விரைவான காற்று  வீசுவதால், வாகை மரத்தின் மரக்கிளைகளில் உள்ள முற்றிய வற்றல் ஒலிக்கும் மலைகளையுடைய, கடத்தற்கரிய பாலைநிலம் என்று கூறுவர்.