Showing posts with label 41. பாலை - தலைவி கூற்று. Show all posts
Showing posts with label 41. பாலை - தலைவி கூற்று. Show all posts

Tuesday, June 30, 2015

41. பாலை - தலைவி கூற்று

41. பாலை - தலைவி கூற்று

பாடியவர்: அணிலாடு முன்றிலார்.  இவருடைய இயற்பெயர் என்னவென்று தெரியவில்லை. மக்கள் இல்லாத வீடுகளின் முற்றத்தில் அணில் விளையாடிக்கொண்டிருப்பதை இப்பாடலில் இவர் “அணிலாடு முன்றில்” என்று குறிப்பிட்டதால்,  இவர் அணிலாடு முன்றிலார் என்று அழைக்கப்படுகிறார். சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது.
பாடலின் பின்னணி: தலைவனைப் பிரிந்து, தலைவி வருத்தத்துடன் இருக்கிறாள். அவளைக் காணத் தோழி வருகிறாள். தோழி, “ நீ ஏன் கவலையோடு இருக்கிறாய்?” என்று கேட்கிறாள். தலைவி, “என் தலைவர் என்னோடு இருந்த பொழுது நான் மகிழ்ச்சியோடு இருந்தேன். இப்பொழுது அவர் என்னோடு இல்லாததால், நான் பொலிவிழந்து, தனிமையில் வருந்துகிறேன்.” என்று கூறுகிறாள்.

காதலர் உழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே. 

அருஞ்சொற்பொருள்: உழை = பக்கம்; உவத்தல் = மகிழ்தல்; சாறு = திருவிழா; புகலுதல் = மகிழ்தல்; மன்ற = உறுதியாக; அத்தம் = பாலைநிலம்; நண்ணுதல் = நெருங்குதல்; குடி = வீடு; சீறூர் =  சிற்றூர்; முன்றில் = வீட்டு முன்னிடம், முற்றம்; புலம்பு = தனிமை; புல்லென்று = பொலிவிழந்து; அலப்புதல் = வருந்துதல்; ஞான்று = பொழுது, காலம்.

உரை: தோழி, தலைவர் என் பக்கத்தில் இருக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியுடன், திருவிழா நடைபெறும் ஊரில் உள்ளவர்கள் மகிழ்வதைப் போல் நானும் மகிழ்ச்சியோடு இருப்பேன். அவர் என்னைப் பிரிந்து சென்ற காலத்தில், பாலைநிலத்தில் உள்ள, அழகிய வீடுகளுடன் கூடிய சிறிய ஊரிலிருந்து மக்கள் நீங்கிச் சென்ற பிறகு அணில் விளையாடும் முற்றத்தையுடைய தனிமையான வீட்டைப் போல் நானும் பொலிவிழந்து வருந்துவேன்.

விளக்கம்: ”சாறுகொள் ஊரிற் புகல்வேன்” என்றது, இயல்பாக உள்ளதைவிட, விழாக்காலத்தில் மிகுதியான சிறப்பை ஓரூர் கொண்டிருப்பது போல, என் தலைவர் என்னோடு இருக்கும் பொழுது எனது இயற்கை அழகோடு  இன்னும் அதிக மகிழ்ச்சியோடும் அழகோடும் சிறந்து விளங்குவேன் என்று தலைவி கூறுவதைக் குறிக்கிறது. “அணிலாடு முன்றில்” என்பது, மக்கள் நடமாட்டம் இல்லாத வீடுகளில்தான் அணில் ஓடியாடிக்கொண்டிருக்கும் என்பதைக் குறிக்கிறது. .