Sunday, July 12, 2015

52. குறிஞ்சி - தோழி கூற்று

52. குறிஞ்சி - தோழி கூற்று

பாடியவர்: பனம்பாரனார்.  அகத்தியரின் மாணவருள் பனம்பாரனார் என்பவர் ஒருவர். அவர் பனம்பாரம் என்ற இலக்கண நூலை இயற்றியவராகவும்,  தொல்காப்பியத்துக்குப் பாயிரம் இயற்றியவராகவும் கருதப்படுகிறார். அந்தப் பனம்பாரனாரும் இப்பாடலை இயற்றியவரும் ஒருவர்தானா என்பது ஆய்வுக்குரியது. சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே உள்ளது.

பாடலின் பின்னணி: திருமணத்திற்கான முயற்சிகளைத் தலைவன் செய்வதையும், தலைவியின் பெற்றோர்கள் அதனை ஏற்றுக் கொண்டதையும் அறிந்து மகிழ்ந்த தோழி, தலைவியை நோக்கி, “நீ வருந்துவதை அறிந்த நான், உன் காதலைப் பற்றிய உண்மையை உன் தாய்க்கு  அறிவித்தேன்; அதனால் உன் திருமணம் விரைவில் நடைபெறப்போகிறது.” என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
நிரந்திலங்கு வெண்பல் மடந்தை
பரிந்தனென் அல்லனோ இறையிறை யானே.

அருஞ்சொற்பொருள்: ஆர் = பொருந்திய; களிறு = ஆண் யானை (யானை); திகழ்தல் = விளங்குதல்; சிலம்பு = பக்க மலை; சூர் = தெய்வம்; நசை = விருப்பம்; நரந்தம் =  ஓருவகைப்பூ (நாரத்தை); குவை = திரட்சி; நிரந்து =  வரிசையாக; பரிதல் = பரிந்து பேசுதல்; இறை = சிறிது; இறையிறை = கொஞ்சம் கொஞ்சமாக (பலமுறை).

உரை: நரந்தம்பூவின் மணம் கமழும் திரண்ட கரிய கூந்தலையும், வரிசையாக விளங்கும் வெண்மையான பற்களையுமுடைய பெண்ணே (தலைவியே)!  யானைகள் மிதித்ததால் உண்டாகிய பள்ளத்தில் தங்கிய நீர் விளங்கும் மலைப் பக்கத்திலுள்ள தெய்வத்தால் விரும்பப்பட்டவளைப் போல் நீ நடுங்கியதை அறிந்து, உன் வருத்தத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத நான் அதை நினைத்து நினைத்துப் பலமுறை உனக்காகப் பரிந்து பேசினேன் அல்லனோ?


விளக்கம்: “சூர் நசைந்த அனையாய் நடுங்கல்”  என்பது தெய்வம் ஏறிய பெண்ணின் உடல் நடுங்குவதைக் குறிக்கிறது. இங்கு சூர் என்பது குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகனைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ”தலைவனுக்கும் உனக்கும் திருமணம் நடைபெறாதோ என்று நீ வருந்தி நடுங்கியபொழுதெல்லாம் நானும் வருந்தினேன். உன் காதலைப் பற்றி உன் பெற்றோர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள் உன் திருமணத்திற்குச் சம்மதித்துவிட்டார்கள். உனக்கும் நீ விரும்பும் உன் தலைவனுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். ஆகவே, நீ வருந்தாதே!” என்று தோழி கூறுவதாகத் தோன்றுகிறது. 

51. நெய்தல் - தோழி கூற்று

51. நெய்தல் - தோழி கூற்று

பாடியவர்: குன்றியனார். இவரை பற்றிய செய்திகளைப் பாடல் 50 – இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவியை மணந்துகொள்வதற்கான முயற்சிகளில் தலைவன் ஈடுபட்டுகொண்டிருக்கிறான். ஆனால், திருமணம் நடைபெறுமோ அல்லது அதற்கு ஏதாவது தடை வருமோ என்று தலைவி கவலைப்படுகிறாள். “உன் தலைவனை எனக்குப் பிடித்திருக்கிறது. உன் தாய்க்கும் அவனைப் பிடித்திருக்கிறது. உன்னை அவனுக்குத்தான் உன் தந்தை திருமணம் செய்து கொடுக்கப் போகிறார். ஊரில் அதைப் பற்றித்தான் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.” என்று தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுகிறாள்.

கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலறு முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானும் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரும் அவனொடு மொழிமே. 

அருஞ்சொற்பொருள்: கூன் = வளைவு ; கூன்முண் = கூன் +முள் = வளைந்த முள்; முண்டகம் =  ஒரு செடி (கழி முள்ளி); கூர் = மிகுதி; பனி = குளிர்ச்சி; மா = கருமை; கால் = காற்று; பாறுதல் = சிதறுதல்; தூ = தூய்மை; சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்; யாய் = தாய் (தலைவியின் தாய்); நனி = மிகவும்; வெய்து = விருப்பத்தைக் கொடுப்பது; எந்தை = எம்+தந்தை (தலைவியின் தந்தையைக் குறிக்கிறது); கொடீஇயர் = கொடுக்க; அம்பல் = சிலர் அறிந்த அலர் (சிலர் அறிந்த பழிமொழி)

உரை: வளைந்த  முட்களை உடைய கழிமுள்ளியின் மிகுந்த குளிர்ச்சியான கரிய மலர்கள், நூலறுந்ததால் உதிர்ந்த முத்துக்களைப் போல, காற்றில் சிதறி, நீர்த்துறைகளுள்ள இடங்கள்தோறும் பரவும் தூய மணலையுடைய கடற்கரைக்குத் தலைவனை எனக்குப் பிடித்திருக்கிறது. உன் தாய்க்கும் அவனை மிகவும் பிடித்திருக்கிறது. உன் தந்தையும் உன்னை அவனுக்கே திருமணம் செய்துகொடுக்க விரும்புகிறார். உங்கள் காதலைப் பற்றி அறிந்த ஊர்மக்கள் உன்னையும் உன் தலைவனையும் சேர்த்தே பேசுகிறார்கள்.

விளக்கம்: முட்கள் நிறைந்த முள்ளியிடத்திலுள்ள முண்டக மலரைப் பறித்தால் அதிலுள்ள முட்கள் பறிப்பவரின்  கைகளை வருத்தும். ஆனால், காற்றில் பறந்து கடற்கரையில் பரவிக் கிடக்கும் முண்டக மலர்களைப் பறிப்பது எளிது.   அதுபோல், தலைவன் தலைவியின் காதலைப் பற்றிய செய்தி ஊர் மக்களிடம் பரவியிருப்பதாலும், தலைவனைத் தோழி, தலைவியின் தாய் மற்றும் தந்தை ஆகியோருக்குப் பிடித்திருப்பதாலும், தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் நடைபெறுவது எளிதாகிவிட்டது  என்பது குறிப்பு.


தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்துகொடுக்கும் உரிமை தந்தைக்கே உரியதாகையால், ‘எந்தையுங் கொடீஇயர் வேண்டும்.’ என்று தோழி கூறுகிறாள் என்று தோன்றுகிறது.

Tuesday, June 30, 2015

50. மருதம் - தலைவி கூற்று

50. மருதம் - தலைவி கூற்று

பாடியவர்: குன்றியனார். இவர் குறுந்தொகையில் ஆறு பாடல்களும் (50, 51, 117, 238, 301, 336), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (117, 239), அகநானூற்றில் இரண்டு பாடல்களும் ( 40, 41) இயற்றியவர்.
பாடலின் பின்னணி: மனைவியைப் பிரிந்து கணவன் பரத்தையரோடு வாழ்ந்து வருகிறான். அவன் மீண்டும் தன் மனைவியோடு வாழ விரும்பி, தூதுவன் ஒருவனை மனைவியிடம்  அனுப்புகிறான். மனைவி கணவன் மீது கோபமாக இருக்கிறாள். “அவர் அழகான இடத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் உடல் மெலிந்து தனிமையில் வாடுகிறேன்” என்று தன் கோபத்தையும் வருத்தத்தையும் மனைவி தூதுவனிடம் கூறுகிறாள்.


ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்
செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்
துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந்
திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப்
புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே. 

அருஞ்சொற்பொருள்: ஐயவி = வெண் சிறுகடுகு ; வீ = பூ; ஞாழல் = ஒரு மரம் ; செ = சிவந்த; மருது = மருத மரம் ; செம்மல் = பழம்பூ ; தாஅய் = பரந்து ; இறை = உடலுறுப்பின் மூட்டுவாய் (இங்கு தோளைக் குறிக்கிறது); இறந்து = கடந்து; இலங்குதல் = விளங்குதல்; ஞெகிழல் = நெகிழ்தல்; சாய்தல் = மெலிதல் ; புலம்பு = தனிமை; மணத்தல் = கூடுதல்.

உரை: வெண் சிறுகடுகைப் போன்ற சிறிய பூக்களையுடைய ஞாழல் மரத்தின் பூ, சிவந்த மலர்களையுடைய மருத மரத்தின் பழம்பூவோடு பரந்து, தலைவருடைய ஊரில் உள்ள நீர்த் துறையை அழகு செய்கிறது. அவர் முன்பு தழுவிய என் தோள், என் கையில் அணிந்திருக்கும் ஓளிபொருந்திய  வளையல்கள் நெகிழும்படி மெலிந்து தனிமையையே அழகாகப் பெற்றது.


விளக்கம்: “அவர் ஊர் “ என்றது, தலைவன் தலைவியோடு வாழாமல் தனித்து வாழ்வதைக் குறிக்கிறது.  ’‘அவர் ஊரிலுள்ள துறையை அணிந்தன்று’ என்றது, தலைவன் பரத்தையரோடு விளையாடி இன்புற்றிருந்தான் என்பதைக் குறிக்கிறது.

49. நெய்தல் - தலைவி கூற்று

49. நெய்தல் - தலைவி கூற்று

பாடியவர்: அம்மூவனார்.  இவர் குறுந்தொகையில் பதினொரு பாடல்களும் (49, 125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401), ஐங்குறுநூற்றில் 100 பாடல்களும், அகநானூற்றில் ஆறு பாடல்களும் ( 10, 71, 35, 140, 280, 370, 390), நற்றிணையில் பத்துப் பாடல்களும் ( 4, 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397) இயற்றியவர். இவர் சேரன், பாண்டியன் ஆகிய இருவேந்தர்களாலும், திருக்கோவலூரை ஆண்ட காரி என்னும் வள்ளலாலும் ஆதரிக்கப்பட்டவர். சேர நாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய தொண்டியும், அந்நாட்டிலிருந்த மரந்தை என்னும் நகரமும், பாண்டி நாட்டுக் கடற்கரைப் பட்டினமாகிய கொற்கையும், நடுநாட்டில் இருந்த கோவலூரும் இவரால் பாராட்டப்பட்டதால் இவர் அந்நகரங்களில் இருந்தவர் என்றும், இவர் காலத்தில் அவைகள் மிக்க விளக்கமுற்றிருந்தன என்றும் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். 

பாடலின் பின்னணி: தலைவியைவிட்டுப் பரத்தையோடு இருந்த தலைவன் மீண்டும் தன் இல்லத்திற்கு வந்து தன் மனைவியோடு வாழ்கிறான். தன் கணவன் பரத்தையிடமிருந்து விலகி வீட்டிற்கு வந்ததால், பெருமகிழ்ச்சியுற்ற மனைவி, இப்பிறவி மட்டுமல்லாமல் மறுபிறவியிலும் அவனே தனக்குக் கணவனாகவும் தானே அவன்  விரும்பும் மனைவியாகவும் இருக்கவேண்டும் என்று தன் விருப்பத்தைத் தன் கணவனிடம் கூறுகிறாள்.

அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. 

அருஞ்சொற்பொருள்: கொங்கு =  பூந்தாது; முண்டகம் = முள்ளிச் செடி; மணி = நீலமணி; கேழ் = நிறம்; மா = கருமை; சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்; இம்மை = இப்பிறவி ; மறுமை = மறு பிறவி; நேர்தல் = பொருந்துதல் .

உரை: அணிலின் பல்லைப் போன்ற கூர்மையான முள்ளையுடைய, தாது முதிர்ந்த முள்ளிச்செடியும்,  நீலமணியின் நிறத்தை ஒத்த கரிய கடல் நீரையுமுடைய நெய்தல் நிலத் தலைவ!  இப்பிறப்பு நீங்கி,  நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும், நீயே என் கணவனாக இருக்க வேண்டும். நான் உன் மனதிற்கேற்றவளாக (மனைவியாக) இருக்க வேண்டும்.

விளக்கம்: முள்ளிச் செடி முட்கள் நிறைந்த செடி. அந்த முள்ளிச் செடியின் இடையே மணமுள்ள தாதுக்கள் மிகுந்த மலர் இருப்பது போல், பரத்தையோடு கூடித் தன்னைப் பிரிந்து தனக்குக் கொடுமைகள் பலசெய்தாலும், தன் கணவன் தன்மீது மிகுந்த அன்புடையவன் என்று தலைவி கூறுவது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.


”நீயாகியர் என் கணவன்” என்றதால் மறுபிறவியிலும் தலைவன்தான் அவளுக்குக் கணவன் என்பது தெளிவு. ஆகவே, தலைவிதான் அவனுக்கு மனைவி என்பதும் பெறப்படுகிறது. ஆனால், ”யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே” என்று தலைவி கூறுவது, அவள் மனைவியாக மட்டுமல்லாமல் அவனால் விரும்பப்படுபவளாகவும் இருக்க விரும்புகிறாள் என்பதைக் குறிக்கிறது. அதாவது, மறுபிறவிகளில் தன் கணவன் வேறு பெண்களை விரும்பாமல் தன்னை மட்டுமே விரும்பவேண்டும் என்ற கருத்தையும் தலைவி வலியுறுத்துகிறாள்.

48. பாலை - தோழி கூற்று

48. பாலை - தோழி கூற்று

பாடியவர்: பூங்கணுத்திரையார்.  இவரது இயற்பெயர் உத்திரை. உத்திரம் என்னும் விண்மீன் நிலவிய நாளில் பிறந்ததால் இவர் உத்திரையார் என்ற பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  இவர் ஒருபெண்பாற் புலவர்.  இவர் பூங்கண் என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் பூங்கண் உத்திரையார் என்று அழைக்கப்பட்டார். இவர், புறநானூற்றில் ஒரு செய்யுளும் (277) குறுந்தொகையில் இரண்டு செய்யுட்களும் (48, 171) இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: காலைப் பொழுதில் தலைவனைக் காணத் தலைவி ஆவலுடன் காத்திருக்கிறாள். பூந்தாதுக்களால் செய்யப்பட்ட பாவையைக் கையில் வைத்திருக்கிறாள். நேரம் செல்லச் செல்ல வெயில் அதிகமாகிக் கொண்டிருகிறது. வெயிலின் கொடுமையால் அவள் கையில் உள்ள பாவை வாடிக் கொண்டிருக்கிறது. தலைவன் இன்னும் வரவில்லை. ஆகவே, தலைவி வருத்தத்துடன் காணப்படுகிறாள். அங்கு, சில பெண்கள் ஒரை என்னும் விளையாட்டை விளயாடிக்கொண்டிருக்கிறார்கள். தாதுக்காளால் செய்யப்பட்ட பாவை வாடுவதைக் கண்டு, தலைவி வருத்தத்துடன் செயலற்ற நிலையில் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள், “வெயிலில் அந்தப் பாவை வாடுவது இயற்கை. ஆகவே, அதைப் பற்றிக் கவலைப்படாதே. எங்களோடு விளையாட வா.” என்று தலைவியை அழைக்கிறார்கள். தலைவியின் வருத்தத்திற்கான உண்மையான காரணம் என்னவென்று அவளுடைய தோழிக்குத் தெரியும். ”தலைவன் விரைவில் வந்து தலைவியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினால் தலைவி அவள் கவலையைவிட்டு மகிழ்ச்சியாக இருப்பாளே.” என்று தோழி எண்ணுகிறாள்.

தாதிற் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்துங் கையா றோம்பென
ஓரை யாயங் கூறக் கேட்டும்
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்
நன்னுதல் பசலை நீங்க வன்ன
நசையாகு பண்பின் ஒருசொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே. 

அருஞ்சொற்பொருள்: தண் = குளிர்ச்சி; பாவை = பொம்மை; கையாறு = செயலொழிந்து அயர்தல் ; ஓம்புதல் = ஒழித்தல், விடுதல்; ஒரை = மகளிர் விளையாட்டு; ஆயம் = கூட்டம்; இனை = வருத்தம்; உழத்தல் =வருத்துதல், செய்தல்; நசை = விருப்பம்; இசைதல் = கிடைத்தல், இயலுதல்.

உரை: ”பூந்தாது முதலிய பொருட்களால் செய்யப்பட்ட, மிக்க குளிர்ச்சியையுடைய விளையாட்டுப் பாவை காலைப் பொழுதில் வாடுவதால் வருந்திச் செயலற்ற நிலையில் இருப்பதை தவிர்ப்பாயாக.” என்று ஒரை ஆடும் மகளிர் கூட்டம் சொல்லிய பிறகும் மிகுந்த வருத்தத்தோடு உள்ள, நல்ல நெற்றியை உடைய தலைவியின் பசலை நீங்க,  இவள் விரும்பும் ஒரு சொல்லைத் தலைவர் கூறமாட்டாரோ?


விளக்கம்: ”இன்ன பண்பு” என்றது தலைனைக் காணாத நேரம் நீடித்ததால், தலைவி வருத்தமுற்று பசலை நோயைப் பெற்றாள் என்பதைக் குறிக்கிறது.  ”நசையாகு பண்பின் அன்ன ஒரு சொல்” என்றது திருமணம் செய்துகொள்வேன் (வரைந்துகொள்வேன்) என்று தலைவி தலைவனிடமிருந்து கேட்க விரும்பும் சொல்லைக் குறிக்கிறது.

47. குறிஞ்சி - தோழி கூற்று

47. குறிஞ்சி - தோழி கூற்று

பாடியவர்: நெடுவெண்ணிலவினார். இப்பாடலில் “நெடுவெண்ணிலவே” என்று இப்புலவர் குறிப்பிட்டிருப்பதால், இவர் நெடுவெண்ணிலவினார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் ஒருபெண்பாற் புலவர். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது..
பாடலின் பின்னணி: தலைவன் இரவில் வந்து தலைவியோடு பழகுவதைத் தோழி விரும்பவில்லை. தலைவன் தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தோழி விரும்புகிறாள்.  ஆகவே, தோழி நிலவை நோக்கி, “ நீ ஓளி தருவதால்தான் தலைவன் இரவில் வருகிறான். அவர்களின் களவொழுக்கம் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆனால், இவ்வாறு நீ நீண்ட நேரம் காய்வது அவர்களின் களவொழுக்கத்திற்கு நீ செய்யும் நல்ல செயலன்று.” என்று கூஊறுகிறாள்.

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. 

அருஞ்சொற்பொருள்: கருங்கால் = கரிய அடிப்பக்கம்; வேங்கை = வேங்கை மரம்;  வீ = பூ; உகுதல் = உதிர்தல்; துறுகல் = பாறை; இரு = பெரிய; குருளை = நரி, நாய், பன்றி, புலி, மான், முயல் ஆகியவற்றின் குட்டி; எல் =இரவு.

உரை: நீண்ட நேரம் எறியும் வெண்ணிலவே! கரிய அடிப்பக்கத்தையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்த பாறை, பெரிய புலிக்குட்டியைப் போலக் காட்சி அளிக்கும் காட்டில் இரவு நேரத்தில் வரும் தலைவருடைய களவொழுக்கத்திற்கு, நீ நன்மை புரியவில்லை.

விளக்கம்: நிலவின் ஒளியிருப்பதால், கருமை நிறமுடைய பாறையின்மேல் விழுந்து கிடக்கும் மஞ்சள் நிறமுள்ள வேங்கை மலர்களைக் கண்டு தலைவன் புலிக்குட்டி என்று எண்ணி அஞ்சக்கூடும். அதுமட்டுமல்லாமல், புலிக்குட்டி இருந்தால், அங்கே மற்ற புலிகளும் இருக்கக்கூடும் என்று தலைவன் எண்ண வாய்ப்பு இருப்பதால், அவனுடைய அச்சம் மிகுதியாகலாம். நிலவொளி  நீண்ட நேரம் இருப்பதால் தலைவன் தலைவியின் களவொழுக்கம் அதிக நேரம் நீடிக்கலாம். இவ்வாறு களவொழுக்கம் தொடர்ந்து நீடித்து நடைபெற்றால், அது தலைவியின் பெற்றோர்களுக்கும் ஊராருக்கும் தெரிய வாய்ப்பு உண்டு. பின்னர், களவொழுக்கம் தொடர்ந்து நடைபெற முடியாது. ஆகவே, நீண்ட நேரம் நிலவு காய்வதால், களவொழுக்கத்திற்கு கேடு விளையுமே ஒழிய நன்மை இல்லை என்று தோழி கூறுவது, தலைவன் தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது.  

46. மருதம் - தலைவி கூற்று

46. மருதம் - தலைவி கூற்று

பாடியவர்: மாமலாடனார். இவருடைய பெயர் மாமிலாடன் என்று சில பிரதிகளில் காணப்படுவதாக உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் கூறியுள்ளார். இப்புலவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

பாடலின் பின்னணி:  கணவனைப் பிரிந்து வாழும் தலைவி தனிமையில் வருத்தத்துடன் இருக்கிறாள். அவளைக் காணத் தோழி வருகிறாள். “இந்த மாலைப்பொழுது எனக்குத் துன்பத்தை அளிக்கிறது. என்னைத் துன்புறுத்தும் இந்த மாலைப்பொழுதும் தனிமையும் என் கணவர் சென்ற நாட்டிலும் இருக்கும். ஆகவே, அவர் விரைவில் திரும்பி வருவார்” என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள்.

ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
எருவினுண் தாது குடைவன ஆடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே. 

அருஞ்சொற்பொருள்: ஆம்பல் = அல்லிப்பூ; சாம்பல் = ஒடுக்கல் ; சிறகர் = சிறகு; குரீஇ = குருவி; முன்றில் = முற்றம்; உணங்கல் = உலர்ந்த தானியம் ; மாந்துதல் = உண்ணுதல்; மன்றம் = பொதுவிடம்; தாது = பொடி ; நுண்தாது = நுண்ணிய பொடி; எருவின் நுண்தாது = சாணத்தின் நுண்ணிய பொடி; குடைவன = குடைந்து; இறை = வீட்டின் இறப்பு; பள்ளி = இடம்; வதிதல் = வசித்தல்; புன்கண் = துன்பம்; புலம்பு = தனிமை; இன்றுகொல் = இல்லையோ.

உரை: தோழி, இங்கே, வாடிய அல்லிப்பூவைப் போல் குவிந்த சிறகுகளையுடைய, வீட்டின்கண் தங்கும் குருவிகள், முற்றத்தில் உலருந் தானியங்களைத் தின்று, பொதுவிடத்தில் உள்ள சாணத்தின் நுண்ணிய பொடியைக் குடைந்து விளையாடி,  வீட்டிறப்பிலுள்ள இடத்தில் தம்முடைய குஞ்சுகளோடு மாலைநேரத்தில் தங்கியிருக்கின்றன. இதுபோல், பிரிந்து வாழ்பவர்களுக்குத் துன்பத்தைத் தரும் மாலைப் பொழுதும், தனிமையும், தலைவர் சென்ற நாட்டில், இல்லையோ?


விளக்கம்:   மாலை நேரத்தில், தமக்குரிய இடத்தில் தம்முடைய குஞ்சுகளோடு இருக்கும் குருவிகளைக் கண்ட தலைவர் தாமும் தம் பிள்ளைகளோடும் தலைவியோடும் சேர்ந்து வாழ்தல் வேண்டும் என்று எண்ணுவார் என்பது குறிப்பு.