Tuesday, June 30, 2015

50. மருதம் - தலைவி கூற்று

50. மருதம் - தலைவி கூற்று

பாடியவர்: குன்றியனார். இவர் குறுந்தொகையில் ஆறு பாடல்களும் (50, 51, 117, 238, 301, 336), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (117, 239), அகநானூற்றில் இரண்டு பாடல்களும் ( 40, 41) இயற்றியவர்.
பாடலின் பின்னணி: மனைவியைப் பிரிந்து கணவன் பரத்தையரோடு வாழ்ந்து வருகிறான். அவன் மீண்டும் தன் மனைவியோடு வாழ விரும்பி, தூதுவன் ஒருவனை மனைவியிடம்  அனுப்புகிறான். மனைவி கணவன் மீது கோபமாக இருக்கிறாள். “அவர் அழகான இடத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் உடல் மெலிந்து தனிமையில் வாடுகிறேன்என்று தன் கோபத்தையும் வருத்தத்தையும் மனைவி தூதுவனிடம் கூறுகிறாள்.


ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்
செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்
துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந்
திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப்
புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே. 

அருஞ்சொற்பொருள்: ஐயவி = வெண் சிறுகடுகு ; வீ = பூ; ஞாழல் = ஒரு மரம் ; செ = சிவந்த; மருது = மருத மரம் ; செம்மல் = பழம்பூ ; தாஅய் = பரந்து ; இறை = உடலுறுப்பின் மூட்டுவாய் (இங்கு தோளைக் குறிக்கிறது); இறந்து = கடந்து; இலங்குதல் = விளங்குதல்; ஞெகிழல் = நெகிழ்தல்; சாய்தல் = மெலிதல் ; புலம்பு = தனிமை; மணத்தல் = கூடுதல்.

உரை: வெண் சிறுகடுகைப் போன்ற சிறிய பூக்களையுடைய ஞாழல் மரத்தின் பூ, சிவந்த மலர்களையுடைய மருத மரத்தின் பழம்பூவோடு பரந்து, தலைவருடைய ஊரில் உள்ள நீர்த் துறையை அழகு செய்கிறது. அவர் முன்பு தழுவிய என் தோள், என் கையில் அணிந்திருக்கும் ஓளிபொருந்திய  வளையல்கள் நெகிழும்படி மெலிந்து தனிமையையே அழகாகப் பெற்றது.


விளக்கம்: அவர் ஊர்என்றது, தலைவன் தலைவியோடு வாழாமல் தனித்து வாழ்வதைக் குறிக்கிறது.  ’‘அவர் ஊரிலுள்ள துறையை அணிந்தன்றுஎன்றது, தலைவன் பரத்தையரோடு விளையாடி இன்புற்றிருந்தான் என்பதைக் குறிக்கிறது.

No comments:

Post a Comment