Sunday, June 14, 2015

32. குறிஞ்சி - தலைவன் கூற்று

32. குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவர் ஒருபெண்பாற் புலவர். இவர் பாண்டிய நாட்டில் இருந்த அள்ளூர் என்னும் ஊரைச் சார்ந்தவர் என்று கருதப்படுகிறது.  இவர் புறநானூற்றில்  ஒருபாடலும் (306), குறுந்தொகையில் ஒன்பது பாடல்களும் (32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237), அகநானூற்றில் ஒருபாடலும் (46) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: தலைவியைக் காண்பதற்காககத் தலைவன் வருகிறான். ஆனால் தலைவிக்குப் பதிலாகத் தோழி வந்திருக்கிறாள். ”தலைவி வரவில்லையா?” என்று தலைவன் கேட்கிறான்.  “தலைவி வரவில்லை. அவள் இனிமேல் உன்னைக் காண வரமாட்டாள்என்று தோழி கூறுகிறாள். தலைவியைக் காணாததால் ஏமாற்றம் அடைந்த தலைவன், “என்னுடைய காதல் உண்மையானது. தலைவி  என்னை  ஏற்றுக்கொள்ளாவிட்டால் நான் மடலேறுவேன். நான் மடலேறினால் அதனால் எங்கள் இருவருக்கும் பழி வரும். தலைவியைப் பிரிந்து உயிர் வாழ்ந்தால் ஊரில் உள்ளவர்கள் எங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். அதனால் எங்களுக்குப் பழி வரும்.” என்று கூறுகிறான். தான் கூறியதைத் தோழி தலைவியிடம் கூறினால், தலைவி மனம் மாறித் தன்னை ஏற்றுக்கொள்வாள் என்று தலைவன் எண்ணுவதாகத் தோன்றுகிறது.

காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலோடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே. 

அருஞ்சொற்பொருள்: கையறவு = செயலற்ற நிலை; துஞ்சுதல் = தூங்குதல்; யாமம் = நள்ளிரவு (இரவு 10 மணி முதல் 2 மணி வரை);  பகல்  - இங்கு பகல் என்பது நண்பகல் (பகல் 10 மணி முதல் 2 மணி வரை) மற்றும் எற்பாடு (மாலை 2 மணி முதல் 6 மணிவரைஆகிய இரண்டு பொழுதுகளையும் குறிக்கிறது. விடியல் = விடியற் காலம் ( இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை); மா = குதிரை; மடல் = பனைமட்டையால் செய்யப்பட்ட குதிரை போன்ற ஒரு உருவம்; மறுகு = தெரு; தெற்றென  = தெளிவாக; தூற்றல் = சிதறுதல் (பலர் அறியச் செய்தல்); பழி = அலர், குறை; தலைவருதல் = தோன்றுதல்.

உரை: காலைப்பொழுது, பகல், செயலற்ற நிலைக்குக் காரணமாகிய மாலைப் பொழுது,  ஊரில் உள்ளவர்கள் உறங்குகின்ற நள்ளிரவு, விடியற்காலம் ஆகிய நேரங்களில் அவ்வப்பொழுது மட்டும்  காமம் தோன்றுமாயின், அத்தகைய காமம் பொய் (உண்மையானது அன்று). பிரிவு வரும்பொழுது, குதிரையென்று எண்ணிக்கொண்டு பனை மடலால் செய்த குதிரையின் உருவத்தின்மேல் ஊர்ந்து நான் தெருவில் வந்தால் (மடலேறினால்), அது தலைவி எனக்கு அளித்த துயரத்தைப் பலர் அறியச் செய்ததாகும். அதனால் பழி வரும். அவளைப் பிரிந்து உயிர் வாழ்ந்தால் ஊர் மக்கள் எங்கள் பிரிவைப் பற்றிக் குறை கூறுவார்கள். அதனால் எங்களுக்குப் பழி வரும்.


விளக்கம்: காதலனைப் பிரிந்து வாழும் காதலியும், காதலியைப் பிரிந்து வாழும் காதலனும் மாலை நேரத்தில் பிரிவின் கொடுமையைத் தாங்கமுடியாமல் தவிப்பதற்குச் சான்றாக தமிழ் இலக்கியத்தில் பல பாடல்கள் உள்ளன. உதாரணமாக,  “காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலருமிந் நோய்” (குறள் 1227) என்று திருவள்ளுவர் கூறியிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது. மாலையில் காதல் நோய் தன்னை மிகுதியாகத் துன்புறுத்துவதால் தலைவன் கையறு மாலைஎன்று கூறியதாகத் தோன்றுகிறது. “ஊர் துஞ்சி யாமம்என்றது ஊரில் உள்ளவர்கள் அனைவரும் உறங்கினாலும் தலைவன் மட்டும் நள்ளிரவில் தூங்காமல் இருப்பதைக் குறிக்கிறது. “வாழ்தலும் பழியேஎன்றது, தலைவி தன்னை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தலைவன் இறக்கவும் அஞ்ச மாட்டான் என்பதைக் குறிக்கிறது.

No comments:

Post a Comment