Sunday, June 14, 2015

35. மருதம் - தலைவி கூற்று

35. மருதம் - தலைவி கூற்று

பாடியவர்:
கழார்க் கீரனெயிற்றியார்.  இவர் ஒருபெண்பாற் புலவர். கழார் என்பது மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஓரூர். இப்புலவரே அதனை, ‘வெல்போர்ச் சோழர் கழாஅர்’ (நற். 281) என்பர்.  இவர் குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (35, 261), அகநானூற்றில் நான்கு பாடல்களும் (163, 217, 235,294), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (281,312) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணிதலைவனைப் பிரிந்திருப்பதால் தலைவி வருந்தி அழுகிறாள். “நீ ஏன் அழுகிறாய்?” என்று தோழி கேட்கிறாள். ”என் தலைவன் பிரிந்து சென்றபொழுது அழாமல், அவன் பிரிவிற்கு உடன்பாடாக இருந்த என் கண்கள் இப்பொழுது நாணமின்றி அழுகின்றன.” என்று தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
நுண்ணுறை யழிதுளி தலைஇய
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே. 

அருஞ்சொற்பொருள்: நாணில = நாண்+ இல = நாணம் இல்லாத; மன்ற = உறுதியாக; நேர் = உடன்பாடு; நாணேர்பு = நாள் + நேர்பு = (பிரிந்த) நாளில் உடன்பட்டு; சினை = கருப்பம்; சூல் = கருப்பம்; முதிர்ப்பு = முதிர்ச்சி; கனைத்த = திரண்ட; கூம்புதல் = குவிதல்; பொதி = அரும்பு; உறை = மழை; அழி துளி = அழியும் மழைத்துளி; தலைஇய = பொருந்திய; தண் = குளிர்ச்சி; வாடை = வடக்கிலிருந்து வரும் காற்று; பிரிந்திசினோர் = பிரிந்தவர்.

உரை: தோழி, தலைவர் பிரிந்த நாளில் உடன்பட்டு, கருப்பத்தை உடைய பச்சைப் பாம்பினது கருவின் முதிர்ச்சியைப் போன்ற, திரண்ட கரும்பினது குவிந்த அரும்பு மலரும்படி, கார்காலத்து மழை பெய்த பிறகு, மேகங்களில் எஞ்சியிருக்கும் துளிகளுடன் குளிர்ச்சியுடைய வாடைக் காற்று வீசும் குளிர்காலத்திலும் பிரிந்திருக்கும் தலைவரை நினைத்து அழுவதால் என்னுடைய கண்கள், நிச்சயமாக நாணம் இல்லாதவை. (கரும்பின் குவிந்த அரும்பு கருவுற்ற பச்சைப் பாம்பைபோல் இருப்பதை கீழே உள்ள படத்தில் காணலாம்.)


விளக்கம்: வாடைக்காற்று வீசும் கூதிர்காலம் ( ஐப்பசி, கார்த்திகை) காதலர்கள் கூடியிருக்க விரும்பும் காலமாகக் கருதப்பட்டது. தலைவியை விட்டுப் பிரிந்து சென்ற தலைவன் கார்காலத்தில் (ஆவணி, புரட்டாசி) திரும்பி வருவது வழக்கம். கார்காலம் கடந்து கூதிர்காலமும் வந்தமையால் தலைவியின் வருத்தம் மிகுந்தது என்று தோன்றுகிறது. தன்னுடைய நிலைக்குத் தலைவி தன் கண்களைக் குறைகூறுவது மரபு. இதைத் திருக்குறளில் உள்ளகண்விதுப்பழிதல்என்ற அதிகாரத்திலும் (அதிகாரம் 118) காணலாம்.

 

No comments:

Post a Comment