Sunday, June 14, 2015

40. குறிஞ்சி - தலைவன் கூற்று

40. குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடியவர்: செம்புலப் பெயனீரார். இப்பாடலை இயற்றியவரின் இயற்பெயர் தெரியவில்லை. ஆனால், இப்பாடலில், “செம்புலப் பெயல் நீர்என்ற அருமையான உவமையை இவர் பயன்படுத்தியதால், இவர் இப்பெயர் பெற்றார் என்று கருதப்படுகிறது. சங்க இலக்கியத்தில் இவர் எழுதியதாக இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: ஒரு ஆடவனும் பெண்ணும் தற்செயலாகச் சந்தித்தார்கள்முதல் சந்திப்பிற்குப் பிறகு, அவர்கள் பலமுறை மீண்டும் சந்தித்துக் கருத்தொருமித்துப் பழகினார்கள்தங்களுடைய காதல்  தொடருமா அல்லது தன் தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவானோ என்று காதலி கவலைப்படுகிறாள்.  ”எவ்விதமான உறவும் இல்லாத நாம் நெருங்கிப் பழகுகிறோம். நம்முடைய நெஞ்சங்கள் ஒருமித்தன. நாம் பிரிய மாட்டோம்.” என்று உறுதி கூறித் தலைவன்  அவளுக்கு ஆறுதல் கூறுகிறான்.
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. 

அருஞ்சொற்பொருள்: ஞாய் = தாய் (உன்னுடைய தாய்); நுந்தை = உன்னுடைய தந்தை; புலம் = நிலம்; செம்புலம் = சிவந்த நிலம்; பெயல் = மழை.

உரை: என்னுடைய தாயும் உன்னுடைய தாயும், ஒருவருக்கொருவர் எத்தகைய உறவினர்? என்னுடைய தந்தையும், உன்னுடைய தந்தையும் எந்த முறையில் உறவினர்? நானும் நீயும் ஒருவரையொருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? ஆனால் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைவதைப்போல், அன்புடைய நம் நெஞ்சங்கள் தாமாகவே ஒன்றுபட்டன. நாம் ஒருவரையொருவர் விட்டுப் பிரிய மாட்டோம்.

விளக்கம்: யாய், ஞாய், தாய்ஆகிய சொற்கள் முறையே என் தாய், உன் தாய், அவர் தாய்என்பவற்றைக் குறிக்கின்றன. அதுபோல், ”எந்தை, நுந்தை, உந்தைஎன்ற சொற்கள் என் தந்தை, உன் தந்தை, அவர் தந்தைஎன்பவற்றைக் குறிக்கின்றன.

நிலத்தியல்பான் நீர்திரிந்தற்று ஆகும் மாந்தர்க்கு
 இனத்தியல்பது ஆகும் அறிவு. (குறள் 452)

என்றும்,

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
 நீரியைந் தன்னார் அகத்து. (குறள் 1323)

என்றும்  வள்ளுவர் கூறியிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

எவ்வித உறவும் இல்லாத, முன்பின் தெரியாத ஆணுக்கும் பெண்ணுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்த பிறகு, அவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையைத் தொடங்கி  அன்புடை நெஞ்சம் கலந்து கணவன் மனைவியாக வாழ்பவர்களுக்கும்  இப்பாடல் பொருந்துவதாகத் தோன்றுகிறது.


இப்பாடலின் அடிப்படையில் சில திரைப்படப் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இப்பாடலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் இலண்டன் மாநகரத்தின் தொடர்வண்டிகளில் பொறிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை http://www.thehindu.com/thehindu/2001/07/01/stories/1301067c.htm என்ற இணைய தளத்தில் காணலாம்.

No comments:

Post a Comment