51.
நெய்தல் - தோழி கூற்று
பாடியவர்:
குன்றியனார். இவரை பற்றிய செய்திகளைப் பாடல் 50 – இல் காணலாம்.
பாடலின்
பின்னணி:
தலைவியை
மணந்துகொள்வதற்கான முயற்சிகளில் தலைவன் ஈடுபட்டுகொண்டிருக்கிறான். ஆனால், திருமணம் நடைபெறுமோ அல்லது அதற்கு ஏதாவது தடை
வருமோ என்று தலைவி கவலைப்படுகிறாள். “உன் தலைவனை எனக்குப் பிடித்திருக்கிறது.
உன் தாய்க்கும் அவனைப் பிடித்திருக்கிறது. உன்னை
அவனுக்குத்தான் உன் தந்தை திருமணம் செய்து கொடுக்கப் போகிறார். ஊரில் அதைப் பற்றித்தான் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.” என்று தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுகிறாள்.
கூன்முண்
முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலறு முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானும் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரும் அவனொடு மொழிமே.
நூலறு முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானும் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரும் அவனொடு மொழிமே.
அருஞ்சொற்பொருள்: கூன் = வளைவு ; கூன்முண் = கூன்
+முள் = வளைந்த முள்; முண்டகம்
= ஒரு செடி (கழி முள்ளி); கூர் = மிகுதி;
பனி = குளிர்ச்சி; மா
= கருமை; கால் = காற்று;
பாறுதல் = சிதறுதல்; தூ
= தூய்மை; சேர்ப்பன் = நெய்தல்
நிலத் தலைவன்; யாய் = தாய் (தலைவியின் தாய்); நனி = மிகவும்;
வெய்து = விருப்பத்தைக் கொடுப்பது; எந்தை = எம்+தந்தை (தலைவியின் தந்தையைக் குறிக்கிறது); கொடீஇயர்
= கொடுக்க; அம்பல் = சிலர்
அறிந்த அலர் (சிலர் அறிந்த பழிமொழி)
உரை: வளைந்த
முட்களை உடைய கழிமுள்ளியின் மிகுந்த குளிர்ச்சியான
கரிய மலர்கள்,
நூலறுந்ததால் உதிர்ந்த முத்துக்களைப் போல, காற்றில்
சிதறி, நீர்த்துறைகளுள்ள இடங்கள்தோறும் பரவும் தூய மணலையுடைய
கடற்கரைக்குத் தலைவனை எனக்குப் பிடித்திருக்கிறது. உன் தாய்க்கும்
அவனை மிகவும் பிடித்திருக்கிறது. உன் தந்தையும் உன்னை அவனுக்கே
திருமணம் செய்துகொடுக்க விரும்புகிறார். உங்கள் காதலைப் பற்றி
அறிந்த ஊர்மக்கள் உன்னையும் உன் தலைவனையும் சேர்த்தே பேசுகிறார்கள்.
விளக்கம்: முட்கள்
நிறைந்த முள்ளியிடத்திலுள்ள முண்டக மலரைப் பறித்தால் அதிலுள்ள முட்கள் பறிப்பவரின் கைகளை வருத்தும். ஆனால், காற்றில் பறந்து கடற்கரையில் பரவிக் கிடக்கும்
முண்டக மலர்களைப் பறிப்பது எளிது. அதுபோல், தலைவன்
தலைவியின் காதலைப் பற்றிய செய்தி ஊர் மக்களிடம் பரவியிருப்பதாலும், தலைவனைத் தோழி, தலைவியின் தாய் மற்றும் தந்தை ஆகியோருக்குப்
பிடித்திருப்பதாலும், தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் நடைபெறுவது
எளிதாகிவிட்டது என்பது
குறிப்பு.
தலைவியைத்
தலைவனுக்குத் திருமணம் செய்துகொடுக்கும் உரிமை தந்தைக்கே உரியதாகையால், ‘எந்தையுங் கொடீஇயர் வேண்டும்.’ என்று தோழி கூறுகிறாள்
என்று தோன்றுகிறது.
பெரு மதிப்பிற்குரிய ஐயா அவர்கட்கு வணக்கம்.
ReplyDeleteதங்களின் இவ்வுரை இளங்கலை மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் எளிமையாக உள்ளது.
நன்றி.