Sunday, July 12, 2015

58. குறிஞ்சி - தலைவன் கூற்று

58. குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடியவர்: வெள்ளி வீதியார். இவரை பற்றிய செய்திகளைப் பாடல் 27 – இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவிமீது தலைவன் தீராத காதலுடன், தான் செய்யவேண்டிய செயல்களையும் தன் கடமைகளையும் மறந்து எப்பொழுதும் தலைவி நினைவாகவே இருக்கிறான். தலைவனின் தோழன், “நீ இந்தக் காம நோயைப் பொறுத்துக்கொண்டு உன் கடமைகளைச் செய்வதுதான் சிறந்தது.” என்று தலைவனைக் கடிந்துரைக்கிறான். அதற்கு மறுமொழியாகத் தன் நிலைமையைத் தலைவன் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே. 

அருஞ்சொற்பொருள்: இடித்தல் = கண்டித்துரைத்தல்; கேளிர் = நண்பர்; குறை = குற்றம்; நிறுக்கல் = நிறுத்தல்; மன் = மிகுதி; தில்ல = தில்அசைச்சொல், விழைவுக் குறிப்பு; அறை = பாறை; மருங்கு = இடம்; உணங்கல் =  உருகுதல்; பரந்தன்று = பரவியது; நோன்றல் = பொறுத்தல்.

உரை: என்னைக் கண்டித்துரைக்கும் நண்ப! என்னுடைய குறையாக நீ கருதும் என் காமநோயை என்னால் தடுத்து நிறுத்த முடிந்தால் மிகவும் நன்றுதான்அதுவே என் விருப்பமும் ஆகும். கதிரவனின் வெயில் அடிக்கும் நேரத்தில் வெம்மையான பாறையிடத்தே, கையில்லாத ஊமை ஒருவன் கண்ணால் பாதுகாக்க முயலும், உருகிய  வெண்ணெயைப் போல்  இந்த காமநோய் என்னிடம் பரவியுள்ளது. அது பொறுத்துக்கொள்வதற்கு அரிதாக இருக்கின்றது.


விளக்கம்: வெப்பமான பாறையில் வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெய் கதிரவனின் வெப்பத்தால் உருகாமல்  இருப்பதற்குப் பாதுகாவலாக ஒருவன் இருக்கிறான். அவன் இருகைகளும் இல்லாத ஊமன். அவனுக்குக் கைகளிருந்தால் அந்த வெண்ணையை எடுத்து வேறிடத்தில் வைத்து அவனால் பாதுகாக்க முடியும். அவனால் பேச முடிந்தால், பிறரை உதவிக்கு அழைக்கலாம். கைகளும் பேசும் திறமையும் இல்லாததால், பாதுகாவலாக இருப்பவன் உருகும் வெண்ணெயைத் தன் கண்களால் பார்த்துக்கொண்டு செயலற்ற நிலையில் இருக்கிறான். வெண்ணெய் கதிரவனின் வெப்பத்தால் உருகிப் பரவுவதைப் போலத் தலைவனின்  காமநோய் பரவுகிறது.. செயலற்ற நிலையில் வெண்ணையைப் பாதுகாக்க முடியாத கையில்லாத ஊமன் போலத், தலைவன் தன் காமநோயை அடக்கிப் பாதுகாப்பதற்குரிய ஆற்றலும் பிறரிடம் அதை வெளிப்படுத்தக்கூடிய நிலையிலும் இல்லாததால் அவனால் அவனுடைய காமநோயைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

11 comments:

  1. Excellent explanation sir.. Your service is very essential for tamil literature.

    ReplyDelete
  2. Dear Sir,
    Thank you for your comments. Please continue to read and enjoy Kurunthokai and other Tamil literature.
    Regards,
    Prabhakaran

    ReplyDelete
  3. வாழிய நீவிர் வாழிய பல்லாண்டு...

    ReplyDelete
  4. அன்பிற்குரிய பாண்டியன் நெடுஞ்செழியன் அவர்களுக்கு,
    வணக்கம்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி. சங்க காலத்துப் பாண்டியன் நெடுஞ்செழியனே என்னை வாழ்த்தியதாகக் கருதி மகிழ்கிறேன்.
    அன்புடன்,
    பிரபாகரன்

    ReplyDelete
  5. வாழ்த்துகளும் பாராட்டுகளும் ஐயா. அருமையான பணி.

    ReplyDelete
  6. தங்களின் பணி தமிழை மேலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பரப்புதல் என்தை படித்தேன், இலக்கியங்கியங்களை மிகவும் மகிழ்கிறேன் தொகுத்தவர், தொகுப்பித்தவர் என்று அறிஞர்கள் நிறையப்ர் உண்டு அதைப்போல் பரப்பியவர், பரப்புவித்தவர் நிலை தற்போது தேவை அவ்விரண்டையும் தாங்களே செய்கிறீர், நன்றி

    ReplyDelete
  7. அன்பிற்குரிய முருகன் குருசாமி அவர்களுக்கு,
    உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி.
    அன்புடன்,
    பிரபாகரன்

    ReplyDelete
  8. மிகவும் அருமையான விளக்கம் பேராசிரியர் அவர்களே... உங்களுடைய வலைப்பூ பக்கத்தைத் தொடர்ந்து வாசிக்கின்றேன்...
    நன்றி.

    ReplyDelete
  9. மிகவும் அருமையான விளக்கம் பேராசிரியர் அவர்களே... உங்களுடைய வலைப்பூ பக்கத்தைத் தொடர்ந்து வாசிக்கின்றேன்...
    நன்றி.

    ReplyDelete