Sunday, July 12, 2015

54. குறிஞ்சி - தலைவி கூற்று

54. குறிஞ்சி - தலைவி கூற்று

பாடியவர்: மீனெறிதூண்டிலார்.   யானையால் கைவிடப்பட்டு நிமிரும் மூங்கிலுக்கு மீனெறி தூண்டிலை உவமையாகக் கூறிய சிறப்பினால் இச்செய்யுளை இயற்றிய புலவர் மீனெறி தூண்டிலார் என்னும் பெயர் பெற்றார். இவரது இயற்பெயர் தெரியவில்லை.

பாடலின் பின்னணி: தலைவனோடு கூடிக் களவொழுக்கத்தில்  இருந்த பொழுது, ஒருநாள் தலைவி தலைவனோடு கூடி மகிழ்ச்சியாக இருந்தாள்.  அதற்குப் பிறகு, தலைவனைச் சிலகாலமாகக் காணவில்லை. தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளையும் செய்யவில்லை. அவனைக் காணததால் தன்னுடைய மகிழ்ச்சியை இழந்துவிட்டதாகத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

யானே யீண்டை யேனே யென்னலனே
ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலி னிவக்கும்
கானக நாடனொ டாண்டொழிந் தன்றே. 
-
அருஞ்சொற்பொருள்: ஈண்டு = இவ்விடம்; நலன் = இன்பம், அகமகிழ்ச்சி; ஏனல் = தினைப்புனம்; கவண் = கல்லை எறிவதற்குப் பயன்படுத்தப்படும் கருவி; வெரீஇ = அஞ்சி; கானம் = காடு; கழை = மூங்கில்; நிவத்தல் = உயர்தல்; கானகம் = காடு; ஆண்டு = அவ்விடம்.

உரை: தோழி, நான் மட்டும்தான் இங்கே இருக்கிறேன். முன்பு என்னோடு கூடியிருந்த என்னுடைய மகிழ்ச்சி இப்பொழுது இங்கு இல்லை. அஃது, மீன் பிடிப்பவர்கள், மீன் தூண்டிலில் சிக்கியதை உணர்ந்து தூண்டிலை விரைவாக மேலே தூக்குவதைப்போல்  தினைப் புனங் காப்பவர்கள் விடும் கவண்கல்லின் ஒலிக்கு அஞ்சி விரைவாகக்  காட்டு யானை கைவிட்ட பசுமையான மூங்கில் உள்ள காட்டுக்குரிய தலைவனோடு சென்றொழிந்தது.

விளக்கம்: மூங்கிலைத் தின்றுகொண்டிருந்த காட்டுயானை, கவண்கல்லின் ஒலியைக் கேட்டு அங்கிருந்து விரைவாக விலகிச் சென்றது என்றது  ஊராரின் அலரால் தலைவியின் பெண்மை நலத்தைத் துய்த்த தலைவன் அவளை விட்டு வெகு விரைவாக விலகிச் சென்றுவிட்டான் என்பதை உள்ளுறை உவமாகக் குறிக்கிறது.


இப்பாடலில் ஐந்து அடிகளிலும் எதுகை வருவது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment