Sunday, July 12, 2015

52. குறிஞ்சி - தோழி கூற்று

52. குறிஞ்சி - தோழி கூற்று

பாடியவர்: பனம்பாரனார்.  அகத்தியரின் மாணவருள் பனம்பாரனார் என்பவர் ஒருவர். அவர் பனம்பாரம் என்ற இலக்கண நூலை இயற்றியவராகவும்தொல்காப்பியத்துக்குப் பாயிரம் இயற்றியவராகவும் கருதப்படுகிறார். அந்தப் பனம்பாரனாரும் இப்பாடலை இயற்றியவரும் ஒருவர்தானா என்பது ஆய்வுக்குரியது. சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே உள்ளது.

பாடலின் பின்னணி: திருமணத்திற்கான முயற்சிகளைத் தலைவன் செய்வதையும், தலைவியின் பெற்றோர்கள் அதனை ஏற்றுக் கொண்டதையும் அறிந்து மகிழ்ந்த தோழி, தலைவியை நோக்கி, “நீ வருந்துவதை அறிந்த நான், உன் காதலைப் பற்றிய உண்மையை உன் தாய்க்கு  அறிவித்தேன்; அதனால் உன் திருமணம் விரைவில் நடைபெறப்போகிறது.” என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
நிரந்திலங்கு வெண்பல் மடந்தை
பரிந்தனென் அல்லனோ இறையிறை யானே.

அருஞ்சொற்பொருள்: ஆர் = பொருந்திய; களிறு = ஆண் யானை (யானை); திகழ்தல் = விளங்குதல்; சிலம்பு = பக்க மலை; சூர் = தெய்வம்; நசை = விருப்பம்; நரந்தம் =  ஓருவகைப்பூ (நாரத்தை); குவை = திரட்சி; நிரந்துவரிசையாக; பரிதல் = பரிந்து பேசுதல்; இறை = சிறிது; இறையிறை = கொஞ்சம் கொஞ்சமாக (பலமுறை).

உரை: நரந்தம்பூவின் மணம் கமழும் திரண்ட கரிய கூந்தலையும், வரிசையாக விளங்கும் வெண்மையான பற்களையுமுடைய பெண்ணே (தலைவியே)!  யானைகள் மிதித்ததால் உண்டாகிய பள்ளத்தில் தங்கிய நீர் விளங்கும் மலைப் பக்கத்திலுள்ள தெய்வத்தால் விரும்பப்பட்டவளைப் போல் நீ நடுங்கியதை அறிந்து, உன் வருத்தத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத நான் அதை நினைத்து நினைத்துப் பலமுறை உனக்காகப் பரிந்து பேசினேன் அல்லனோ?


விளக்கம்: சூர் நசைந்த அனையாய் நடுங்கல்”  என்பது தெய்வம் ஏறிய பெண்ணின் உடல் நடுங்குவதைக் குறிக்கிறது. இங்கு சூர் என்பது குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகனைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ”தலைவனுக்கும் உனக்கும் திருமணம் நடைபெறாதோ என்று நீ வருந்தி நடுங்கியபொழுதெல்லாம் நானும் வருந்தினேன். உன் காதலைப் பற்றி உன் பெற்றோர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள் உன் திருமணத்திற்குச் சம்மதித்துவிட்டார்கள். உனக்கும் நீ விரும்பும் உன் தலைவனுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். ஆகவே, நீ வருந்தாதே!” என்று தோழி கூறுவதாகத் தோன்றுகிறது

No comments:

Post a Comment