Tuesday, February 9, 2016

150. தலைவி கூற்று

150.  தலைவி கூற்று

பாடியவர்: மாடலூர் கிழார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: இரவுக்குறி நேர்ந்த தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: இரவில் வந்து தலைவியைச் சந்திக்குமாறு தோழி தலைவனிடம் கூறினாள். அதற்குத் தலைவனும் சம்மதித்தான். அந்தச் செய்தியைத் தோழி தலைவிக்குத் தெரிவிக்கிறாள். அதைக் கேட்ட தலைவி,தலைவனுடைய சந்தனம் பூசிய மார்பை நினைத்தால் என்னுடைய காமநோய் பெருகுகிறது. ஆனால், அவனைத் தழுவினால் அந்த நோய் மறைந்துவிடுகிறது. இது வியப்பாக இருக்கிறதே!” என்று கூறித் தலைவனை இரவில் சந்திப்பதற்குத் தன் சம்மதத்தைத் தோழிக்குத் தெரிவிக்கிறாள்.

சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம்
உள்ளின் உண்ணோய் மல்கும்
புல்லின் மாய்வ தெவன்கொல் அன்னாய்

கொண்டு கூட்டு: அன்னாய்! சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி வான மீனின் வயின்வயின் இமைக்கும்ஓங்குமலை நாடன் சாந்துபுலர் அகலம் உள்ளின் உள்நோய் மல்கும்.  புல்லின் மாய்வது எவன்கொல்

அருஞ்சொற்பொருள்: சேணோன் = உயரத்தில் இருப்பவன் (பரணில் இருப்பவன்); நறுமை = மணம்; ஞெகிழி = கொள்ளி; வயின் = இடம்; வயின்வயின் = இடந்தோறும்; ஓங்கல் = உயர்ச்சி; புலர்தல் = உலர்தல்; அகலம் = மார்பு; மல்குதல் = பெருகுதல்; மாய்தல் = மறைதல்; கொல்அசைச்சொல்.

உரை: தோழி! மரத்தின் உச்சியில், பரணின் மீது இருக்கும் குறவன் கொளுத்திய நல்ல மணமுள்ள புகையையுடைய கொள்ளியானது, வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போல,  இடந்தோறும் ஒளியை வீசும், உயர்ந்த மலை நாட்டையுடைய தலைவனது, சந்தனம் பூசிய மார்பினை, நினைத்தால் என் உள்ளத்தில் காமநோய் பெருகும்.  அவன் மார்பைத் தழுவினால், அந்த நோய் மறைந்துவிடுகிறது. இது வியப்பாக உள்ளதே!


சிறப்புக் குறிப்பு: தினைப்புனத்தைக் காக்கும் குறவர் தம்மைக் கொடிய விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, பரண்மீது ஏறிநின்று கொள்ளியைக் கொளுத்துவது வழக்கம்

No comments:

Post a Comment