Sunday, February 21, 2016

158. தலைவி கூற்று

158. தலைவி கூற்று

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 15 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தலைமகன் இரவுக்குறி வந்துழி, அவன் கேட்பத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் இரவில் வந்து தலைவியைச் சந்தித்துப் பழகிவருகிறான். ஒருநாள் அவன் இரவில் வரும்பொழுது பெரியமழை பெய்தது. அந்த மழையினால் அவன் வருகைக்குத் தடை ஏதும் ஏற்படுமோ என்று தலைவி வருந்துகிறாள்அவன் வந்ததை அறிந்த தலைவி, அவன் காதில் கேட்குமாறு, மழையே!  நீ இமயத்தையே அசைக்கும் இடி முழக்கத்தோடு பெருமழை பெய்து, துணைவரைப் பிரிந்திருக்கும் பெண்டிரை வருத்துகிறாயே! உனக்கு இரக்கம் இல்லையா?” என்று கேட்கிறாள். 


நெடுவரை மருங்கிற் பாம்புபட இடிக்கும்
கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ்சூல் மாமழை
ஆரளி யிலையோ நீயே பேரிசை
இமயமும் துளக்கும் பண்பினை
துணையிலர் அளியர் பெண்டிர் இஃதெவனோ. 

கொண்டு கூட்டு: நெடுவரை மருங்கில் பாம்புபட இடிக்கும் கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇ, காலொடு வந்த கமம் சூல் மாமழை! ஆர் அளி இலையோ?  நீ பேரிசை இமயமும் துளக்கும் பண்பினை;  பெண்டிர் துணையிலர்; அளியர். இஃது எவனோ?

அருஞ்சொற்பொருள்: வரை = மலை; மருங்கு = பக்கம்; பட = இறந்து பட; விசை = வேகம்; கடுவிசை = மிகுந்த வேகம்; உரும் = இடி; கழறுதல் = இடித்தல்; அளைஇ = கலந்து; கால் = காற்று; கமம் = நிறை, சூல் = கருப்பம்; மாமழை = பெரிய மழை; ஆர்தல் = பொருந்துதல்; அளி = இரக்கம்; இசை = புகழ்;  துளக்கும் = அசைக்கும்; அளியர் = இரங்கத் தக்கவர்கள்.

உரை: உயர்ந்த மலைப்பக்கத்திலுள்ள பாம்புகள் இறக்கும்படி இடிக்கின்ற மிகுந்த  வேகத்தையுடைய இடியின் முழக்கத்தோடு கலந்து, காற்றோடு வந்த,  நிறைந்த நீரைக் கருவாகக் கொண்ட பெரிய மழையே!  இயல்பாகவே உன்னிடம் உள்ள மிகுந்த இரக்கம் இப்பொழுது உன்னிடம் இல்லையோ?  நீ, பெரிய புகழையுடைய இமயமலையையும் அசைக்கும் தன்மையை உடையாய். தங்கள் துணைவரைப் பிரிந்திருக்கும் மகளிர் உன்னைக் கண்டு அஞ்சுகிறார்கள். அவர்கள் இரங்கத் தக்கவர்கள்; அங்ஙனம் இருப்ப, இவ்வாறு நீ அவர்களை வருத்துவது  ஏன்?


சிறப்புக் குறிப்பு: பெருமழையினால் தலைவன் துன்புறுவானோ என்றும் அதனால் அவன் வருவானோ வரமாட்டானோ என்றும் அஞ்சிய தலைவி தான் அஞ்சியதைத் தலைவனுக்கு உணர்த்துகிறாள். அது மட்டுமல்லாமல், தன் மெல்லியல்பால், தானும் இந்தப் பெருமழையினால் அஞ்சியதையும் தலைவனுக்குத் தெரிவிக்கிறாள். இவ்வாறு இடி, மழை போன்றவற்றைக் கண்டு அஞ்சித் துணையில்லாமல் வாழ்வதைவிடத், தலைவனைத் திருமணம் செய்துகொண்டு வாழவதையே அவள் விரும்புவதையும் தலைவனுக்கு மறைமுகமாகக் கூறுகிறாள்.

No comments:

Post a Comment