Tuesday, February 9, 2016

145. தலைவி கூற்று

145. தலைவி கூற்று

பாடியவர்: கொல்லனழிசியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடலில் 26-இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: வரைவிடை ஆற்றாது தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவினால் துன்பமுற்ற தலைவி உறங்க முடியாமல் தவிக்கிறாள். தலைவி தோழியை நோக்கி, என் துன்பத்தை அறியாமல் நன்கு உறங்குகின்ற மக்கள் வாழும் இச்சிற்றூரில் என்னால் இனிமேல் வாழ முடியாது,” என்று கூறுகிறாள்.

உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி
கானலஞ் சேர்ப்பன் கொடுமை எற்றி
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள்
துஞ்சா துறைநரொ டுசாவாத்
துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே. 

கொண்டு கூட்டு: இத்துறைகெழு சிறுகுடி  கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றி,  ஆனாத் துயரமொடு வருந்திப் பால்நாள் துஞ்சாது உறைநரொடு உசாவாத் துயிற்கண் மாக்களொடு நெடு இரா உடைத்து.  உறைபதி அன்று.

அருஞ்சொற்பொருள்: உறைதல் = வாழ்தல்; பதி = இடம்; துறை = கடற்றுறை; சிறுகுடி = சிற்றூர்; கானல் = கடற்கரைச் சோலை; அம்  - சாரியை; சேர்ப்பன் = நெய்தல்நிலத் தலைவன்; எற்றி = நினைத்து; ஆனா = குறையாத; பால்நாள் = நள்ளிரவு; துஞ்சாது = தூங்காமல்; உசாவுதல் = வினவுதல்; துயில் = உறக்கம்; மாக்கள் = அறிவற்றவர்கள்; நெடு = நீண்ட; இரா = இரவு.

உரை:, இந்தக் கடற்றுறையை உடைய சிற்றூர், கடற்கரைச் சோலையையுடைய நெய்தல்நிலத் தலைவன் செய்த  கொடுமையை நினைத்து, மிகுந்த துன்பத்தோடு, துயரமுற்று, நள்ளிரவில், தூங்காமல் இருப்பவர்களை,  ”ஏன்?” என்றுகூடக் கேட்டு ஆறுதல் கூறாது, உறக்கத்தோடுகூடிய கண்களையுடைய அறிவற்றவர்களையும் நீண்ட இரவையும் உடையது. ஆதலால், இது நாம் தங்கியிருத்தற்குரிய ஊர் அன்று.


சிறப்புக் குறிப்பு: இப்பாடலுக்கு மற்றொரு விதமாகவும் பொருள் கொள்ளலாம். தலைவி வருத்தத்தோடு உறங்காமல் இருக்கிறாள். அவள் தோழி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள். தன்னைப் பற்றிக் கவலைப் படாமல், தோழி உறங்குவதைக் கண்ட தலைவி சினமுற்றாள். அதனால், நேரடியாகத் தோழியைத் திட்டாமல், மறைமுகமாக, ஊர்மக்களைத் திட்டுவதுபோல், “மாக்கள்என்று தோழியைக் குறிப்பிடுகிறாள்.

No comments:

Post a Comment