Saturday, January 16, 2016

144. செவிலித்தாய் கூற்று

144.  செவிலித்தாய் கூற்று

பாடியவர்: மதுரை ஆசிரியர் கோடன் கொற்றனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.
கூற்று விளக்கம்:  தலைவனுக்குத் தலைவியைத் திருமணம் செய்விக்க அவளுடைய பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. ஆகவே, தலைவனும் தலைவியும் ஊரைவிட்டுச் சென்றுவிட்டனர்(உடன்போக்கு). அதனால் வருத்தமடைந்த செவிலித்தாய், தலைவி எப்பொழுதும் தன் தோழிகளுடன் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தாள். அத்தகையவள், இப்பொழுது தன் பாதங்களை வருத்தும் பாலைநிலத்தில் எங்களைவிட்டுப் பிரிந்து சென்றாளே!” என்று கூறித் தன் வருத்தத்தை வெளிப்படுத்துகிறாள்.

கழிய காவி குற்றும் கடல
வெண்டலைப் புணரி யாடியும் நன்றே
பிரிவி லாய முரியதொன் றயர
இவ்வழிப் படுதலும் ஒல்லாள் அவ்வழிப்
பரல்பாழ் படுப்பச் சென்றனள் மாதோ
சென்மழை தவழும் சென்னி
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே.

கொண்டு கூட்டு: கழிய காவி குற்றும், கடல வெண்தலைப் புணரி ஆடியும், பிரிவில் ஆயம் உரியது ஒன்று நன்று அயரஇவ்வழிப் படுதலும் ஒல்லாள்செல்மழை தவழும் சென்னி விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டு, அவ்வழிப் பரல்பாழ் படுப்பச் சென்றனள்! மாதோ

அருஞ்சொற்பொருள்: கழி = உப்பங்கழி; காவி = ஓருமலர் ( கருநொச்சி, செங்கழுநீர்); குற்றுதல் = பறித்தல்; புணரி = அலை; நன்று = பெருமை, பெரிது (மிக); ஆயம் = தோழியர் கூட்டம்; அயர்தல் = விளையாடுதல்; இவ்வழி = இந்த வழி; படுதல் = பொருந்துதல்; ஒல்லுதல் = உடன்படுதல்; சென்னி = உச்சி; பிறங்கல் = கற்பாறை (மலை); விலங்குதல் = குறுக்கிடுதல்; அவ்வழி = அந்த இடம்; பரல் = பருக்கைக்கற்கள்; படுப்ப = வருத்த; மாதோ = மாது+ (மாது, ஓ அசைச்சொற்கள்).


உரை: உப்பங்கழியில் மலர்ந்த காவிமலர்களைப் பறித்து, கடலின் வெண்ணிறமான அலைகளில் நீராடி,  என்றும் தன்னைவிட்டுப் பிரியாத தோழியர்களோடு தமக்குரிய விளையாட்டுக்களை நன்று விளையாடிக்கொண்டு,  இங்கு இருப்பதற்கு உடன்படாமல், விரைந்து செல்லும் மேகங்கள் தவழ்கின்ற உச்சியையுடைய, வானத்தளவு உயர்ந்து விளங்குகின்ற மலைகள் குறுக்கிடும் நாட்டில், அப்பாலை நிலத்தில், பருக்கைக்கற்கள் தன் பாதங்களின் அழகைச் சிதைக்கும் வண்ணம் தலைவி சென்றாள்.

No comments:

Post a Comment