131. தலைவன்
கூற்று
பாடியவர்: ஒரேருழவனார். இவர்
இயற்பெயர் தெரியவில்லை. இவர் இப்பாடலில், “ஓரேர் உழவன் போல ” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி இருப்பதால் இவர் ஓரேருழவர் என்று பெயர் பெற்றதாகக்
கருதப்படுகிறது. இவர் குறுந்தொகையில் உள்ள இந்த ஒருபாடலும்
(131) புறநானூற்றில் ஒரு பாடலும் (193) இயற்றியுள்ளார்.
திணை: பாலை.
கூற்று: வினைமுற்றிய தலைமகன் பருவவரவின்கட் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரிந்து அவளிருக்கும் ஊரிலிருந்து வெகு தூரத்தில் உள்ள ஊரில் வாழ்ந்துவந்தான். அவன் திரும்பிச் செல்லவேண்டிய பருவம் வந்தது.
அவள் வெகுதூரத்தில் இருப்பதால் உடனே சென்று அவளைக் காண முடியாது. ஆனால், அவன் நெஞ்சம், ஒரே ஒருஏர் வைத்துள்ள உழவன் நிலத்தின் ஈரம் காய்வதற்குமுன் தன் நிலத்தை உழுது முடிப்பதற்காக விரைவாக உழுவது போல் விரைந்து செல்ல நினைப்பதாகத் தலைவன் கூறுகிறான்.
ஆடமை
புரையும் வனப்பிற் பணைத்தோள்
பேரமர்க் கண்ணி யிருந்த ஊரே
நெடுஞ்சேண் ஆரிடை யதுவே நெஞ்சே
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓரேர் உழவன் போலப்
பெருவிதுப் புற்றன்றால் நோகோ யானே.
பேரமர்க் கண்ணி யிருந்த ஊரே
நெடுஞ்சேண் ஆரிடை யதுவே நெஞ்சே
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓரேர் உழவன் போலப்
பெருவிதுப் புற்றன்றால் நோகோ யானே.
கொண்டுகூட்டு: ஆடு
அமை புரையும் வனப்பிற் பணைத்தோள் பேர் அமர்க் கண்ணி இருந்த ஊர் நெடுஞ்சேண் ஆர் இடையது; நெஞ்சே ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து ஓரேர் உழவன் போலப் பெரு விதுப்பு உற்றன்று. யான் நோகோ!
அருஞ்சொற்பொருள்: அமை = மூங்கில்; புரைதல் = ஒத்தல்;
வனப்பு = அழகு; பணைத்தல்
= பருத்தல்; அமர் = போர்;
கண்ணி = கண்களை உடையவள்; சேண் = சேய்மை (தூரம்)
; ஆர் இடை= அரிய வழி; செவ்வி
= ஏற்ற சமயம்; பை = பசுமை;
புனம் = நிலம்; ஓரேர்
= ஒரு ஏர்; விதுப்பு = விரைவு;
நோகு = வருந்துவேன்.
உரை: அசைகின்ற மூங்கிலைப் போன்ற அழகையும், பருத்த
தோளையும், பெரிய போர்புரியும் கண்களையும் உடைய தலைவி இருக்கும் ஊர், நெடுந்தூரத்தில், அடைதற்கரிய இடத்தில் உள்ளது; எனது நெஞ்சம், ஈரத்துடன்
உழுவதற்கு ஏற்ற பக்குவத்தில் உள்ள பசுமையான நிலத்தையுடைய ஒற்றை ஏரையுடைய உழவனைப்போல, மிகவும் விரைகிறது. அதனால் நான் வருந்துகிறேன்.
சிறப்புக் குறிப்பு ஓரேருழவன், ஈரம் வீணாகாமல் நிலத்தை உழுவதற்கு விரைவதைப் போல என் நெஞ்சம் தலைவியை உரிய பருவத்தே கண்டு அளவளாவ விரைகின்றது என்று தலைவன்
கூறுகிறான். பல ஏர்களையுடையவன் மற்றவர்களின் உதவியோடு குறுகிய காலத்தில்
தன் நிலத்தை உழுதுவிடக்கூடும்; ஓரேருழவனோ அவனிடம் உள்ள ஒரே ஒரு ஏரைக் கொண்டே ஈரம் வீணாகாமல் உழவேண்டி
இருப்பதால் வேகமாக உழுவான்.
ஓரேருழவனென்றது ஓரேரும் அதனால் உழப்படும் சிறு நிலமும் உடையவனைக் குறித்தது.
No comments:
Post a Comment