129.
தலைவன் கூற்று
பாடியவர்: கோப்பெருஞ்சோழன். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 20 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
திணை: குறிஞ்சி.
கூற்று: தலைமகன்
பாங்கற்கு உரைத்தது.
கூற்று
விளக்கம்: தலைவன் வருத்தமாக இருந்தான். அதைக் கண்ட தோழன், “உனக்கு என்ன ஆயிற்று? ஏன் வருத்தமாக இருக்கிறாய்?”,
என்று தலைவனைக் கேட்கிறன். இப்பாடல் தலைவனின் மறுமொழியாக
அமைந்துள்ளது.
எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ கேளா யத்தை
மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்
புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே.
கொண்டு
கூட்டு:
எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப! புலவர் தோழ! கேளாய்! மாக்கடல் நடுவண்,
எண்ணாட் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்கு, கதுப்பயல் விளங்கும் சிறுநுதல், புதுக்கோள்
யானையிற் பிணித்தற்றால் எம்மே.
அருஞ்சொற்பொருள்: எலுவன் = தோழன்; ஏமம் = பாதுகாவல்,
ஆதரவு; அத்தை - முன்னிலை அசைச்சொல்; மா
= கரிய; நடுவண் = நடுவில்;
எண்ணாள் = முழுநிலவு அல்லது அமாவசைக்கு எட்டாம்
நாள் (அட்டமி); பக்கம் - இது வடமொழியில் பட்சம் அல்லது திதி என்று கூறப்படுகிறது.
பசு = இளமை; கதுப்பு
= கூந்தல்; நுதல் = நெற்றி;
புதுக்கோள் யானை = புதிதாகக் காட்டிலிருந்து பிடிக்கப்பட்ட
யானை; பிணித்தல் = கட்டுதல்.
உரை: தோழா! இளைஞர்களுக்கு ஆதரவளிக்கும் நண்பா! அறிஞர்களின் தோழா!
நான் சொல்லுவதைக் கேட்பாயாக! கரிய கடலின் நடுவே,
எட்டாம் நாள் பக்கத்தில், இளமையான பிறைமதி தோன்றியதைப் போல்,
ஒருபெண்ணின் கூந்தலுக்கு அருகில் விளங்கும் சிறிய நெற்றி, புதிதாகப் பிடிக்கப்பட்ட யானையைப் போல் என்னைக் கட்டிப் போட்டுவிட்டது.
சிறப்புக்
குறிப்பு: இங்கு கூந்தலுக்குக் கடலும் நெற்றிக்குத்
திங்களும் உவமைகள். காட்டில் யானையைப் பிடிப்பவர்கள்,
யானை குழிக்குள்ளே சிக்கிக் கொண்டதும் அது தம் பிடியிலிருந்து தப்பிப்
போகாதவாறு கட்டிப்போடுவர். அதனால், அந்த
யானை தன் வலிமையும் ஆற்றலும் இழந்து கட்டுப்பட்டுக் கிடக்கும். அதுபோல், தலைவியின் நெற்றி தலைவனைத் தன்பால் பிணித்தது.
No comments:
Post a Comment