Saturday, January 16, 2016

136. தலைவன் கூற்று

136. தலைவன் கூற்று

பாடியவர்: மிளைப்பெருங் கந்தனார்.   இவர் குறுந்தொகையில் மூன்று பாடல்கள் (136, 204, 234) இயற்றியுள்ளார்.
 திணை: குறிஞ்சி.
கூற்று: தலைமகன் பாங்கற்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியின் நினைவாகவே இருக்கிறான். அவன் தன்னை மறந்து ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதைக் கண்ட தோழன், “ நீ ஏன் இவ்வாறு உன் காதலியின் நினைவாகவே இருக்கிறாய்? காமம் உன்னை மிகவும் வருத்துகிறது என்று எண்ணுகிறேன்.” என்று கூறுகிறான். இவ்வாறு கூறிய தோழனுக்குத் தலைவன் காமத்தைப் பற்றிய தன் கருத்தைக் கூறுகிறான்.

காமங் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலும் இன்றே யானை
குளகுமென் றாள்மதம் போலப்
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே. 

கொண்டுகூட்டு:
காமங் காமம் என்ப; காமம் அணங்கும் பிணியும் அன்றே! நுணங்கித்
தணிதலும் கடுத்தலும் இன்றே! யானை குளகுமென்று ஆளும் மதம் போல, அது  காணுநர்ப் பெறின், பாணியும் உடைத்தது.

அருஞ்சொற்பொருள்: அணங்குதல் = வருத்துதல்; நுணங்கி = சிறியதாகி (நுண்ணியதாகி); கடுத்தல் = மிகுதல்; தணிதல் = குறைதல்; குளகு = தழை உணவு; பாணி = தக்க சமயம்.

உரை:  காமம் காமம் என்று உலகோர்  அதை  இழிவானதைப்போல் குறை கூறுவர்.  அக் காமமானது, பிறர் நம்மை வருத்துவதால் வருவது அன்று; அது ஒரு நோயும் அன்று. அது நுண்ணியதாகக் குறைதலும் பின்னர் மிகுவதும் இன்று. யானை தழை உணவை மென்று தின்று அதனால் மதம் கொண்டதைப் போல், இக் காமமும் கண்டு மகிழ்வதற்கு உரியவரைக் காணப்பெற்றால் அக்காட்சியால் அது தானாகவே வெளிப்படும் காலமும் உண்டு.  

சிறப்புக் குறிப்பு: யானைக்கு எப்பொழுது மதம் பிடிக்கும் என்று கூற முடியாது. தழை உணவைத் தின்றுகொண்டிருந்த யானைக்குத் திடீரென்று  மதம் பிடித்ததைப்போல், காணவேண்டியவரைக் கண்டால் காம உணர்வு தானாகவே வரும் என்பது இப்பாடலில் உள்ள கருத்து.

சில இலைகளை உண்டால் யானைக்கு மதம் பிடிக்கும் என்றும் கூறுவர். குளகு என்பது அத்தகைய ஒரு இலையைக் குறிப்பதாகவும் இருக்கலாம். ஆகவே, அத்தகைய இலைகளை உண்டால் மதம் பிடிப்பதைப் போல், காணவேண்டியரைக் கண்டால் காம உணர்வு தோன்றும் என்றும் பொருள் கொள்ளலாம்.

No comments:

Post a Comment