Saturday, January 16, 2016

143. தோழி கூற்று

143. தோழி கூற்று

பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 78 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவிடை வைத்துப் பிரிந்தவிடத்துத் தலைமகட்குத் தோழிகூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்குச் சென்றிருக்கிறான். அவனுடைய பிரிவினால் தலைவி வருந்துகிறாள். வருத்தத்தால் அவள் உடலில் பசலை படர்ந்தது. இவ்வுலகில் நிலையில்லாமை ஒன்றுதான் திலைத்து நிற்பது. உதாரணமாக, ஒப்புரவு மனப்பன்மையோடு பிறருக்கு உதவி செய்பவனின் செல்வம் குறைந்து போகக்கூடியது. அதுபோல் உன்னுடைய பசலை நோயும் விரைவில் மறைந்துவிடும். உன் தலைவர் விரைவில் வந்துவிடுவார் என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.  

அழிய லாயிழை அன்பு பெரிதுடையன்
பழியும் அஞ்சும் பயமலை நாடன்
நில்லா மையே நிலையிற் றாகலின்
நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்
கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத்
தங்குதற் குரிய தன்றுநின்
அங்கலுழ் மேனிப் பாய பசப்பே. 
-
கொண்டு கூட்டு: ஆயிழை! பயமலை நாடன் அன்பு பெரிது உடையன்பழியும் அஞ்சும். நில்லாமையே நிலையிற்று ஆகலின்நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்
கடப்பாட்டாளன் உடைப்பொருள் போலநின் அம் கலுழ் மேனிப் பாஅய பசப்பே
தங்குதற்கு உரியது அன்று! அழியல்!

அருஞ்சொற்பொருள்: அழியல் = வருந்தாதே; ஆயிழை = தெரிந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவள் (பெண்); பயமலை = பயனுடைய மலை; இசை = புகழ்; வேட்ட = விரும்பிய; நயன் = ஈரம், அன்பு; கடப்பாடு = கடமை; கடப்பாட்டாளன் = ஒப்புரவாளன்; கலுழ்தல் = நிரம்பி வழிதல்; அம் = அழகிய; பாஅய = படர்ந்த.

உரை: தெரிந்து அணிந்த அணிகலன்களை அணிந்தவளே!  பயன்தரும் மலைநாட்டுக்குத் தலைவன், மிகுந்த அன்புடையவன்; பழிக்கு அஞ்சுபவன்.  நிலையில்லாமை ஒன்றுதான் இவ்வுலகத்தில் நிலைத்து நிற்பதாகும். அதனால்,  நிலைத்து நிற்கும் நல்ல புகழை விரும்பிய, அன்புடன்கூடிய நெஞ்சையுடைய, ஒப்புரவாளன் பெற்ற செல்வத்தைப் போல உன்னுடைய  அழகு ஒழுகும் உடம்பில் படர்ந்த பசலை, நிலையாகத் தங்காமல் மறைந்துவிடும். ஆகவே, நீ வருந்தாதே.

சிறப்புக் குறிப்பு:  உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் நிலையற்றவைதான். ஆனால்புகழ் மட்டும்  நிலைத்து நிற்கக் கூடியதாதலால், ஒப்புரவாளர்கள் அதனை விரும்புவர்.

            ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
            பொன்றாது நிற்பதொன்று இல்.                (குறள் – 233)


என்னும் குறள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

No comments:

Post a Comment