138. தோழி
கூற்று
பாடியவர்:
கொல்லன் அழிசி. இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 26-இல் காணலாம்.
திணை: மருதம்.
திணை: மருதம்.
கூற்று: -1: குறிபிழைத்த தலைமகன், பிற்றை ஞான்று இரவுக்குறி வந்துழித் தோழி, சிறைப்புறமாகக் கூறியது.
கூற்று – 2: இரவுக்குறி நேர்ந்ததூஉமாம்.
கூற்று விளக்கம் - 1: முதல்நாள் இரவு தலைவன் தலைவியைச் சந்திப்பதற்கு வந்தான். ஆனால், ஏதோ காரணத்தால், அவளைச் சந்திக்க முடியவில்லை. இன்று தலைவன் மீண்டும் வந்திருப்பதை அறிந்த தோழி, அவன் காதில் கேட்குமாறு, “நேற்று இரவு தலைவர் வருவார் என்று எதிர்பார்த்து நாங்கள் தூங்காமல் இருந்தோம்.” என்று கூறுகிறாள்.
கூற்று விளக்கம் - 2: பகலில் தலைவியைச் சந்திப்பதில் சில் சங்கடங்கள் இருந்தன. ஆகவே தலைவன், ”இரவில் வந்தால் சந்திக்க முடியுமா?” என்று கேட்கிறான். அதற்குத் தோழி, “ ஊரில் உள்ளவர்கள் அனைவரும் தூங்கினாலும் நாங்கள் தூங்கமாட்டோம்” என்று கூறுகிறாள்.
கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
எம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
அணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.
கொண்டுகூட்டு: எம்மில் அயலது ஏழில் உம்பர், மயிலடி இலைய மாக்குரல்
நொச்சி அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த மணிமருள் பூவின் பாடு நனிகேட்டு கொன் ஊர் துஞ்சினும்,
யாம் துஞ்சலம்!
அருஞ்சொற்பொருள்: கொன் = பெருமை; துஞ்சுதல் = ஆழ்ந்து உறங்குதல்;
ஏழில் – ஒரு குன்றின் பெயர்;
உம்பர் = மேலே; மா = கரிய; குரல் = கொத்து; அணி = அழகு; மணி = நீலமணி; மருள் = உவமை உருபு (போன்ற); பாடு = ஓசை; நனி = மிகவும்.
உரை: எமது வீட்டின் அருகில் ஏழில் குன்றம் உள்ளது. அதன் மேலே, மயிலின் அடியைப் போன்ற இலைகளையும், கரிய பூங்கொத்தையும் உடைய நொச்சி மரம் உள்ளது. அந்த மரத்தின் அழகு மிகுந்த மெல்லிய கொம்புகளிலிருந்து உதிரும், நீலமணி போன்ற மலர்கள்
உதிரும் ஓசையை மிகவும் கேட்டும், இந்தப் பெரிய ஊரில்
உள்ளவர்கள் உறங்கினாலும்,
நாங்கள் உறங்கமாட்டோம்.
சிறப்புக் குறிப்பு: இந்தப்
பாடலில்,
தோழி கூறுவதற்கு இரண்டு விதமாக விளக்கம் அளிக்கலாம்.
முதற் கருத்து: தலைவன் அருகில் இருப்பதை அறிந்த தோழி, “
நேற்றிரவு நாம் தூங்காமல் தலைவரின் வரவை எதிர்பார்த்துக்
காத்திருந்தோம்.
அந்த நேரத்தில் ஊர்மக்கள்
அனைவரும் தூங்கினர். வீட்டுக்கு அருகிலுள்ள ஏழிற் குன்றத்தின்மேல வளர்ந்த நொச்சியின் மலர் உதிரும் ஓசையும் நம்முடைய காதில் விழுந்தது. தலைவர் வந்தால் நாம் அவர் வரவை நன்கு அறிந்திருப்போம். அவர் நேற்று இரவு வரவில்லை.” என்று கூறுகிறாள்.
இரண்டாவது கருத்து: “இரவு
நேரத்தில் நாம் தூங்காமல்தான் இருக்கிறோம். ஊரில் உள்ள மக்கள் அனைவரும்
தூங்கினாலும் நாம் தூங்குவது இல்லை. நள்ளிரவில் நொச்சிப்பூக்கள்
உதிரும் மெல்லிய ஓசைகூட நம் காதுகளில் விழுகின்றது. ஆகவே,
இரவு நேரத்தில் தலைவர் வந்தால் உன்னைச் சந்திக்கலாம்.” என்று தோழி தலைவியிடம் கூறுவதாகவும் கருதலாம்.
அருமை. மிக அழகான விளக்கம். பாடல் படிப்பதற்கு கடினமாக இருக்கிறது. ஆனால் பொருள் உணரும் போது அது இனிமையாக இருக்கிறது.
ReplyDelete