130.
தோழி கூற்று
பாடியவர்: வெள்ளி
வீதியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 27 – இல் காணலாம்.
திணை: பாலை.
திணை: பாலை.
கூற்று – 1: பிரிவிடை
அழிந்த
(வருந்திய) தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
”நீ அவர் பிரிந்தரென்று ஆற்றாயாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூதுவிட்டுக் கொணர்வேன். நின்
ஆற்றாமை நீங்குக”, எனத் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.
கூற்று – 2: தோழி
தூது விடுவாளாகத் தலைமகள் தனது ஆற்றாமையாற் கூறியதூஉமாம்.
கூற்று
விளக்கம்:
தலைவன்
தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான். தலைவி பிரிவினால் வருந்துகிறாள்.
“நான் தூதுவனை விட்டு அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து,
அவரை இங்கு கொண்டுவந்துவிடுவேன். நீ வருந்தாதே”,
என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுவதாக இப்பாடலைக் கருதலாம். தலைவியின் வருத்தத்தைக் கண்ட தோழி, தூதுவனை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யும்பொழுது
அவளுக்குத் தலைவி கூறியதாகவும் இப்பாடலை எண்ணிப் பார்க்கலாம்.
நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காதலோரே.
கொண்டு கூட்டு: நம்
காதலோர் நிலந்தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்; விலங்கு இரு
முந்நீர் காலிற் செல்லார்; நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் குடிமுறை
குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோ?
கெடுநரும் உளரோ?
அருஞ்சொற்பொருள்: தொடுதல் = தோண்டுதல்; விலங்கு = குறுக்காக;
இரு = பெரிய; முந்நீர்
= கடல்; குடி = வீடு;
தேர்தல் = ஆராய்தல் (தேடுதல்);
கெடுதல் = காணமற் போதல்.
உரை: தோழி! நம் தலைவர் நிலத்தைத்
தோண்டி அதனுள்ளே புகுந்திருக்க மாட்டார்; வானத்தில் ஏறி மேலே
சென்றிருக்க மாட்டார்; நிலத்தின் குறுக்கே உள்ள பெரிய கடலில்
காலால் நடந்து சென்றிருக்க மாட்டார். அவரை ஒவ்வொரு நாடாக,
அதிலுள்ள ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு வீடாக முறையாகத்
தேடினால் காணாமல் (கிடைக்காமல்) போய்விடுவாரா?
சிறப்புக்
குறிப்பு: ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் ஆகிய மூன்றும் கலந்திருப்பதால்
கடல் நீர் முந்நீர் என்று அழைக்கப்பட்டது.
இச்செய்யுளைப்
பாடிய வெள்ளி வீதியார் தம்முடைய கணவனைத் தேடித் திரிந்ததாக அகநானூற்றுப் பாடல்கள் 147 மற்றும் 45 ஆகியவற்றிலிருந்து தெரியவருகிறது.
No comments:
Post a Comment