Saturday, January 16, 2016

137. தலைவன் கூற்று

137. தலைவன் கூற்று

பாடியவர்:
பாலை பாடிய பெருங் கடுங்கோ. இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 16-இல் காணலாம்.
திணை:
பாலை.
கூற்று: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சம் உரைத்தது.
கூற்று விளக்கம்: ஒருநாள் தலைவியை இயற்கையாகத் தலைவன் சந்தித்தான். இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் காதலிக்க ஆரம்பித்தார்கள். பின்னர், ஒருநாள் தலைவன் தலைவியை நோக்கி, “ நான் உன்னைவிட்டு எப்பொழுதும் பிரிய மாட்டேன்.” என்று கூறினான். அப்பொழுதுதான் தலைவி பிரிவு என்ற ஒன்று இருப்பதாக உணர்ந்தாள்.


மெல்லியல் அரிவைநின் னல்லகம் புலம்ப
நிற்றுறந் தமைகுவெ னாயின் எற்றுறந்
திரவலர் வாரா வைகல்
பலவா குகயான் செலவுறு தகவே. 

கொண்டுகூட்டு:
மெல்லியல் அரிவை! நின் நல்லகம்  புலம்ப நின் துறந்து அமைகுவெனாயின், யான் செலவுறு தகவு என் துறந்து இரவலர் வாரா வைகல் பல ஆகுக!

அருஞ்சொற்பொருள்: மெல்லியல் = மென்மையான சாயல்; அரிவை = பெண்; அகம் = நெஞ்சம்; துறந்து = பிரிந்து; வைகல் = நாள்; தகவு = குணம் ( தன்மை) ; செலவுறு தகவு = பிரிய நினைத்த தன்மை.

உரை: மென்மைத் தன்மையையுடைய பெண்ணேஉன்னுடைய நல்ல நெஞ்சம் தனிமையால் வருந்த, உன்னைப் பிரிந்து சென்று, சென்ற இடத்தே மனம் பொருந்தி இருப்பேனாயின், நான் அங்ஙனம் பிரிந்து சென்றதால், என்னிடம் இரப்போர் வாராத நாட்கள் பல வாகுக!

சிறப்புக் குறிப்பு: பிரிவுத்துன்பத்தைத் தாங்க முடியாதவள் என்பதால் அவளைமெல்லியல் அரிவைஎன்றான். அவளோடு பழகியதால் அவளுடைய நல்ல உள்ளத்தை அவன் அறிந்திருந்தான். ஆகவே, “ நின் நல் அகம்என்றான்இரப்பார்க்கு ஈவது மிகவும் சிறந்த அறச்செயலாக சங்க காலத்தில் கருதப்பட்டது. தலைவியைப் பிரிந்தால் இரப்பவர்கள் அவனிடம் வராமல் இருப்பார்கள். ஆகவே, அவளைப் பிரிந்தால் ஈகையாகிய அறச் செயலைச் செய்யும் வாய்ப்பை தான் இழந்து விடுவதாகத் தலைவன் கருதினான். அதனால், அவளைப் பிரிய மட்டேன் என்று அவன் சூளுரைக்கிறான்.


பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னன், தான் போரில் வெற்றிபெறாவிட்டால், ”என்னால் காப்பாற்றபடுபவர் துயரம் மிகுந்து என்னிடம் இரக்கும்பொழுது அவர்கட்கு ஈகை செய்ய இயலாத வறுமையை நான் அடைவேனாகுகஎன்று சூளுரைத்ததாகப் புறனூற்றுப் பாடல் 71 –இல் கூறப்பட்டிருப்பது இங்கு நினைவுகூரத் தக்கது.

No comments:

Post a Comment