135. தோழி
கூற்று
பாடியவர்: பாலைபாடிய பெருங் கடுங்கோ. இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 16 –இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: தலைவன் பிரியுமென வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து செல்ல எண்ணிக்கொண்டிருக்கிறான். அதை அறிந்த தலைவி வரப்போகும் பிரிவை நினைத்து வருத்தத்தோடு அழுதுகொண்டிருக்கிறாள். அப்பொழுது, தோழி அங்கு வருகிறாள். அவள் தலைவியை நோக்கி,
“ஆடவர்தான் மகளிர்க்கு உயிர் என்று கூறிய தலைவர் உன்னைவிட்டுப் பிரிந்து செல்லமாட்டார். நீ வருந்தாதே!” என்று ஆறுதல் கூறுகிறாள்.
வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க் காடவர் உயிரென
நமக்குரைத் தோருந் தாமே
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே.
கொண்டுகூட்டு: தோழி! வினையே ஆடவர்க் குயிரே! மனையுறை வாணுதல் மகளிர்க்கு ஆடவர் உயிரென நமக்குரைத் தோரும் தாமே. அழுங்குவர்
செலவே! அழாஅல்!
அருஞ்சொற்பொருள்: வாள் = ஒளி; நுதல் = நெற்றி; அழுங்குதல் =
தாமதித்தல்; அழாஅல் = அழாதே.
உரை: தோழி! தொழில்தான்
ஆண்களுக்கு உயிர் ஆகும்; வீட்டிலிருந்து வாழும் ஒளிபொருந்திய நெற்றியையுடைய மகளிர்க்கு, கணவன்மாரே உயிர் ஆவர்
என்று, நமக்கு எடுத்துக் கூறியவரும் தலைவர்தான். ஆகவே, அவர் செல்லுதலைத் தவிர்ப்பார். நீ அழாதே!
சிறப்புக் குறிப்பு: செலவழுங்குதல்
என்பது தலைவிக்கு ஆறுதல் கூறி, சிலகாலம் கழித்துச் செல்லுவதைக் குறிக்கிறது.
No comments:
Post a Comment