Saturday, January 16, 2016

142. தலைவன் கூற்று

142. தலைவன் கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13-இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று – 1: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்குந் தலைமகன் சொல்லியது.
கூற்று – 2:  தோழிக்குத் தலைமகன், தன்குறை (குறை = வேண்டுகோள்) கூறியதூஉமாம்.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைத் தற்செயலாகச் சந்தித்தான். அவளோடு அளவளாவினான். அவள் மீது காதல் கொண்டான். பின்னர், அவளைவிட்டுப் பிரிய வேண்டிய நேரம் வந்தவுடன் பிரிந்து சென்றான். அவளைவிட்டுப் பிரிந்தாலும், தன் நெஞ்சம் அவளிடத்திலேயே தங்கிவிட்டதாகக் கருதுகிறான். இப்பாடலைத் தலைவன் தனக்குத் தானே சொல்லிக்கொண்டதாகவோ அல்லது தலைவியின் தோழியிடம் கூறித் தலைவியை மீண்டும் சந்திப்பதற்கு, உதவி செய்க என்று தலைவன் வேண்டுவதாகவோ கருதலாம்.

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை
தானறிந் தனளோ இலளோ பானாட்
பள்ளி யானையி னுயிர்த்தென்
உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே. 

கொண்டு கூட்டு: பால் நாள்,  பள்ளி யானையின் உயிர்த்துஎன் உள்ளம் பின்னும் தன் உழையது. சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇபுனக்கிளி கடியும் பூங்கண் பேதை தான் அறிந்தனளோ, இலளோ

அருஞ்சொற்பொருள்: சுனை = குளம், நீரை அடுத்துள்ள இடம்; குற்று = பறித்து; தொடலை = தொடுக்கப்படும் மாலை; தைஇ = கட்டி; புனம் = கொல்லை, வயல்; கடிதல் = வெருட்டுதல்; பூங்கண் = பூவைப் போன்ற கண்; பேதை = பெண் (இளம்பெண்); பால்நாள் = நடுஇரவு; பள்ளி = படுக்கை; உயிர்த்தல் = பெருமூச்சுவிடுதல்; உழை = இடம்; தன் உழையது = தன்னிடமே தங்கி உள்ளது.

உரை: நள்ளிரவில் படுத்துத் தூங்கும் யானையைப் போலப் பெருமூச்சு விட்டுக்கொண்டு, நான் தலைவியைப் பிரிந்து வந்த பின்னரும், எனது நெஞ்சம் அவளிடத்திலேயே இருக்கின்றது.  நீர்ச்சுனையில் மலர்ந்த மலர்களைப் பறித்துமாலையைக் கட்டிக்கொண்டு, தினைப் புனத்தில் கதிரை உண்ணும் பொருட்டு வரும் கிளிகளை வெருட்டும்,  பூவைப்போன்ற கண்களையுடைய இளம்பெண்ணாகிய அத்தலைவி, இதனை அறிந்தாளோ இல்லையோ!


சிறப்புக் குறிப்பு: பெருமூச்சு விடுவது நெஞ்சின் இயல்பு அன்று. ஆயினும், நெஞ்சம் பெருமூச்சு விடுவதாகக் கூறுவது இலக்கிய மரபு

2 comments: