Saturday, January 16, 2016

133. தலைவி கூற்று

133. தலைவி கூற்று

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். இவர் உறையூரைச் சார்ந்தவர்.  இவர் தந்தையாரின் பெயர் முதுகண்ணன்.  இவர் குறுந்தொகையில் ஒரு பாடலும் (133) புறநானூற்றில் ஐந்து பாடல்களும் (27, 28, 29, 30, 325) இயற்றியுள்ளார். இவர் புறநானூற்றுப் பாடல் 29 -இல் நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்என்று சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார்.  மற்றும், அதே பாடலில், உலகம் தோன்றி நின்று மறைவதைக் கூத்தர்களின் கோலத்திற்கு உவமையாகக் கூறுகிறார்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணம் செய்து கொள்வதற்குக் காலம் தாழ்த்துகிறான். அதனால் வருந்திய தலைவி,நான் என் நலத்தை இழந்தும் தலைவர் என்னைத் திருமணம் செய்துகொள்வார் என்னும் நம்பிக்கையால் உயிரோடு இருக்கிறேன்.” என்று தோழியிடம் கூறுகிறாள்.

புனவன் துடவைப் பொன்போற் சிறுதினை
கிளிகுறைத் துண்ட கூழை யிருவி
பெரும்பெய லுண்மையி னிலையொலித் தாங்கென்
உரஞ் செத்தும் உளெனே தோழியென்
நலம்புதி துண்ட புலம்பி னானே. 

கொண்டுகூட்டு: தோழி! புனவன் துடவைப் பொன்போற் சிறுதினை கிளி குறைத்துண்ட, கூழை இருவி, பெரும்பெயல் ண்மையின், இலை ஒலித்தாங்கு,
என் நலம் புதிது ண்ட புலம்பினான் உரம் செத்தும் உளென். 

அருஞ்சொற்பொருள்: புனவன் = குறவன்; துடவை = தோட்டம்; கூழை = குட்டை; இருவி = தினை அரிந்த பிறகு உள்ள தாள்; ஒலித்தல் = தழைத்தல்; உரம் = உடல் வலிமை, கன்னித்தன்மை; புதிது உண்ட = பெண்மை நலத்தைக் களவொழுக்கத்தில் முதன்முதலாக நுகர்ந்த; புலம்பு = தனிமை.

உரை: தோழி! குறவனுடைய தோட்டத்தில் விளைந்த, பொன்னைப் போன்ற சிறிய தினையின் கதிரை, கிளி ஒடித்து உண்டதால் குட்டையாகிய தாள்கள் இலைகள் இல்லாமல் இருந்தன.  பெரிய மழை பெய்ததால்மீண்டும் அந்தத் தாள்களில் இலைகள் தழைத்தன. அதுபோல,  தலைவர் எனது பெண்மை நலத்தைப் புதிதாக நுகர்ந்து, பின்பு பிரிந்து சென்றதால் உண்டாகிய தனிமையால், நான் எனது வலிமை அழிந்தும், இன்னும் உயிரோடு இருக்கின்றேன்.


சிறப்புக் குறிப்பு: உண்ண முடியாத பொருளை உண்டதாகக் கூறுதல் ஒரு மரபு. கிளி உண்டதால் கதிரிழந்த தினைத்தாள், பெருமழையால்  உலர்ந்து வாடாமல் இலை விட்டதுபோல, தலைவன் நுகர்ந்ததால் தன் பெண்மை நலத்தை இழந்த தலைவி, தலைவன் தன்னைத் திருமணம் செய்துகொள்வான் என்ற நம்பிக்கையில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்

No comments:

Post a Comment