154.
தலைவி கூற்று
பாடியவர்: மதுரைச்
சீத்தலைச் சாத்தனார். சாத்தனார் என்ற பெயருடைய இவர், சீத்தலை
என்னும் ஊரைச் சார்ந்தவர். ஆகவே, இவர் மதுரைச் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பட்டார். இவர் மதுரையில் கூல வாணிகம் (பல
சரக்கு வாணிகம்) செய்துவந்ததால் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்றும்
அழைக்கப்பட்டார். இவர் குறுந்தொகையில் ஒரு
செய்யுளும் (154), நற்றிணையில் மூன்று செய்யுட்களும் (36,
127, 339), அகநானூற்றில் ஐந்து செய்யுட்களும் (53, 134, 229, 306, 320),
புறநானூற்றில் ஒருசெய்யுளும் (59) இயற்றியுள்ளதாகத் தெரிகிறது. (சங்க இலக்கியம் – ஆய்வுகளும்
அட்டவணைகளும், பேராசிரியர். ந. சஞ்சீவி, காவ்யா பதிப்பகம், 2010)
திணை: பாலை.
கூற்று: பொருள்வயிற்
பிரிந்த தலைமகனை நினைந்து தலைமகள் தோழிக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன்
பொருள் ஈட்டச் சென்றிருக்கிறான். அவனுடைய பிரிவால் தலைவி வருத்தோடு
இருக்கிகிறாள். அப்பொழுது அவளுடைய தோழி அவளுக்கு ஆறுதல் கூறுகிறாள்.
தலைவி, தோழியை நோக்கி “என்னைவிட்டுப்
பிரிந்து நெடுந்தூரத்தில் தங்கி இருக்கக்கூடிய வல்லமையை அவர் எப்படிப் பெற்றார்?”
என்று கேட்கிறாள்.
யாங்கறிந் தனர்கொல் தோழி பாம்பின்
உரிநிமிர்ந் தன்ன உருப்பவி ரமையத்
திரைவேட் டெழுந்த சேவல் உள்ளிப்
பொறிமயிர்
எருத்திற் குறுநடைப் பேடை
பொறிகாற் கள்ளி விரிகா யங்கவட்டுத்
தயங்க விருந்து புலம்பக் கூஉம்
அருஞ்சுர வைப்பிற் கானம்
பிரிந்துசே ணுறைதல் வல்லு வோரே.
பொறிகாற் கள்ளி விரிகா யங்கவட்டுத்
தயங்க விருந்து புலம்பக் கூஉம்
அருஞ்சுர வைப்பிற் கானம்
பிரிந்துசே ணுறைதல் வல்லு வோரே.
கொண்டு
கூட்டு:
தோழி! பாம்பின் உரி நிமிர்ந் தன்ன உருப்பு அவிர் அமையத்து,
இரை வேட்டெழுந்த சேவல் உள்ளிப் பொறிமயிர்
எருத்திற் குறுநடைப் பேடை, பொறிகாற் கள்ளி விரிகாய் அம் கவட்டுத்
தயங்க இருந்து புலம்பக் கூஉம் அருஞ்சுர வைப்பின் கானம் பிரிந்து சேணுறைதல் வல்லுவோர் யாங்கு
அறிந்தனர்கொல்?
அருஞ்சொற்பொருள்: உரி = தோல்; நிமிர்தல் = மேலே எழுதல்;
உருப்பு = வெப்பம்; அவிர்
= ஒளி; அமையம் = காலம்;
வேட்டு = விரும்பி; சேவல் = ஆண் பறவை (ஆண்
புறா); உள்ளி = நினைத்து; எருத்து = கழுத்து; பேடை
= பெண்பறவை (பெண் புறா); விரிகாய் = வெடித்த காய்; அம் = அழகிய;
கவடு = மரக் கொம்பு (கிளை);
தயங்கல் = ஓளிசெய்தல்; புலம்பு
= தனிமை; கூஉம் = கூவும்;
வைப்பு = இடம்; கானம்
= காடு; சேண் = நெடுந்தொலைவு;
உறைதல் = வாழ்தல், தங்குதல்.
உரை: தோழி, பாம்பினுடைய தோல் மேலே எழுவதைப்போல, வெப்பம் விளங்குகின்ற
நண்பகல் வேளையில், இரையை விரும்பி மேலெழுந்து பறந்து சென்ற
ஆண் புறாவை நினைத்து, புள்ளிகளையுடைய
மயிர் பொருந்திய கழுத்தையும், குறுகிய நடையையும் உடைய,
பெண்புறாவானது, பொரிந்த அடியையுடைய கள்ளியினது,
வெடித்த காயையுடைய அழகிய கிளையில், விளங்கும்படி
இருந்து, தனிமை தோன்றும்படி கூவுகின்ற, கடத்தற்கரிய வழியையுடைய இடமாகிய பாலை நிலத்தைக் கடந்து, நெடுந்தூரத்தில் தங்குவதற்கு உரிய
மனவலிமையைத் தலைவர் எவ்வாறு பெற்றார்?
சிறப்புக்
குறிப்பு:
பிரிவைப்
பொறுத்துக் கொள்ளும் மனவலிமை தனக்கு இல்லாமல் இருக்கும்பொழுது தலைவர் மட்டும் பிரிவைப்
பொறுத்துக்கொள்ளும் மனவலிமையை எங்ஙனம் பெற்றார் என்ற கருத்தில் “யாங்கு அறிந்தனர்கொல்?” என்றாள்.
கானலின்
தோற்றத்திற்குப் பாம்பு உரித்த தோல் மேல் எழுந்து தோன்றுவது உவமை. பாலை நிலத்தைக் கடக்கும் போது அங்குள்ள காட்சிகள் தலைவன் தலைவியரிடையே
இருக்க வேண்டிய அன்பை நினைவூட்டுவனவாக இருப்பதால், அவற்றைப்
பார்த்த பிறகும், தன்னைத் தொடர்ந்து பிரிந்திருப்பதற்குத் தலைவருக்கு
அதிக மனவலிமை வேண்டும் என்று தலைவி கருதுவதால், “பிரிந்து சேண்
உறைதல் வல்லுவோர்” என்றாள். பிரிந்து சென்ற ஆண்புறாவை நினைத்துப் பெண்புறா கூவுவதைக் கண்டு தன்னை
நினைத்துத் தலைவியும் வருந்துவாள் என்பதைத் தலைவர் உணரக்கூடும் என்பது தலைவியின் கருத்தாகத்
தோன்றுகிறது.
No comments:
Post a Comment