Sunday, June 14, 2015

38. குறிஞ்சி - தலைவி கூற்று

38. குறிஞ்சி - தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 13 –இல் காணலாம்.

பாடலின் பின்னணி: திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தலைவி வருந்துகிறாள். தலைவியைக் காண்பதற்குத் தோழி வருகிறாள். தலைவியின் வருத்தத்தைக் கண்ட தோழி, “ திருமணத்திற்குப் பொருள் திரட்டுவதற்காகத்தானே உன் தலைவர் உன்னைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறார். அவர் விரைவில் திரும்பி வருவார். பிரிவைப் பொறுத்துக்கொள் “ என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். ஆனால், தலைவி, “பிரிவைப் பொறுத்துக்கொள்ளும் ஆற்றல் மனவலிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இருக்கும். அது எனக்கு இல்லையே! “ என்று கூறுகிறாள்.

கான மஞ்ஞை யறையீன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி உண்கண்
நீரொ டொராங்குத் தணப்ப
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே. 

அருஞ்சொற்பொருள்: கானம் = காடு; மஞ்ஞை = மயில்; அறை = பாறை; ஈனுதல் = பெறுதல்; முசு = குரங்கு (கருங்குரங்கு); குருளை = குட்டி; கேண்மை = நட்பு; நன்று = பெருமை; உண்கண் = மை தீட்டிய கண்கள்; உள்ளாது = நினையாது; ஒராங்கு =  ஒரு படியாக; தணத்தல் = பிரிதல்.

உரை: தோழி! நீ வாழ்க! காட்டிலுள்ள மயில்  பாறையில் ஈன்ற முட்டைகளை, வெயிலில் விளையாடும் குரங்குக் குட்டிகள் உருட்டும் இடமாகிய, மலைநாட்டையுடையவனாகிய தலைவனது நட்பு என்றும் பெருமைக்குரியது. ஆனால், அவன் என்னைவிட்டுப் பிரிந்ததால், மை தீட்டிய என் கண்களிலிருந்து நீர் பெருகுகின்றன. அந்தப் பிரிவை நினைத்து ஒரேயடியாக வருந்தாமல், பொறுத்துக்கொள்ளும் ஆற்றல், மனதில் வலிமை உடையவர்களுக்கு மட்டுமே இருக்கும். எனக்கு அது இல்லையே!


விளக்கம்: குரங்குக் குட்டிகள் மயிலின் முட்டையை உருட்டி விளையாடுவதால் முட்டை உடைந்து அழியக்கூடும். அதுபோல், தலைலவனுடைய பிரிவால் தலைவியின்  காதல் முறியக்கூடும் என்று உள்ளுரை உவமமாகப் புலவர் கூறுவதாகத் தோன்றுகிறது. மயிலின் முட்டையை குரங்குக் குட்டிகள் உருட்டி விளைடுவதைப் போல் தலைவனின் பிரிவினால் அவனுக்கும் தலைவிக்கும் இடையே உள்ள காதல் ஊராரால் எள்ளி நகையாடப்படுகிறது என்றும் பொருள்கொள்ளலாம்.

37. பாலை - தோழி கூற்று

37. பாலை - தோழி கூற்று

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ. இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 16-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான். பிரிவினால் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “ தலைவன் உன் மீது மிகவும் அன்புடையவன். தலைவன் சென்ற வழியில் ஆண்யானைகள் பெண்யானைகளின் பசியைப் போக்கி அவற்றை அன்போடு பாதுகாப்பதைக் கண்ட தலைவன் தன் கடமையை உணர்ந்து உன்னிடம் விரைவில் வருவான்” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

நசைபெரி துடையர் நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.

அருஞ்சொற்பொருள்: நசை = விருப்பம், அன்பு; நல்கல் = அன்போடு அளித்தல் ; பிடி = பெண் யானை; களைஇய = நீக்குவதற்காக; பெருங்கை = பெரிய துதிக்கை; வேழம் = யானை (இங்கு ஆண்யானையைக் குறிக்கிறது); மென் = மெல்லிய; சினை = கிளை; யாஅம் = யா = ஒருவகை மரம் ; பொளித்தல் = கிழித்தல், உரித்தல்.

உரை: தோழி, தலைவர் நின்பால் மிகவும் அன்புடையவர், நீ விரும்புவதை அவர் செய்வார். அவர் சென்ற வழி,  பெரிய துதிக்கையையுடைய ஆண்யானை, மெல்லிய கிளைகளை உடைய யாமரத்தைப் பிளந்து பெண்யானையின் பசியை அன்போடு களையும் இடமாக உள்ளது.


விளக்கம்: ஆண்யானை அன்போடு தன் பெண்யானையின் பசியைப் போக்குவது போல் தலைவனும் தலைவியின் விருப்பத்திற்கு இணங்கி விரைவில் வருவான் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.

36. குறிஞ்சி - தலைவி கூற்று

36. குறிஞ்சி - தலைவி கூற்று

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 19-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் தலைவியோடு கூடியிருந்த பொழுது “உனக்கு என் நெஞ்சில் எப்பொழுதும் இடமுண்டு. நீ இல்லாமல் நான் இல்லை’” என்று உறுதிமொழி கூறினான். தலைவன் அவ்வாறு உறுதிமொழி கூறியது தோழிக்குத் தெரியும். இப்படி உறுதிமொழி கூறியவன் தலைவியைவிட்டு இத்தனை நாட்கள் பிரிந்திருக்கிறானே என்று தோழி வருத்தப்படுகிறாள். ”என் தலைவன் கூறிய உறுதிமொழிதான் உன் வருத்தத்திற்குக் காரணமா? தலைவனின் பிரிவினால் வரும் துயரத்தை நானே பொறுத்துக்கொண்டிருக்கும் பொழுது, நீ இவ்வாறு வருந்துவது முறையன்று.” என்று தலைவி தோழிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

துறுக லயலது மாணை மாக்கொடி
துஞ்சுகளி றிவரும் குன்ற நாடன்
நெஞ்சுகள னாக நீயலென் யானென
நற்றோள் மணந்த ஞான்றை மற்றவன்
தாவா வஞ்சின முரைத்தது
நோயோ தோழி நின்வயி னானே. 

அருஞ்சொற்பொருள்: துறுகல் = பாறை; அயல் = அருகில்; மாணை = ஒரு வகைக் கொடி; மா = பெரிய; துஞ்சுதல் = தூங்குதல்; களிறு = ஆண் யானை; இவர்தல் = ஏறுதல் (படர்தல்) ; களன் = இடம் ; அல் = வறுமை (இல்லாமல்) ; நற்றோள் = நல்ல தோள்; மணத்தல் = கூடுதல் ; ஞான்று = பொழுது; தா = கேடு; தாவா = கெடாத (நல்ல) ; வஞ்சினம் = சூளுரை (உறுதிமொழி); வயின் = இடம் (ஏழாம் வேற்றுமை உருபு).

உரை: தோழி, என்னுடைய காதலன், பாறையின் அருகில் உள்ள, மாணை என்னும் பெரிய கொடியானது, தூங்குகின்ற ஆண்யானையின்மேல் படரும் குன்றுகளை உடைய நாட்டிற்குத் தலைவன். அவன் என்னோடு கூடிய (எனது நல்ல தோளை அணைத்த) பொழுது, “உனக்கு எப்பொழுதும் என் நெஞ்சில் இடமுண்டு; நீ இல்லாவிட்டால் நான் இல்லை” என்று கூறிய உறுதிமொழிதான் உன்னிடம் காணப்படும் வருத்தத்திற்குக் காரணமோ?


விளக்கம்: தன்மேல் படரும் கொடியைவிட்டு யானை விலகுவதைப்போல் தலைவன் தலைவியைவிட்டுப் பிரியக்கூடும் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.

35. மருதம் - தலைவி கூற்று

35. மருதம் - தலைவி கூற்று

பாடியவர்:
கழார்க் கீரனெயிற்றியார்.  இவர் ஒருபெண்பாற் புலவர். கழார் என்பது மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஓரூர். இப்புலவரே அதனை, ‘வெல்போர்ச் சோழர் கழாஅர்’ (நற். 281) என்பர்.  இவர் குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (35, 261), அகநானூற்றில் நான்கு பாடல்களும் (163, 217, 235,294), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (281,312) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி:  தலைவனைப் பிரிந்திருப்பதால் தலைவி வருந்தி அழுகிறாள். “நீ ஏன் அழுகிறாய்?” என்று தோழி கேட்கிறாள். ”என் தலைவன் பிரிந்து சென்றபொழுது அழாமல், அவன் பிரிவிற்கு உடன்பாடாக இருந்த என் கண்கள் இப்பொழுது நாணமின்றி அழுகின்றன.” என்று தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு
சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
நுண்ணுறை யழிதுளி தலைஇய
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே. 

அருஞ்சொற்பொருள்: நாணில = நாண்+ இல = நாணம் இல்லாத; மன்ற = உறுதியாக; நேர் = உடன்பாடு; நாணேர்பு = நாள் + நேர்பு = (பிரிந்த) நாளில் உடன்பட்டு; சினை = கருப்பம்; சூல் = கருப்பம்; முதிர்ப்பு = முதிர்ச்சி; கனைத்த = திரண்ட; கூம்புதல் = குவிதல்; பொதி = அரும்பு; உறை = மழை; அழி துளி = அழியும் மழைத்துளி; தலைஇய = பொருந்திய; தண் = குளிர்ச்சி; வாடை = வடக்கிலிருந்து வரும் காற்று; பிரிந்திசினோர் = பிரிந்தவர்.

உரை: தோழி, தலைவர் பிரிந்த நாளில் உடன்பட்டு, கருப்பத்தை உடைய பச்சைப் பாம்பினது கருவின் முதிர்ச்சியைப் போன்ற, திரண்ட கரும்பினது குவிந்த அரும்பு மலரும்படி, கார்காலத்து மழை பெய்த பிறகு, மேகங்களில் எஞ்சியிருக்கும் துளிகளுடன் குளிர்ச்சியுடைய வாடைக் காற்று வீசும் குளிர்காலத்திலும் பிரிந்திருக்கும் தலைவரை நினைத்து அழுவதால் என்னுடைய கண்கள், நிச்சயமாக நாணம் இல்லாதவை. (கரும்பின் குவிந்த அரும்பு கருவுற்ற பச்சைப் பாம்பைபோல் இருப்பதை கீழே உள்ள படத்தில் காணலாம்.)


விளக்கம்: வாடைக்காற்று வீசும் கூதிர்காலம் ( ஐப்பசி, கார்த்திகை) காதலர்கள் கூடியிருக்க விரும்பும் காலமாகக் கருதப்பட்டது. தலைவியை விட்டுப் பிரிந்து சென்ற தலைவன் கார்காலத்தில் (ஆவணி, புரட்டாசி) திரும்பி வருவது வழக்கம். கார்காலம் கடந்து கூதிர்காலமும் வந்தமையால் தலைவியின் வருத்தம் மிகுந்தது என்று தோன்றுகிறது. தன்னுடைய நிலைக்குத் தலைவி தன் கண்களைக் குறைகூறுவது மரபு. இதைத் திருக்குறளில் உள்ள “கண்விதுப்பழிதல்” என்ற அதிகாரத்திலும் (அதிகாரம் 118) காணலாம்.

 

34. மருதம் - தோழி கூற்று

34. மருதம் - தோழி கூற்று

பாடியவர்: கொல்லிக் கண்ணனார். இவர் இயற்றியதாக சங்க இலக்கியத்தில் இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது.
பாடலின் பின்னணி: தலைவனைச் சிலகாலமாகக் காணவில்லை. ஆகவே, தலைவி வருத்தத்துடன் உடல் மெலிந்து உறக்கமின்றி வாடுகிறாள். அவள் நிலையைக் கண்ட அவள் பெற்றோரும் மற்றவர்களும் அவளை இகழ்ந்தார்கள். அவள் காதலன் அவளைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறான் என்ற செய்தி தோழிக்குத் தெரிய வந்தது. “நீ யாரை விரும்பினாயோ அவனே உன்னைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறான், ஆகவே இனி எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்” என்று கூறித் தோழி, தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.
ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்
தமியர் உறங்கும் கௌவை யின்றாய்
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே
முனாஅ தியானையங் குருகின் கானலம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்
குட்டுவன் மரந்தை யன்னவெம்
குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே. 

அருஞ்சொற்பொருள்: ஒறுத்தல் = தண்டித்தல், இகழ்தல், துன்புறுத்தல் ; ஓவுதல் = நீங்குதல்; ஓவலர் = நீங்காதவர்கள் (தலைவியின் பெற்றோர்கள் அவளுக்கு நெருக்கமான உறவு உடையவர்களாகையால் , ஓவலர் என்பது பெற்றோர்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம்); தேறல் = தெளிதல்; தமியர் = தனியர்; கௌவை =பழிச்சொல், துன்பம் ; முனாஅது = முன்னே; யானையங்குருகு = ஒருவகைக் குருகு (நாரை, கொக்கு); கானல் = கடற்கரை; அம் – சாரியை; தோடு = கூட்டம்; அட்ட = அழித்த ; மள்ளர் = வீரர்; ஆர்ப்பு = பேரொலி, போர்; வெரூஉம் = அஞ்சும்; குட்டுவன் = ஒரு சேரமன்னன்; மரந்தை = சேரநாட்டில் இருந்த ஒருநகரம்; குழை = சுருண்ட முடி; கிழவன் = உரிமையுடையவன்.  

உரை: உன்னுடைய நிலையைக் கண்டு வருத்தமடைந்த  உன் பெற்றோர்கள் உன்னை இகழ்ந்தார்கள். உன்னுடைய நிலையைப் பற்றித் தெளிவாகத் தெரியாத மற்றவர்கள் நீ கூறியதை மறுத்தார்கள். பகைவரை வென்ற வீரர்களின் போர் முழக்கத்தைக் கேட்டுக் கடற்கரையில் உள்ள  யானையங்குருகுகளுடைய கூட்டம் அஞ்சும் இடமாகிய சேரன் குட்டுவனுக்குரிய மரந்தை என்னும் நகரத்தைப் போல் நீ அழகுடன் விளங்குகிறாய்.  உன் சுருண்ட முடி தவழும் அழகிய நெற்றிக்கு உரிமையுடயவன் உன்னுடைய தலைவனே ஆவான். அவன் உன்னைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறான். ஆகவே, இனி  நீ தலைவனைப் பிரிந்து தனிமையில் உறங்கும் துன்பமில்லாமல் இல்லாமல் இருக்கலாம். இந்த ஊரில் உள்ள மற்றவர்களும் இந்த இனிய செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடையலாம்.

விளக்கம்: யானையங்குருகு என்பது யானையின் குரலை ஒத்த குரலை உடைய ஒருவகைக் குருகு. மரந்தை என்பது சேரநாட்டில் சேரன் குட்டுவனுக்குரிய ஒரு நகரம். இப்பாடலில், தலைவியின் அழகுக்கு மரந்தை நகரம் உவமையாகக் கூறப்பட்டிருப்பதுபோல், புறநானூற்றுப் பாடல் 351 – இல் “வண்கை எயினன் வாகை அன்ன இவள்நலம்” என்று புலவர் மதுரைப் படைமங்க மன்னியார் பாடியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.
 தலைவியின் உடலுறுப்புகளுக்கு உரிமை உடையவனாகத் தலைவனைக் கூறுவது சங்ககால வழக்கு. கலித்தொகைப் பாடல் 41-இல் “தோட்கிழவன்” என்று தலைவன் குறிப்பிடப்படுகிறான். மற்றும், பெண்களின் கூந்தலைத் தொடும் உரிமை அவர்களின் கணவருக்கு மட்டுமே உண்டு என்பது புறநானூற்றுப் பாடல் 113- லும், குறுந்தொகைப் பாடல் 225-லும் காணப்படுகிறது.
. . . . . . . . . .   குறுந்தொடி மகளிர்
நாறிருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே.
                                    (புறநானூறு , 113; 8-9)
பொருள்: சிறிய வளையல்களை அணிந்த இந்தப் பெண்களின் (பாரி மகளிரின் ) மண்முள்ள கரிய கூந்தலுக்கு உரிமையுடையவரை நினைத்துச் (தேடிச்) செல்கிறோம்.

. . . . . . . . . . . . . . மென்சீர்க்
கலிமயிற் கலாவத் தன்னஇவள்
ஒலிமென் கூந்தல் உரியவா நினக்கே.
(குறுந்தொகை - 225; 5-7)


பொருள்: மெல்லிய சிறப்பை உடைய ஆரவாரிக்கும் மயிலினது பீலியைப் போன்ற தழைத்த மெல்லிய கூந்தல் உனக்கே உரிமை உடையதாகும் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

33. மருதம் - தலைவி கூற்று

33. மருதம் - தலைவி கூற்று

பாடியவர்: படுமரத்து மோசிகீரனார்.  இவர் குறுந்தொகையில் மூன்று பாடல்களை (33, 75, 383) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான். அவன் மீண்டும் தலைவியோடு கூடி வாழ விரும்புகிறான். தலைவி தன்மீது கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்த தலைவன், ஒரு இளைய பாணனைத் தன் தூதுவனாகத் தலைவியிடம் அனுப்புகிறான். அந்த இளைய பாணன் இசைத்தொழிலில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு மாணவன். ஆனால், சொல்வன்மை மிக்கவன். அவன் தலைவியிடம் சென்று, தலைவனைப் புகழ்ந்து பேசுகிறான். அவன் சொல்வன்மையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த தலைவி, தலைவனை ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கிறாள்.  தலைவன் வந்தவுடன் அவனுக்குப் பெரிய விருந்து அளிக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றுகிறது. அந்த இளைய பாணனின் திறமையைக் கண்டு வியந்த தலைவி, “ இந்தத் திறமையுள்ள இளைய பாணனின் சொல்வன்மை என்னைக் கவர்ந்ததால் நான் என் தலைவனை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தேன்.  என் தலைவன் வந்தவுடன் நான் பெரிய விருந்தளிக்கப் போகிறேன். அந்த விருந்துக்கு இந்தப் பாணனையும் அழைக்கப் போகிறேன். வரும் எதிர்காலத்தில், இந்தப் பாணன் இப்படி எத்தனைபேருக்குத் தூது சென்று, எத்தனை விருந்துகளைப் பெறப்போகிறானோ? இவன் நிச்சயமாகப் பெருமைக்குரியவனாக விளங்குவான்.” என்று தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே. 

அருஞ்சொற்பொருள்: அன்னாய் = அன்னையே (தோழியே); மாணாக்கன் = மாணவன்; மன்றம் = பொதுவிடம்; என்னன் = எத்தன்மையவன்; ஊர்தல் = செல்லுதல்; செம்மல் = பெருமையில் சிறந்தவன்.

உரை: தோழியே! தனது ஊர்ப் பொதுவிடத்தில் உள்ள இந்தப் பாணன் ஒரு இளைய மாணவன். ஆனால் எவ்வளவு திறமை உடையவனாக இருக்கிறான்! பலரிடத்தில் இரந்து உண்ணும் இவன், இன்னும் முற்றிலும் வளர்ச்சி அடையாத உடலோடு உள்ளான். இவன் திறமையால் பலராலும் பாராட்டப்பட்டு, பலருக்கும் விருந்தினனாகச் சென்று, பெருமையுடன் விளங்கப் போகிறான்.


விளக்கம்: தோழியைத் தலைவி அன்னை என்று அழைப்பது மரபு. பாணர்கள் ஊர்ப்பொதுவிடத்தில் வாழ்வதும் இரந்து உண்ணுவதும்  வழக்கமாக இருந்ததாகத் தெரிகிறது. தலைவனுக்கும்  தலைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலோ அல்லது தலைவி ஊடியிருக்கும் பொழுது அவளைச் சமாதானப் படுத்துவதற்காகவோ தலைவன் பாணணைத் தூதுவனாக அனுப்புவது வழக்கம் என்று தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது.

32. குறிஞ்சி - தலைவன் கூற்று

32. குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவர் ஒருபெண்பாற் புலவர். இவர் பாண்டிய நாட்டில் இருந்த அள்ளூர் என்னும் ஊரைச் சார்ந்தவர் என்று கருதப்படுகிறது.  இவர் புறநானூற்றில்  ஒருபாடலும் (306), குறுந்தொகையில் ஒன்பது பாடல்களும் (32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237), அகநானூற்றில் ஒருபாடலும் (46) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: தலைவியைக் காண்பதற்காககத் தலைவன் வருகிறான். ஆனால் தலைவிக்குப் பதிலாகத் தோழி வந்திருக்கிறாள். ”தலைவி வரவில்லையா?” என்று தலைவன் கேட்கிறான்.  “தலைவி வரவில்லை. அவள் இனிமேல் உன்னைக் காண வரமாட்டாள்” என்று தோழி கூறுகிறாள். தலைவியைக் காணாததால் ஏமாற்றம் அடைந்த தலைவன், “என்னுடைய காதல் உண்மையானது. தலைவி  என்னை  ஏற்றுக்கொள்ளாவிட்டால் நான் மடலேறுவேன். நான் மடலேறினால் அதனால் எங்கள் இருவருக்கும் பழி வரும். தலைவியைப் பிரிந்து உயிர் வாழ்ந்தால் ஊரில் உள்ளவர்கள் எங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். அதனால் எங்களுக்குப் பழி வரும்.” என்று கூறுகிறான். தான் கூறியதைத் தோழி தலைவியிடம் கூறினால், தலைவி மனம் மாறித் தன்னை ஏற்றுக்கொள்வாள் என்று தலைவன் எண்ணுவதாகத் தோன்றுகிறது.

காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலோடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே. 

அருஞ்சொற்பொருள்: கையறவு = செயலற்ற நிலை; துஞ்சுதல் = தூங்குதல்; யாமம் = நள்ளிரவு (இரவு 10 மணி முதல் 2 மணி வரை);  பகல்  - இங்கு பகல் என்பது நண்பகல் (பகல் 10 மணி முதல் 2 மணி வரை) மற்றும் எற்பாடு (மாலை 2 மணி முதல் 6 மணிவரை)  ஆகிய இரண்டு பொழுதுகளையும் குறிக்கிறது. விடியல் = விடியற் காலம் ( இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை); மா = குதிரை; மடல் = பனைமட்டையால் செய்யப்பட்ட குதிரை போன்ற ஒரு உருவம்; மறுகு = தெரு; தெற்றென  = தெளிவாக; தூற்றல் = சிதறுதல் (பலர் அறியச் செய்தல்); பழி = அலர், குறை; தலைவருதல் = தோன்றுதல்.

உரை: காலைப்பொழுது, பகல், செயலற்ற நிலைக்குக் காரணமாகிய மாலைப் பொழுது,  ஊரில் உள்ளவர்கள் உறங்குகின்ற நள்ளிரவு, விடியற்காலம் ஆகிய நேரங்களில் அவ்வப்பொழுது மட்டும்  காமம் தோன்றுமாயின், அத்தகைய காமம் பொய் (உண்மையானது அன்று). பிரிவு வரும்பொழுது, குதிரையென்று எண்ணிக்கொண்டு பனை மடலால் செய்த குதிரையின் உருவத்தின்மேல் ஊர்ந்து நான் தெருவில் வந்தால் (மடலேறினால்), அது தலைவி எனக்கு அளித்த துயரத்தைப் பலர் அறியச் செய்ததாகும். அதனால் பழி வரும். அவளைப் பிரிந்து உயிர் வாழ்ந்தால் ஊர் மக்கள் எங்கள் பிரிவைப் பற்றிக் குறை கூறுவார்கள். அதனால் எங்களுக்குப் பழி வரும்.


விளக்கம்: காதலனைப் பிரிந்து வாழும் காதலியும், காதலியைப் பிரிந்து வாழும் காதலனும் மாலை நேரத்தில் பிரிவின் கொடுமையைத் தாங்கமுடியாமல் தவிப்பதற்குச் சான்றாக தமிழ் இலக்கியத்தில் பல பாடல்கள் உள்ளன. உதாரணமாக,  “காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலருமிந் நோய்” (குறள் 1227) என்று திருவள்ளுவர் கூறியிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது. மாலையில் காதல் நோய் தன்னை மிகுதியாகத் துன்புறுத்துவதால் தலைவன் “கையறு மாலை” என்று கூறியதாகத் தோன்றுகிறது. “ஊர் துஞ்சி யாமம்” என்றது ஊரில் உள்ளவர்கள் அனைவரும் உறங்கினாலும் தலைவன் மட்டும் நள்ளிரவில் தூங்காமல் இருப்பதைக் குறிக்கிறது. “வாழ்தலும் பழியே” என்றது, தலைவி தன்னை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தலைவன் இறக்கவும் அஞ்ச மாட்டான் என்பதைக் குறிக்கிறது.