Monday, August 3, 2015

65. முல்லை - தலைவி கூற்று

65. முல்லை - தலைவி கூற்று

பாடியவர்: கோவூர்கிழார். இவர் கோவூரைச் சார்ந்தவர். இவர் புறநானூற்றில் 15 பாடல்களையும் (31-33, 41, 44-47, 68, 70, 308, 373, 382, 386, 400), நற்றிணையில் ஒருபாடலையும் (393), குறுந்தொகையில் ஒருபாடலையும் (65)  இயற்றியவர்.          சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்ட பொழுது, கோவூர் கிழார், “ஒருவீர் தோற்பினும், தோற்பதுங் குடியே; இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், குடிப்பொருள் அன்று, நும் செய்திஎன்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்திப் போரைத் தடுத்தி நிறுத்தினார் (புறநானூறு- 45).  பின்னர், ஒரு சமயம் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளியை ஆவூரில் முற்றுகையிட்ட பொழுது நெடுங்கிள்ளி போரிடாமல் அரண்மனையில் அடைபட்டுக் கிடந்தான்.  அவ்வமயம், “அறவை யாயின்,’நினதுஎனத் திறத்தல்! மறவை யாயின், போரொடு திறத்தல்; அறவையும் மறவையும் அல்லையாகத் திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின் நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத்தக வுடைத்திது காணுங் காலே.என்று அறிவுரை கூறினார்.  மற்றும், சோழன் நெடுங்கிள்ளி, இளந்தத்தன் என்னும் புலவனை ஒற்றன் எனத் தவறாகக் கருதிக் கொல்ல நினைத்தான்.  அப்போது, புலவர் கோவூர் கிழார், ‘இளந்தத்தன் ஒற்றர் அல்லர்; அவர் ஒரு புலவர்என்று எடுத்துரைத்து அப்புலவரைக் காப்பாற்றினார் (புறநானூறு - 47).  சோழன் கிள்ளிவளவன், மலையமான் என்பவனின் மக்களை யானையின் காலிலிட்டுக் கொல்ல முயன்ற பொழுது, அச்சிறுவர்களின் இயல்புகளைக் கூறி, அவர்களைக் காப்பாற்றினார் (புறநானூறு - 46).  புலவர் கோவூர் கிழார், சிறந்த அறிவும், ஆழ்ந்த புலமையும், மன்னர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்கும் மன உரமும் கொண்ட சான்றோர் என்பது அவர் இயற்றிய பாடல்களிலிருந்து தெரிகிறது.

பாடலின் பின்னணி: தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், தான் கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான். ஆனால், கார்காலம் வந்த பிறகும் தலைவன் வரவில்லை. “கார்காலம் வந்துவிட்டது. உன் தலைவன் இன்னும் வரவில்லை. ஆனால், நீ இன்னும் உயிரோடு இருக்கிறாயே!” என்று கார்காலம் தன்னைக் கேட்பதாகத் தலைவி தோழியிடம் கூறித் தன் வருத்தத்தைத் தெரிவிக்கிறாள்.

வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன்
இன்புறு துணையொடு மறுவந் துகளத்
தான்வந் தன்றே தளிதரு தண்கார்
வாரா துறையுநர் வரனசைஇ
வருந்திநொந் துறைய இருந்திரோ எனவே. 
-.
அருஞ்சொற்பொருள்: வன் = வலிய; பரல் = பருக்கைக் கல்; தெள் = தெளிந்த; அறல் = நீர்; பருகிய = குடித்த; இரலை = ஆண்மான்; மறுவரல் = சுழற்சி, மயக்கம்; உகளுதல் = தாவுதல், பாய்தல்; தளி = மழைத்துளி; தண் = குளிர்ந்த; வரல் = வருவதை; நசைஇ = விரும்பி.

உரை: தோழி, வலிய பருக்கைக் கற்கள் இருக்கும் இடத்திலுள்ள தெளிந்த நீரைக் குடித்த ஆண்மான்,  இன்பத்தை நுகர்வதற்காகத் தன்னுடைய துணையாகிய பெண்மானோடு, மகிழ்ச்சியுடன் சுழன்று துள்ளி விளையாடுகிறது.  இங்கே வாராமல் சென்ற இடத்தே தங்கிய தலைவர், மீண்டும் வருவதை விரும்பி, மிகவருந்திக் காத்திருக்கும் பொருட்டு, உயிரை வைத்துக் கொண்டிருகிறாயோ என்று கேட்பதற்காக, மழைத்துளியைத் தருகின்ற குளிர்ந்த கார்காலம் வந்திருக்கிறது.


விளக்கம்: கார் காலத்தில் மான் தன் துணையோடு மகிழ்ந்து விளையாடி இன்பம் நுகர்வதாக முல்லைப்பாட்டு, அகநாநூறு ஆகிய இலக்கியங்களில் பல குறிப்புகள் காணப்படுவதாக உவே. சாமிநாத ஐயர் தம் நூலில் கூறுகிறார். ஆகவே, இங்கு, மான்கள் இன்பம் நுகர்வதாகக் குறிப்பிட்டிருப்பது கார் காலம் வந்துவிட்டது என்பதைக் குறிக்கிறது. கார்காலம் வந்த பிறகும் தலைவன் வராமல் இருப்பதால் தான் உயிரோடு இருப்பது தவறு என்று தலைவி எண்னுவதாகத் தோன்றுகிறது. மற்றும், மான்கள் தங்கள் துணையோடு மகிழ்ச்சியாக இருக்கும் இந்தக் கார்காலத்தில் நான் மட்டும் என் தலைவனைவிட்டுப் பிரிந்திருக்கிறேனே என்று தலைவி கூறுவது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருள்.  

64. முல்லை - தலைவி கூற்று

64. முல்லை - தலைவி கூற்று

பாடியவர்: கருவூர்க் கதப்பிள்ளை.  இவர் குறுந்தொகையில் மூன்று பாடல்களும் (64, 265, 380). புறநானூற்றில் ஒரு பாடலும் (380) இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: தலைவன் தன் மனைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் பிரிவினால் தலைவி வருந்துகிறாள். “உன் வருத்தம் உன் கணவருக்குத் தெரியும். அவர் விரைவில் வந்துவிடுவார்.” என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். அதற்கு மறுமொழியாக, “ என் வருத்தம் தெரிந்தும் அவர் இன்னும் வரவில்லையே.” என்று  தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.


பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்
புன்றலை மன்றம் நோக்கி மாலை
மடக்கண் குழவி அணவந் தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்
சேயர்தோழி சேய்நாட் டோரே. 

அருஞ்சொற்பொருள்: பல்லா = பல் + = பல பசுக்கள்; நெறி = வழி; புன்மை = பொலிவழிந்த நிலை; தலை = இடம்; மன்றம் = பசுக்கள் தங்கியிருக்கும் இடம் (பசுவின் தொழுவம்); மடம் = மடப்பம், அறியாமை; குழவி = கன்று; அணவாதல் = தலையெடுத்துப் பார்த்தல்; நோயேம் = வருத்தம் உடையேம்;  சேயர் = வெகு தூரத்தில் உள்ளவர்; சேய்மை = தூரம்.

உரை: தோழி,  பல பசுக்கள், நெடுந்தூரம் நீங்கிச் சென்றதால், அவை தங்கியிருக்கும் பொலிவிழந்த இடத்தையுடைய மன்றத்தைப் பார்த்து, மாலைநேரத்தில், மடமை பொருந்திய கண்களையுடைய கன்றுகள் தலையெடுத்துப் பார்த்து வருந்துவதைப்போல் அவர் வரவை எதிர்பார்த்து நான் வருந்துவேன் என்பதை அறிந்திருந்தும், நெடுந்தூரத்திலுள்ள நாட்டுக்குச் சென்ற என் தலைவர், இன்னும் நெடுந்தூரத்திலேயே உள்ளாரே.

விளக்கம்: புன்றலை என்றது பசுக்கள் இல்லாததால் அவை தங்கியிருக்கும் இடம் பொலிவிழந்து காணப்படுவதைக் குறிக்கிறது.  தலைவன் இல்லாததால் தன் இல்லமும் பொலிவிழந்து காணப்படுவதாகத் தலைவி கூறுவதாகத் தோன்றுகிறது. மேயச் சென்ற பசுக்கள் மாலைநேரத்தில் திரும்பி வந்து தொழுவத்தில் புகுவது வழக்கம். பிரிந்து சென்ற பசுக்கள் மாலைநேரத்தில் திரும்பி வருவதை அவற்றின் கன்றுகள் எதிர்நோக்கி நிற்பதைப்போலப் பிரிந்து சென்ற தலைவனுடைய வரவை உரிய பருவத்தில் எதிர்நோக்கியிருக்கிறேன் என்று தலைவி கூறுகிறாள்.    


 ”தாய்ப் பசுவிற்கும் கன்றுக்கும் உள்ள அன்பு மிகச் சிறந்ததாதலின் அது தாய்க்கும் பிள்ளைக்குமுள்ள அன்புக்கு உவமை கூறப்படுவதோடு, தலைவன் தலைவியருக்கு இடையிலுள்ள அன்பு, இறைவன் அடியார்க்கு இடையிலுள்ள அன்பு முதலியவற்றிற்கும் உவமையாகக் கூறப்படுதல் மரபு.” என்று உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

63. பாலை - தலைவன் கூற்று

63. பாலை - தலைவன் கூற்று

பாடியவர்:  உகாய்க்குடி கிழார். இவர் உகாய்க்குடி என்னும் ஊரில் பிறந்தவர். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: பொருள் தேடவேண்டியதின் இன்றையமையாமையைப் பற்றித் தலைவன் எண்ணிப் பார்க்கிறான். பொருள் தேட வேண்டுமானல், வெளியூருக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால், தன் மனைவி தன்னுடன் வருவாளோ அல்லது தான் மட்டுயும் தனியே செல்ல வெண்டுமோ என்று தலைவன் சிந்திப்பதை இப்பாடல் சித்திரிக்கிறது.

ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே. 

அருஞ்சொற்பொருள்: ஈதல் = கொடுத்தல் ; துய்த்தல் = அனுபவித்தல்; கைம்மிகுதல் = அளவு கடத்தல்; எண்ணுதி = எண்ணுகிறாய்; அம்மா = +மா; = அழகிய; மா = மாமை நிறம்; அரிவை = பெண் (தலைவி); உய்த்தல் = செலுத்தல்; உரைத்திசின் = சொல்லுவாயாக. இசின்முன்னிலை அசைச் சொல்.

உரை: நெஞ்சே, இரவலர்க்குக் கொடுப்பதும், இன்பங்களை அனுபவிப்பதும், பொருளில்லாத வறியவர்க்கு இல்லையென்று கருதி, பொருள் செய்வதற்குரிய செயல்களை, அளவுகடந்து எண்ணுகிறாய். பொருள் செய்வதற்குத் துணையாக, அழகிய மாமை நிறத்தையுடைய என்னுடைய மனைவியும் என்னுடன் வருவாளா? அல்லது என்னை மட்டும் போகச் சொல்லுகிறாயோ? சொல்லுவாயாக.
    
விளக்கம்:    “'நெஞ்சே, நீ பொருள் தேடுவதற்காக வேற்றுநாட்டுக்குப் போக விரும்புகிறாய்அங்கே தலைவி வருவாளோ? அவள் வராவிட்டால் நான் மட்டும் போகவேண்டும்; இவளைப் பிரிந்து செல்வதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே.” என்று தலைவன் கூறுவது செல்லாமல் இருப்பதற்காக அன்று. போவதற்குமுன் தலைவிக்குத் தன் அன்பை வெளிப்படுத்தி ஆறுதல் கூறுவதற்காகத் தலைவன் தான் பிரிந்து செல்வதற்குக் காலம் தாழ்த்துகிறான். பிரிவின் பொழுது இவ்வாறு காலம் தாழ்த்துவதை, தொல்காப்பியம் செலவழுங்குதல்என்று குறிப்பிடுகிறது. இவ்வாறு காலம் தாழ்த்தி, ஆறுதல் கூறிப் பிரிந்து செல்வது நெடுங்காலமாகவே வழக்கிலிருந்தது என்பது தொல்காப்பியத்திலிருந்து தெரியவருகிறது.

செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே,
 வன்புறை குறித்த தவிர்ச்சி யாகும்"                                  (தொல். கற்பியல். 44)

பொருள்: பிரிந்து செல்லுதற்கிடையே சிலநாள் அதைத்தவிர்த்து இருத்தல், செல்லாமல் இல்லத்திலேயே இருப்பதற்கு அன்று. அது, பிரிவின் இன்றியமையாமையையும், தான் விரைவில் திரும்பி வருவதையும் எடுத்துரைத்துத் தலைவன் தலைவிக்கு ஆறுதல் கூறுவதைக் குறித்த தவிர்ச்சி ஆகும். மற்றும்,

புலவர் உகாய்க்குடி கிழார் இப்பாடலில் ஈதலை முன்வைத்துத் துய்த்தலைப் பின்வைத்தது ஈதலின் சிறப்பைக் குறிப்பிடுகிறது.

            ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
            ஊதியம் இல்லை உயிர்க்கு.                                                            (குறள் – 231)

என்ற குறள்  இங்கு நினைவு கூரத்தக்கது

62. குறிஞ்சி - தலைவன் கூற்று

62. குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 56-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஒரு ஆண்மகன் தற்செயலாக ஒரு பெண்ணைச் சந்திக்கிறான்.  முதல் சந்திப்பிலேயே அவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவளுடைய அழகும், அவளிடத்திலிருந்த நறுமணமும் அவள் தளிர்போன்ற மேனியும் அவனை மிகவும் கவர்ந்தது. முதல்நாள் அவளைச் சந்தித்த இடத்திற்கே  போனால் அவளை மீண்டும் சந்த்திக்கும் வாய்ப்பு இருக்கும் என்று எண்ணுகிறான். அதே இடத்திற்கே மீண்டும் செல்கிறான். அவள் வந்தால் அவளைத் தழுவ வேண்டும் என்று மிகுந்த ஆவலாக இருக்கிறான். அவளைத் தழுவுவதால் அவன் அடையப்போகும் இன்பத்தைக் கற்பனை செய்கிறான்.

கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையொ டிடையிடுபு விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே. 

அருஞ்சொற்பொருள்: கோடல் = வெண்காந்தள் மலர்; எதிர்தல் = தோன்றுதல்; முகை = மலரும் பருவத்தரும்பு; பசு = பசுமையான; வீ = பூ; நாறும் = மணக்கும்; குவளை = குவளை மலர்; இடையிடுபு = இடையில் இட்டு; விரைஇ = கலந்து; ஐது = அழகு; தொடை = தொடுத்தல்; மாண்ட = அழகிய; கோதை = மாலை; நறிய = மணமுள்ள; முறி = தளிர்; வாய் = சிறப்பு; முயங்குதல் = தழுவுதல்.

உரை: நெஞ்சே, காந்தள் மலரையும்,  அரும்பிலிருந்து தோன்றிய நல்ல  முல்லைப்பூக்களையும், மணமுள்ள இதழ்களையுடைய குவளைமலர்களையும் இடையிடையே கலந்து, அழகாகத் தொடுக்கப்பட்ட அழகிய மாலையைப்போல நறுமணத்தை உடைய தலைவின் உடல், தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் பொருந்தியது.  அது தழுவுதற்கும் இனியது.


விளக்கம்: தான் விரும்பும் பெண்ணின் முகம் ஒளிபொருந்திய காந்தள் மலரைப் போலவும், அவள் கண்கள் குவளை மலர்களைப் போலவும், அவள் பற்கள் முல்லை மலர்களைப் போலவும் அவள் மேனி மாந்தளிரைப்போலவும் இருந்ததைத் தலைவன் எண்ணிப் பார்க்கிறான்அவன் காதலி, கண்ணுக்கு இனியவளாகவும், நறுமணமுள்ளவளாகவும் இருந்தது மட்டுமல்லாமல் தழுவுவதற்கும் இனிமையானவளாக இருப்பாள் என்று தலைவன் எண்ணிப்பார்த்து மகிழ்ச்சி அடைகிறான்

61. மருதம் - தோழி கூற்று

61. மருதம் - தோழி கூற்று

பாடியவர்:   தும்பிசேர் கீரனார்.  கீரனார் என்பது இவரது இயற்பெயர். இவர் தும்பியைப் பற்றி நற்றிணையிலுள்ள ஒரு பாடலிலும் (277), குறுந்தொகையிலுள்ள ஒரு பாடலிலும்(392) குறிப்பிட்டிருப்பதால் இவர் தும்பிசேர் என்னும் அடைமொழியைப் பெற்றதாகக் கருதப்படுகிறது. இவர் குறுந்தொகையில் நான்கு பாடல்களும் ( 61, 316, 320, 392) நற்றிணையில் ஒரு பாடலும் (277) புறநானூற்றில் ஒருபாடலும் (249) இயற்றியுள்ளார். 

பாடலின் பின்னணி: மனைவியைப் பிரிந்து பரத்தையோடு வாழும் தலைவன் தன் இல்லத்திற்குத் திரும்பிவர விரும்புகிறான். தன் விருப்பத்தை மனைவியிடம் தெரிவிக்க ஒருதூதுவனை அனுப்புகிறான். அந்தத் தூதுவன் தலைவனின் மனைவியின் தோழியைச் சந்திக்கிறான்.  ”தலைவனோடு கூடி இன்பமாக இல்லாவிட்டாலும், அவனுடைய நட்பு மட்டுமே தலைவிக்குப் போதுமானதாக இருக்கிறது. அவள் தலைவனின் பிரிவால் வருந்தாமல் இருக்கிறாள்.” என்று தோழி தூதுவனிடம் கூறுகிறாள்.

தச்சன் செய்த சிறுமா வையம்
ஊர்ந்தின் புறாஅர் ஆயினுங் கையின்
ஈர்த்தின் புறூஉம் இளையோர் போல
உற்றின் புறேஎம் ஆயினும் நற்றேர்ப்
பொய்கை யூரன் கேண்மை
செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே. 

அருஞ்சொற்பொருள்: மா = குதிரை; வையம் = குதிரை பூட்டப்பட்ட வண்டி (அல்லது தேர்); ஈர்த்தல் = இழுத்தல்; உறுதல் = சேர்தல், தொடுதல்;ஊரன் = மருத நிலத் தலைவன்; கேண்மை = நட்பு; செறிதல் = இறுகுதல்.

உரை: தச்சனாற் செய்யப்பட்ட சிறிய குதிரை பூட்டப்பட்ட சிறிய தேரில், ஏறிச் செலுத்தி இன்பமடையாவிட்டாலும், கையால் இழுத்து இன்பமடையும் சிறுவரைப்போல, தலைவனோடு கூடி இன்பமடையாவிட்டாலும், நல்ல தேர்களையும், பொய்கையையுமுடைய மருதநிலத் தலைவனது நட்பினால் இன்பமடைந்தோம். அதனால். தலைவியின் வளையல்கள் கழலாமல் உள்ளன.

விளக்கம்: ”தச்சன் செய்த சிறு மாஎன்று கூறியதால் அத்தோடு தொடர்புடைய தேரும் சிறியது என்பது பெறப்படுகிறது.    சிறுவர்கள் பெரியவர்களைப்போல்  பெரியதேரில் சென்று இன்புறாவிட்டாலும், அந்தத் தேரைப்போல் செய்யப்பட்ட சிறுதேரை இழுத்து, பெரியோர் அடையும் இன்பத்தைப் பெறுவதுபோல, பரத்தையர் போல் தலைவனுடன் உடலுறவால் இன்பம் பெறாவிட்டாலும், அவனை நினைத்து உள்ளத்தில் நட்பை வளர்த்துப் பரத்தையர் போல், தலைவியும் இன்பத்தைப் பெறுகிறாள் என்று தோழி கூறுகிறாள். ”செறிந்தன வளையேஎன்பது தன்கணவனின் பிரிவால் தலைவி உடல் மெலியவில்லை என்பதைக் குறிக்கிறது. தலைவனின் நினைவால் தலைவி உள்ளத்தில் இன்பத்தோடும் உடல்நலத்தோடும் இருப்பதால், அவள் தலைவனின் வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கவில்லை என்பதைத் தோழி தூதுவனுக்கு மறைமுகமாகக் கூறுவதாகத் தோன்றுகிறது.

நற்றேர்ப் பொய்கை ஊரன்என்றது பரத்தையரோடு தேரில் சென்றும் பொய்கையில் நீராடியும் தலைவன் இன்புறுகிறான் என்பதைக் குறிக்கிறது.

புணர்ச்சிப் பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
 நட்பாங் கிழமை தரும்.                                (குறள். 785) 


என்ற திருக்குறள் இங்கு நினைவு கூரத்தக்கது.

60. குறிஞ்சி - தலைவி கூற்று

60. குறிஞ்சி - தலைவி கூற்று

பாடியவர்: பரணர். இவரை பற்றிய செய்திகளைப் பாடல் 19 – இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவனுடைய பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வருந்திய தலைவி, “தலைவர் என்னிடம் அருளும் அன்பும் இல்லாதவராக இருந்தாலும், அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும்அதுவே எனக்கு மிகுந்த இன்பத்தை அளிக்கும்.” என்று தன் தோழியிடம் கூறுகிறாள்.

குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே. 

அருஞ்சொற்பொருள்: தாள் = அடிப்பக்கம்; கூதளை = கூதளஞ்செடி; வரை = மலை; பெருந்தேன்தேனடையைக் குறிக்கிறது; இருக்கை = அமர்ந்திருக்கும்; கோலுதல் = குவித்தல்; சுட்டுபு = சுட்டி; நல்குதல் = அருள் கூர்தல் ; நயத்தல் = விரும்புதல்; கால் = காலம்.

உரை: குறுகிய அடியையுடைய கூதளஞ்செடி அசைந்து ஆடும் உயர்ந்த மலையிலுள்ள,  பெரிய தேனடையைக் கண்ட முடவன், காலில்லாததால் உட்கார்ந்துகொண்டே, தன் உள்ளங்கையை ஒரு சிறிய குடை (பாத்திரம்) போல் குவித்து, அம்மலையின் கீழே இருந்தபடியே, அந்தத் தேனடையைப் பலமுறை சுட்டிக்காட்டித்  தன் கையை நக்கி இன்புற்றதைப் போல, தலைவர் என்னிடம் அருளும் அன்பும் இல்லாதவராக இருந்தாலும் அவரைப் பலமுறை பார்ப்பதே என் உள்ளத்திற்கு இனிமையானதாக  இருக்கிறது.


விளக்கம்:  ”நெடுவரைஎன்றது காலுடையவர்களாலும் ஏறுதற்கு அரிய உயரமான மலை என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது. குடை என்றது பனையோலையால் செய்யப்பட்டு நீர் எடுப்பதற்கும் குடிப்பதற்கும் உணவுப்பொருள்களை வைப்பதற்கும் உரிய ஒருகருவி.  ”உட்கைச் சிறுகுடைஎன்றது முடவன் தன் உள்ளங்கையைக் குவித்து வைத்திருப்பது ஒருசிறிய குடைபோல் உள்ளது என்பதைக் குறிக்கிறது. ”முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டாற்போலஎன்னும் பழமொழி இங்கே நினைவு கூரத்தக்கது

59. பாலை - தோழி கூற்று

59. பாலை - தோழி கூற்று

பாடியவர்: மோசி கீரனார். இவர் மோசி என்பவரின் மகன் என்று சிலர் கருதுகின்றனர்.  வேறு சிலர், இவர் மோசுக்குடி அல்லது மோசிக்குடி என்ற ஊரைச் சார்ந்தவராக இருந்ததாலும், கீரர் குடியினராக இருந்ததாலும் மோசிகீரனார் என்று அழைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.  இவர் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறையையும் கொண்கான நாட்டுத் தலைவனையும் பாடியுள்ளார்.  இவர் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறையைக் காணச் சென்றபோது களைப்பு மிகுதியால் அங்கிருந்த முரசுக் கட்டிலில் படுத்து உறங்கினார்.  அதைக் கண்ட சேரமன்னன், இவரை உறக்கத்திலிருந்து எழுப்பாமல் இவருக்குக் கவரி வீசிய செய்தியைப் புறநானூற்றுப் பாடல் 50-இல் காணலாம்.  நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்என்ற கருத்துச் செறிவுள்ள பாடல் (புறநானூறு - 186) இவர் இயற்றிய பாடல்களில் ஒன்று.  இவர் புறநானூற்றில் ஐந்து செய்யுட்களும் (50, 154, 155, 156, 186) அகநானூற்றில் ஒரு செய்யுளும் ( 392), குறுந்தொகையில் இரண்டு செய்யுட்களும் (59, 84), நற்றிணையில் ஒரு செய்யுளும் (342) இயற்றியவர்.
பாடலின் பின்னணி: தலைவன் பொருள் தேடச் சென்றிருக்கிறான். அவன் பிரிவால் வருந்தும் தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.


பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அதலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்
நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும்
சுரம்பல விலங்கிய அரும்பொருள்
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே. 

அருஞ்சொற்பொருள்: பதலை = ஒருகண் பறை ; பாணி = இசை, ஒலி; பரிசிலர் = பரிசுகள் வேண்டிப் பிறரிடம் இரப்பவர்; கோமான் = அரசன், தலைவன்; அதலை = ஒரு குன்றின் பெயர் ; அகல்வாய் = அகன்ற வாய்; குண்டு = ஆழம்; சுனை = நீர்நிலை; குளவி = காட்டு மல்லிகை; பொதிதல் = நிறைதல்; நுதல் = நெற்றி; முயலவும்முயற்சிகளைச் செய்தாலும்; விலங்குதல் = குறுக்கிடுதல்.


உரை: பதலை என்னும் இசைக்கருவியை தாளத்தோடு இயக்கும் பாணர் முதலிய இரவலர்களைப் பாதுகாக்கும்  தலைவனுடைய அதலை என்னும் குன்றில் உள்ள அகன்ற வாயையுடைய ஆழமான நீர்நிலைகளில் மலர்ந்த குவளை மலர்களோடு நிறைந்த காட்டு மல்லிகையும் மணக்கும் உன்னுடைய மணம் கமழும் நெற்றியைத் தலைவர் மறப்பாறோபல முயற்சிகளைச் செய்தாலும், பாலை நிலத்தில், பல குறுக்கீடுகளால் கிடைத்தற்கரிய பொருள் முற்றிலும் கை கூடாததால் தலைவரின் பிரிவு நீடிக்காது, அவர் விரைவில் திரும்பி வருவார்