Monday, August 3, 2015

61. மருதம் - தோழி கூற்று

61. மருதம் - தோழி கூற்று

பாடியவர்:   தும்பிசேர் கீரனார்.  கீரனார் என்பது இவரது இயற்பெயர். இவர் தும்பியைப் பற்றி நற்றிணையிலுள்ள ஒரு பாடலிலும் (277), குறுந்தொகையிலுள்ள ஒரு பாடலிலும்(392) குறிப்பிட்டிருப்பதால் இவர் தும்பிசேர் என்னும் அடைமொழியைப் பெற்றதாகக் கருதப்படுகிறது. இவர் குறுந்தொகையில் நான்கு பாடல்களும் ( 61, 316, 320, 392) நற்றிணையில் ஒரு பாடலும் (277) புறநானூற்றில் ஒருபாடலும் (249) இயற்றியுள்ளார். 

பாடலின் பின்னணி: மனைவியைப் பிரிந்து பரத்தையோடு வாழும் தலைவன் தன் இல்லத்திற்குத் திரும்பிவர விரும்புகிறான். தன் விருப்பத்தை மனைவியிடம் தெரிவிக்க ஒருதூதுவனை அனுப்புகிறான். அந்தத் தூதுவன் தலைவனின் மனைவியின் தோழியைச் சந்திக்கிறான்.  ”தலைவனோடு கூடி இன்பமாக இல்லாவிட்டாலும், அவனுடைய நட்பு மட்டுமே தலைவிக்குப் போதுமானதாக இருக்கிறது. அவள் தலைவனின் பிரிவால் வருந்தாமல் இருக்கிறாள்.” என்று தோழி தூதுவனிடம் கூறுகிறாள்.

தச்சன் செய்த சிறுமா வையம்
ஊர்ந்தின் புறாஅர் ஆயினுங் கையின்
ஈர்த்தின் புறூஉம் இளையோர் போல
உற்றின் புறேஎம் ஆயினும் நற்றேர்ப்
பொய்கை யூரன் கேண்மை
செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே. 

அருஞ்சொற்பொருள்: மா = குதிரை; வையம் = குதிரை பூட்டப்பட்ட வண்டி (அல்லது தேர்); ஈர்த்தல் = இழுத்தல்; உறுதல் = சேர்தல், தொடுதல்;ஊரன் = மருத நிலத் தலைவன்; கேண்மை = நட்பு; செறிதல் = இறுகுதல்.

உரை: தச்சனாற் செய்யப்பட்ட சிறிய குதிரை பூட்டப்பட்ட சிறிய தேரில், ஏறிச் செலுத்தி இன்பமடையாவிட்டாலும், கையால் இழுத்து இன்பமடையும் சிறுவரைப்போல, தலைவனோடு கூடி இன்பமடையாவிட்டாலும், நல்ல தேர்களையும், பொய்கையையுமுடைய மருதநிலத் தலைவனது நட்பினால் இன்பமடைந்தோம். அதனால். தலைவியின் வளையல்கள் கழலாமல் உள்ளன.

விளக்கம்: ”தச்சன் செய்த சிறு மாஎன்று கூறியதால் அத்தோடு தொடர்புடைய தேரும் சிறியது என்பது பெறப்படுகிறது.    சிறுவர்கள் பெரியவர்களைப்போல்  பெரியதேரில் சென்று இன்புறாவிட்டாலும், அந்தத் தேரைப்போல் செய்யப்பட்ட சிறுதேரை இழுத்து, பெரியோர் அடையும் இன்பத்தைப் பெறுவதுபோல, பரத்தையர் போல் தலைவனுடன் உடலுறவால் இன்பம் பெறாவிட்டாலும், அவனை நினைத்து உள்ளத்தில் நட்பை வளர்த்துப் பரத்தையர் போல், தலைவியும் இன்பத்தைப் பெறுகிறாள் என்று தோழி கூறுகிறாள். ”செறிந்தன வளையேஎன்பது தன்கணவனின் பிரிவால் தலைவி உடல் மெலியவில்லை என்பதைக் குறிக்கிறது. தலைவனின் நினைவால் தலைவி உள்ளத்தில் இன்பத்தோடும் உடல்நலத்தோடும் இருப்பதால், அவள் தலைவனின் வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கவில்லை என்பதைத் தோழி தூதுவனுக்கு மறைமுகமாகக் கூறுவதாகத் தோன்றுகிறது.

நற்றேர்ப் பொய்கை ஊரன்என்றது பரத்தையரோடு தேரில் சென்றும் பொய்கையில் நீராடியும் தலைவன் இன்புறுகிறான் என்பதைக் குறிக்கிறது.

புணர்ச்சிப் பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
 நட்பாங் கிழமை தரும்.                                (குறள். 785) 


என்ற திருக்குறள் இங்கு நினைவு கூரத்தக்கது.

No comments:

Post a Comment