Monday, August 3, 2015

67. பாலை - தலைவி கூற்று

67. பாலை - தலைவி கூற்று

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 32-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: தலைவனுடைய பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாத தலைவி, தோழியை நோக்கி, “ பிரிந்து சென்ற தலைவர் நம்மை நினைப்பாரோ? அவருக்கு நம்மைப் பற்றிய  நினைவு இருந்தால், இந்நேரம் திரும்பி வந்திருப்பாரே!” என்று கூறுகிறாள்

உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல ஒருகா சேய்க்கும்
நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே. 
-.
அருஞ்சொற்பொருள்: கிள்ளை = கிளி; ஒண்பழம் = ஒளி பொருந்திய பழம்; நுதி = நுனி; வள் = கூர்மை; உகிர் = நகம்; பொலம் = பொன்; ஏய்த்தல் = ஒத்தல்; கரி = கரிந்தது; அம்ஒரு சாரியை; இறத்தல் = கடத்தல்.

உரை: தோழி, கிளி தன்வளைந்த அலகினிடத்திலே கொண்ட ஓளி பொருந்திய  வேப்பம்பழமானது, புதிய பொற்கம்பியை உள்ளே செலுத்தும் பொற்கொல்லனுடைய,   கூரிய கைந்நகத்திற் கொண்ட  பொன்மாலைக்கான ஒரு காசுபோல் உள்ளது.  அத்தகைய வேப்பமரம் உள்ள, வெய்யிலால் சுட்டெரிக்கப்பட்ட கருமையான, கள்ளிச்செடிகளையுடைய பாலை நிலத்தைக் கடந்து சென்ற தலைவர், என்னை நினைக்க மாட்டாரோ?


விளக்கம்: கிளியின் அலகுக்குக் கைவிரல் நகங்களும், வேப்பம் பழத்திற்கு உருண்டையான பொற்காசும் உவமைகள். இப்பாடலிலிருந்தும், நற்றிணையின்  274 – ஆம் பாடலிலிருந்தும், குறுந்தொகையின் 148 – ஆம் பாடலிலிருந்தும் சங்க காலத்தில் சில காசுகள் வேப்பம்பழம்போல் உருண்டையாக இருந்தன என்று தெரியவருவதாக உ. வே. சாமிநாத ஐயர் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment