Monday, August 17, 2015

73. குறிஞ்சி - தோழி கூற்று

73. குறிஞ்சி - தோழி கூற்று

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 19-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தலைவனும்தலைவியும் முதலில் பகலில் சந்திதார்கள். பின்னர், இரவு நேரங்களில் சந்தித்தனர். இவ்வாறு களவொழுக்கம் தொடர்ந்தது. ஆனால் தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளைச் செய்யவில்லை. அதனால், தோழியும் தலைவியும்  வருத்தமுற்றனர். “உனக்குத் திருமணம் விரைவில் நடைபெற வேண்டுமானால், நாம் சற்று சிந்தித்துத் தந்திரமாகச் செயல்பட வேண்டும்.” என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போக்கிய
ஒன்று மொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே. 

அருஞ்சொற்பொருள்: மகிழ்நன் = தலைவன்; வெய்யை = விரும்புகிறாய்; அழியல் = வருந்தாதே; நன்னன் = சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன்; நறு = மணம் பொருந்திய; மா = மாமரம்; ஒன்றுமொழி = உறுதிமொழி ( வஞ்சினம்); கோசர் = பழைய வீரர் குடியினுள் ஒரு சாரார்; வன்கண் = கொடுமை; சூழ்ச்சி = ஆராய்ச்சி (தந்திரம்).
உரை: தோழி, நீ தலைவனது மார்பை (தலைவனை) விரும்புகிறாய்.  உனக்கும் அவனுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவேண்டுமானால், நன்னன் என்னும் அரசனுடைய காவல்மரமாகிய மாமரத்தை வெட்டி, அவனது நாட்டினுள் புகுந்து, வஞ்சினம் கூறிய கோசரைப் போல, நாம் சிந்தித்துத் தலைவன் வருந்துமாறு சிறிது தந்திரமாக ஒருதிட்டம் தீட்டவேண்டும். நீ வருந்தாதே.

விளக்கம்: நன்னன் என்ற பெயரில் பல குறுநில மன்னர்கள் தென்னிந்தியாவின் பல பகுதிகளை வெவ்வேறு காலத்தில் ஆட்சி செய்ததாகத் தெரிகிறது. இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும்  நன்னன் என்பவன் கொங்கு நாட்டுக்கு அருகில் இருந்த ஒரு மலைநாட்டை ஆட்சி புரிந்தவன் என்று கருதப்படுகிறது. அவனது காவல் மரம் ஒரு மாமரம்.  அந்த மரத்திலிருந்து விழுந்த மாம்பழம் ஒன்று ஆற்றுநீரில் மிதந்து வந்தது. நீராடிய கோசர் குடிப் பெண்ணொருத்தி அந்தப் பழத்தை எடுத்துத் தின்றாள். அவள் அந்தப் பழத்தைத் தின்றதைக் குற்றமாகக் கருதிய நன்னன் அவளுக்குக் கொலைத் தண்டனை விதித்தான். ஆகவே, அவன் பெண்கொலை புரிந்த் நன்னன் என்று அழைக்கப்பட்டான் (குறுந்தொகை 292). தங்கள் குலப்பெண் ஒருத்தியை நன்னன் கொலை செய்ததால், கோபமுற்ற கோசர், ஒரு சூழ்ச்சி செய்து, நன்னனின் காவல் மரத்தை வெட்டி வீழ்த்தினர். கோசர்கள் செய்த சூழ்ச்சி இன்னதென்று தெரியவில்லை.
ஒன்றுமொழி என்பது வெவ்வேறு விதமாகப் பேசாமல் உறுதியாக ஒன்றைச் சொல்லுவதைக் குறிக்கிறது. ஆகவே, ஒன்றுமொழி என்பதற்கு வஞ்சினம் என்று பொருள் கொள்ளலாம். வஞ்சினம் கூறினால் அதை நிறைவேற்றுவதில் கோசர்கள் வல்லவர்கள் என்பது குறுந்தொகையின் 15 –ஆம் பாடலிலிருந்து தெரிய வருகிறது. கோசர்கள் தங்கள் வஞ்சினத்தை நிறைவேற்றுவதைப் போல், தலைவனை இனி சந்திக்க முடியாது என்று கூறி, உறுதியுடன் சொன்ன சொல்லைக் காப்பாற்றினால், தலைவன் திருமணத்திற்குத் தேவையான முயற்சிகளைச் செய்வான் என்பது குறிப்பு.

No comments:

Post a Comment