Tuesday, October 6, 2015

96. தலைவி கூற்று

96. தலைவி கூற்று

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 32 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தலைமகனை இயற்பழித்துத் (இயல்பைப் பழித்துத்) தெருட்டும் ( தெளிவு படுத்தும்) தோழிக்குத் தலைமகள் இயற்படச் ( இயல்பைச் சிறப்பித்துச்) சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்வதற்குக் காலம் தாழ்த்துகிறான். திருமணத்திற்கான முயற்சிகள் எவற்றையும் தலைவன் செய்யவில்லை. இதை அறிந்த தோழி தலைவன்மீது கோபம் கொள்கிறாள். ஆகவே, அவள் தலைவனை இகழ்ந்து பேசுகிறாள். அதைக் கேட்ட தலைவி , “ நீ விளையாட்டுக்காக அவ்வாறு பேசினாய் என்று நினைக்கிறேன்நீ தலைவனைப் உண்மையாகவே பழித்துப் பேசியிருந்தால், நீ மிகவும் துன்பப்படுவாய்.” என்று கூறித் தோழியிடம் சினந்துகொள்கிறாள்.

அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு
யானெவன் செய்கோ என்றி யானது
நகையென உணரேன் ஆயின்
என்னா குவைகொல் நன்னுதல் நீயே. 

கொண்டுகூட்டு: நன்னுதல் !அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு ”யான் எவன் செய்கோ ?” என்றி. யான் அது நகை என உணரேன் ஆயின் நீ என்ஆகுவை

அருஞ்சொற்பொருள்: வேங்கை = ஒரு வகை மரம்; என் செய்கோ = என்ன செய்வேன்; நகை = மகிழ்ச்சி தோன்ற விளையாட்டாகப் பேசுவது; நன்னுதல் = நல் +நுதல் = நல்ல நெற்றி.

உரை: நல்ல நெற்றியை உடைய தோழி ! அருவியின் அருகில் வளரும் வேங்கை மரங்களையுடைய, பெரிய மலையையுடைய நாட்டுக்குரிய தலைவனை என்னால் என்ன செய்ய முடியும் என்று கூறி நீ அவனை பழித்துப் பேசினாய். நீ அங்ஙனம் கூறியதை, நான் நீ விளையாட்டுக்காக கூறினாய் என்று எண்ணாமல் இருந்திருந்தால் நீ என்ன பாடு பட்டிருப்பாய் என்று தெரியுமா?


சிறப்புக் குறிப்பு:  ”அருவி வேங்கைப் பெருமலை நாடன்என்றது, அருவி தன்னைச் சார்ந்த வேங்கையைப் பாதுகாப்பதைப் போலத் தலைவன் தன்னை பாதுகாப்பான் என்று தலைவி எண்ணுவதைக் குறிக்கிறது.

95. தலைவன் கூற்று

95. தலைவன் கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தலைமகன் பாங்கற்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: மனம் வருந்தி உடல் மெலிந்து காணப்படும் தலைவனை நோக்கித் தோழன், “ உனக்கு என்ன ஆயிற்று? இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்ன ?” என்று கேட்கிறான். “ஒரு  இளம்பெண்னின் மீது நான் கொண்ட காதலால் எனக்கு இந்த நிலை வந்தது.”  என்று தலைவன் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

மால்வரை இழிதருந் தூவெள் அருவி
கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
நீரோ ரன்ன சாயல்
தீயோ ரன்னவென் உரனவித் தன்றே. 

கொண்டுகூட்டு: மால்வரை இழிதரும் தூவெள் அருவி கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல் சிறுகுடிக் குறவன் பெருந்தோள் குறுமகள் நீரோரன்ன சாயல் தீயோரன்ன என் உரன் அவித்தன்றே. 

அருஞ்சொற்பொருள்: மால் = பெரிய ; வரை = மலை; இழிதல் = விழுதல்; தூ = தூய்மையான; முகை = குகை; கன்முகை = கல் + முகை = பாறைகளின் வெடிப்பு; ததும்புதல் = ஒலித்தல்; சாரல் = மலைப்பக்கம்; குறவன் = குறிஞ்சிநிலத்தில் வாழ்பவன்; ஓர்அசைச்சொல்; சாயல் = மென்மை; உரன் = மனவலிமை, ஊக்கம்; அவித்தல் = கெடுத்தல்.

உரை: தோழனே, பெரிய மலையிலிருந்து விழும் தூய வெண்மையான அருவி,  பாறைகளின் வெடிப்புக்களில் ஒலிக்கின்ற, பல மலர்களையுடைய மலைப்பக்கத்தில் உள்ள, சிற்றூரிலுள்ள குறவனுடைய, பெரிய தோளையுடைய இளம்பெண்ணின் நீரைப் போன்ற மென்மை, தீயைப் போன்ற என் வலிமையைக் இழக்கச் செய்தது.

சிறப்புக் குறிப்பு: ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு (1308).” என்ற குறளில் வள்ளுவர்போர்க்களத்தில் வலிய பகைவரும் அஞ்சி நடுங்கத் தக்க என் பெருமிதம், இவள் ஒளி பொருந்திய நெற்றிக்கு ஆற்றாமல் தோற்று விட்டதே!”, என்று கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
எதிர்ப்பட்ட பொருள் அனைத்தையும் அழிக்கும் தன்மை உடையதால், அழிக்கும் வலிமைக்குத் தீயை உவமை கூறுவது மரபு.  “வளித்தலைஇய தீயும்... போல... தெறலும் ... உடையோய்  (புறநானூறு. 2:4-8)” என்று புறநானூற்றில் முரஞ்சியூர் முடிநாகனார் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனின் வலிமைக்குத் தீயை உவமையாகக் குறிப்பிட்டிருப்பதும், ”நீரினும் இனிய சாயல் பாரி வேள்என்று புறநானூற்றுப் பாடல் 105 – இல் கபிலர் பாரியின் இனிய தன்மைக்கு நீரை உவமையாகக் கூறியிருப்பதும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

94. தலைவி கூற்று

94. தலைவி கூற்று

பாடியவர்: கதக்கண்ணனார். சங்க இலக்கியத்தில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்று மட்டுமே.
திணை: முல்லை.
கூற்று: பருவம் கண்டு ஆற்றாள்'' எனக் கவன்ற(கவலைப் பட்ட) தோழிக்கு, ''ஆற்றுவல்'' என்பதுபடத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் மழைக்காலத்திற்கு முன்னரே திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான். இப்பொழுது மழைக்காலம் வந்துவிட்டது. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. ஆகவே, தலைவி வருத்தமாக இருப்பாள் என்று எண்ணி, தோழி தலைவியைக் காண வருகிறாள். தலைவி பிச்சிப்பூக்களை உற்று நோக்கியவாறு இருக்கிறாள். “பிச்சிப் பூக்களையே பார்த்துக்கொண்டு மிகுந்த சிந்தனையோடு இருக்கிறாயே ! தலைவனை நினைத்து வருத்தமாக இருக்கிறாயா?” என்று தோழி தலைவியைக் கேட்கிறாள். “இன்னும் மழைக்காலம் வரவில்லை. தலைவன் வரும்வரை நான் பிரிவைப் பொறுத்துக்கொள்வேன். ஆனால்மழைக்காலத்திற்கு முன்னதாகவே இந்தப் பிச்சிப்பூக்கள் பூக்க ஆரம்பித்துவிட்டன. அவை அறிவில்லாதவை. மேகம் முழங்குகின்றது; மழை பெய்கிறது; இதைக் கண்டு, தான் சென்ற காரியத்தை முடிக்காமலே தலைவர் திரும்பிவிடுவரோ என்று அஞ்சினேன்.” என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே
யானே மருள்வேன் தோழி பானாள்
இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும்
என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே
அருவி மாமலை தத்தக்
கருவி மாமழைச் சிலை தருங் குரலே. 

கொண்டுகூட்டு: தோழி ! பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே; யானே மருள்வேன்; இன்னுந் தமியர் பிரிந்திசினோர் அருவி மாமலை தத்தக் கருவி மாமழைச் சிலைதரும் குரல் பானாள் கேட்பிற் பெயர்த்தும்என் ஆகுவர் கொல் ?

அருஞ்சொற்பொருள்: பெரு = பெரிய; தண்மை = குளிர்ச்சி; மாரி = மழைக்காலம் (கார்காலம்ஆவணி, புரட்டாசி மாதங்கள்) ; பேதைமை = அறிவின்மை; பித்திகம் = பிச்சிப்பூ; மருள்தல் = மயங்குதல்; பால் = பகுதி; பானாள் = பால் + நாள் = நடுநாள், நள்ளிரவு (இங்கு, நள்ளிரவைக் குறிக்கிறது); தமியர் = தனியர்; பிரிந்திசினோர் = பிரிந்தவர்; தத்துதல் = தாவிச்செல்லுதல்; கருவி = தொகுதி; மழை = மேகம்; சிலைத்தல் = ஒலித்தல் ; குரல் = ஓசை.

உரை: தோழி, மிகுந்த குளிர்ச்சியையுடைய மழைக்காலத்துக்குரிய பிச்சியின் அரும்புகள், ஆறிவில்லாதவை. அவை தாம் சிவக்க வேண்டிய காலத்திற்கு முன்பே மிகவும் சிவந்தன; அவற்றைக் கண்டு இது கார்காலம் (மழைக்காலம்) என்று நான் மயங்கமாட்டேன். ஆயினும்இன்னும் என்னிடம் வந்துசேராமல் என்னைப் பிரிந்து தனித்து இருக்கும் என் தலைவர், பெரிய மலையிலிருந்து அருவி நீர் பாய்ந்து விழும்படி மேகக் கூட்டங்கள்  ஒன்றாகச் சேர்ந்து  மழை பெய்து முழங்கும் ஓசையை நள்ளிரவில் கேட்டால், ஏற்கனவே என்னைப் பிரிந்து வருந்தும் அவர் மீண்டும் எந்த நிலையை அடைவாரோ!


சிறப்புக் குறிப்பு: பிச்சிப்பூ மழைக்காலத்தில் சிவந்த நிறமாக இருக்கும் இயல்பையுடைய பூமழைக்காலம் வந்துவிட்டது. அதற்கு அறிகுறியாகத்தான் பிச்சிப்பூக்கள் பூக்க ஆரம்பித்துள்ளன. தலைவன் இன்னும் திரும்பி வராததால், இன்னும் மழைக்காலம் வரவில்லை என்று தலைவி எண்ணுகிறாள். மேகம் மழை பொழிந்ததால் மழைக்காலத்திற்கு முன்னரே பிச்சிப்பூக்கள் சிவந்ததாகத் தலைவி எண்ணுகிறாள். ஆகவே, பிச்சிப்பூவை அறிவில்லாத பூ என்று கூறுகிறாள்

93. தலைவி கூற்று

93. தலைவி கூற்று

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 32 – இல் காணலாம்.
தினை: மருதம்.
கூற்று: வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பரத்தையரோடு சிலகாலம் வாழ்ந்து, இப்பொழுது மனைவியோடு இல்லறத்தைத் தொடர்வதற்காக வந்திருக்கிறான். தலைவி மிகுந்த கோபத்தோடு இருக்கிறாள். “அவர் உன்மீது மிகுந்த அன்புடையவர். அவரை ஏற்றுக்கொள். வேண்டுமானால், கொஞ்சம் ஊடல் செய்து, அதன் பிறகு அவரை ஏற்றுக்கொள்.” என்று தோழி தலைவியிடம் தலைவனுக்காகப் பரிந்து பேசுகிறாள்.“ ”அவருக்காக நீ என்னிடம் பரிந்து பேசாதே. எனக்கு அவர்மீது கோபம்தான் உள்ளதே தவிர காதல் இல்லை. நான் ஏன் அவரோடு ஊட வேண்டும்?” என்று கூறித் தலைவி தன் கணவனை ஏற்க மறுக்கிறாள்.

நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரைய லவர்நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே. 

கொண்டுகூட்டு: தோழி!  நன்னலந் தொலைய நலமிகச் சாஅய் இன்னுயிர் கழியினும் உரையல் ! அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ? அன்பிலங் கடையே புலவி அஃது எவனோ?

அருஞ்சொற்பொருள்: நன்னலம் = பெண்மை நலம்; தொலைதல் = கெடுதல்; சாய்தல் = மெலிதல்; கழிதல் = நீங்குதல்; உரையல் = சொல்லாதே; அத்தன் = தந்தை; புலவி = ஊடல்; கடை = இடம்.

உரை: தோழி,  என்னுடைய நல்ல பெண்மை நலம் கெட்டு, உடலழகு மிகவும் மெலிந்து என் இனிய உயிரே போனாலும் அவரைப் பற்றிப் பரிவான சொற்களை என்னிடம் சொல்லாதே. என் கணவரை நான் என்னுடைய தாயைப் போலவும் தந்தையைப் போலவும் மதிக்கிறேன். ஆனால், ஒருமனைவிக்கு கணவனிடத்தில் இருக்க வேண்டிய அன்பு (காம உணர்வு) எனக்கு அவரிடம் இல்லாததால் அவரோடு நான் ஏன் ஊட வேண்டும்?
சிறப்புக் குறிப்பு: தலைவனிடத்தில் தலைவிக்குக் கோபம் மட்டுமே உள்ளது. தன் பெற்றோரிடம் மரியாதை உடையவளாக இருப்பதுபோல் அவனிடமும் பழக விரும்புகிறாள். அவன் அவளைவிட்டுப் பிரிந்து பரத்தையரோடு வாழ்ந்ததால் அவள் அவன்மீது கோபமாக இருக்கிறாள். “என் கணவரிடம் எனக்குக் காமம் இருந்தால்தானே ஊடவேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றும். எனக்குத்தான் அவரோடு கூட வேண்டும் என்ற விருப்பமே இல்லயே. நான் ஏன் அவரோடு ஊடவேண்டும்? ” என்று தலைவி எண்ணுகிறாள்.

நீரும் நிழலது இனிதே; புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.                                                                (குறள் – 1308)

 என்ற குறளும்,

ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம்
 கூடி முயங்கப் பெறின்.                                                                   (குறள் 1330)


என்ற குறளும்  இங்கு ஒப்பு நோக்கத் தக்கவை

92. தலைவி கூற்று

92. தலைவி கூற்று

பாடியவர்: தாமோதரனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: காமம் மிக்க கழிபடர் கிளவியால், பொழுது கண்டு, சொல்லியது.
கூற்று விளக்கம்: மாலைப்பொழுது வந்துவிட்டது. பறவைகள் தங்களின் குஞ்சுகளுக்காக இரையைத் தங்கள் வாயில் கவ்விக்கொண்டு தங்களின் கூடுகளை நோக்கிப் பறந்து செல்கின்றன. அதை பார்த்த தலைவிக்குத் தன்னுடைய தனிமையும், மாலைநேரத்தில் தன்னைத் துன்புறுத்தும் காமநோயும் நினைவிற்கு வருகின்றன. தன் கணவர் தன்னோடு இல்லையே என்ற வருத்தத்தைத் தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறையுற வோங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே. 

கொண்டுகூட்டு: கொடுஞ்சிறைப் பறவை இறையுற ஓங்கிய நெறி அயல் மராஅத்த, பிள்ளை உள்வாய்ச் செரீஇயஇரைகொண்டமையின், ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து  விரையுமாற் செலவு; (அவை) அளிய தாமே.

அருஞ்சொற்பொருள்: படுதல் = மறைதல்; அகல் வாய் = அகன்ற இடம்; அளிய = இரங்கத்தக்கன; கொடு = வளைந்த ; சிறை = சிறகு; இறையுறல் = தங்குதல்; ஓங்கிய = உயர்ந்த; நெறி = வழி; அயல் = அருகில்; மராம் = கடம்பு மரம்; பிள்ளை = குஞ்சு; உள்வாய் = வாயினுள்ளே; செரீஇய = செருகுவதற்கு; இரை = விலங்கு, பறவை முதலியவற்றின் உணவு ; செலவு = பயணம்.

உரை: வளைந்த சிறகுகளையுடைய பறவைகள், தாம் தங்குவதற்கேற்ப வழியின் அருகில்  உள்ள கடம்பு மரத்தில் இருக்கும் தம் குஞ்சுகளுக்கு, வாய்க்குள் ஊட்டுவதற்காகத் தம் அலகில் இரையை எடுத்துக் கொண்டமையால், கதிரவன் மறைந்த அகன்ற இடத்தையுடைய வானத்தில் விரைந்து பறந்து செல்கின்றன. அவை இரங்கத் தக்கன.

சிறப்புக் குறிப்பு: பிரிந்து சென்ற தன் கணவர் இன்னும்  வரவில்லையே என்று தலைவி இரங்குகிறாள். மாலைநேரத்தில் தோன்றும் காமநோயும் அவளை வருத்துகிறது.  இந்தப் பறவைகளுக்கு உள்ள குடும்பப் பாசம் தன் கணவிரிடம் இல்லையே என்ற ஏக்கமும் அவளைத் துன்புறுத்துகிறது.


அகத்திணைப் பாடல்களில் உரிப்பொருள் இருக்க வேண்டும். அதாவது, “புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல்என்ற ஐந்து வகையான உரிப்பொருள்களில் ஒன்று இருக்க வேண்டும். ஆனால், இப்பாடலில் உரிப்பொருள் எதுவும் வெளிப்படையாக இல்லை. இப்பாடல் தலைவியின் இரங்கலை மறைமுகமாகக்  குறிப்பதால், இப்பாடல் நெய்தல் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

91. தலைவி கூற்று அல்லது தோழி கூற்று

91. தலைவி கூற்று அல்லது தோழி கூற்று

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 15 – இல் காணலாம்.
திணை: மருதம்
கூற்று: 1) பரத்தையர் மாட்டுப் பிரிந்த தலைமகன், வாயில் வேண்டிப் புக்கவழித் (தூதுவன் வந்து கேட்ட பொழுது) தன் வரைத்தன்றி அவன் வரைத்தாகித் (மனம் தன் கட்டுப்பாட்டை விட்டு அவனிடம் சென்று) தன் நெஞ்சு நெகிழ்ந்துழித் தலைமகள் அதனை (நெஞ்சை) நெருங்கிச் சொல்லியது.
கூற்று: 2) பரத்தையிற் பிரிந்து வந்தவழி வேறுபட்ட கிழத்தியைத் (தலைவியைத்) தோழி கூறியதூஉமாம்.
 கூற்று விளக்கம் -1: தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையுடன் வாழ்கிறான். அவன் தன் இல்லத்திற்குத் திரும்பிச் சென்று தன் மனைவியுடன் வாழ விரும்புகிறான். தன் விருப்பத்தைத் தெரிவிக்கப் பாணன் ஒருவனைத் தலைவன் தூதுவனாக அனுப்புகிறான். தலைவி தலைவன்மீது கோபமாக இருக்கிறாள்தூதுவன் தலைவன் திரும்பிவந்து உன்னோடு வாழ விரும்புகிறான்.” என்று சொன்னவுடன், தலைவியின் நெஞ்சம் தலைவன் வரவை விரும்புகிறது. தன் நெஞ்சம் தலைவன் வரவை விரும்புவதைக் கண்ட தலைவி, “அவனை அன்போடு நீ ஏற்றுக் கொண்டால், நீ  பலநாட்கள் தூக்கமின்றித் துன்பத்தை அடைவாய்என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறுகிறாள்.

கூற்று விளக்கம் – 2: இந்தப் பாடலின் பின்னணியை சற்று வேறுவிதமாகவும் எண்ணிப் பார்க்கலாம். தலைவனை ஏற்றுக்கொள்ள விரும்பும் தலைவியை நோக்கித்  தோழி, “ நீ இப்பொழுது அவனை ஏற்றுக் கொண்டால் அவன் மீண்டும் உன்னை விட்டுவிட்டுப் பரத்தையிடம் செல்லமாட்டான் என்று உனக்கு எப்படித் தெரியும்? நீ அவனை ஏற்றுக் கொண்டால், நீ பல நாட்கள் தூக்கமின்றித் துன்பப்படப் போகிறாய்.” என்று எச்சரிப்பதாகவும் எண்ணிப் பார்க்கலாம். இந்தப் பின்னணியில், இந்தப் பாடலைத்  தோழியின் கூற்றாகக் கருதுவது சிறந்ததாகத் தோன்றுகிறது.

அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்டுறை ஊரன் பெண்டினை யாயிற்
பலவா குகநின் நெஞ்சிற் படரே
ஓவா தீயு மாரி வண்கைக்
கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி
கொன்முனை இரவூர் போலச்
சிலவா குகநீ துஞ்சு நாளே. 

கொண்டுகூட்டு: அரில் பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி  குண்டுநீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம் தண்துறை  ஊரன் பெண்டினையாயின், நின் நெஞ்சிற் படர் பலவாகுக ! ஓவாது ஈயும்  மாரி வண்கைக் கடும்பகட்டு யானை நெடுந்தேர் அஞ்சி(யின்கொன்முனை இரவு ஊர் போலநீ துஞ்சு நாளே சிலவாகுக !

அருஞ்சொற்பொருள்: அரில் =  பின்னிக் கிடத்தல்; பவர் = அடர்ந்த கொடி; பிரம்பு = ஒரு கொடி; குண்டு = ஆழம்; இலஞ்சி = குளம்; கெண்டை =  ஒருவகை மீன்; கதூஉம் = கவ்வும்; தண்டுறை = தண் + துறை = குளிர்ந்த நீர்த்துறை; பெண்டு = மனைவி; படர் = துன்பம்; ஓவாது = ஒழியாது (இடைவிடாது); மாரி = மேகம்; வண்கை = வண்மையுடைய கை; பகடு = யானை, எருமை, பசு இவற்றின் ஆண்; அஞ்சி = அதியமான் நெடுமான் அஞ்சி; கொன்முனை = கொன் + முனை; கொன் = அச்சம்; முனை = போர்முனை; துஞ்சுதல் = தூங்குதல்.

உரை: ஒன்றோடு ஒன்றாகப் பின்னிக் கிடக்கும் அடர்ந்த பிரப்பங்கொடியில் விளைந்த, புறத்தே வரிகளையுடைய  பழத்தை, ஆழமான நீரையுடைய குளத்தில் உள்ள கெண்டைமீன் கவ்வும் இடமாகிய குளிர்ந்த நீர்த்துறைகளையுடைய ஊர்த் தலைவனின் மனைவியாக நீ உன்னைக் கருதினால், உன் உள்ளத்தில் துன்பங்கள் பலவாக ஆகுக ! இடைவிடாது, மேகம் போல் கைம்மாறு கருதாத வள்ளல் தன்மை மிகுந்த கையையும், விரைந்து செல்லும் யானைகளையும், நெடிய தேர்களையும் உடைய அதியமான் நெடுமான் அஞ்சியின் அச்சம் தரும் போர்க்களத்தின் அருகில் உள்ள ஊர்மக்கள், எப்படி இரவில் உறங்காமல் இருப்பார்களோ அதுபோல் நீ உறங்கும் நாட்களும் சிலவே ஆகுக.


சிறப்புக் குறிப்பு: பிரப்பங்கொடியில் பழுத்து முதிர்ந்த பழத்தைக் கெண்டை கவ்வும் என்றது தலைவனை எளிதில் கவர்ந்துகொள்ளும் பரத்தையை உள்ளுறை உவமமாகக் குறிக்கிறது.

90. தோழி கூற்று

90.  தோழி கூற்று

பாடியவர்: மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார். இவருடைய இயற்பெயர் பூதன் என்றும் இவர் சேந்தன் என்பவரின் மகன் என்றும் கருதப்படுகிறது. இவர் அரசரின்  கட்டளைகளை எழுதும் தொழிலை உடையவர். இவர் குறுந்தொகையில் மூன்று பாடல்களும் (90, 226, 247), நற்றிணையில் இரண்டு பாடல்களும் ( 69, 261) அகநானூற்றில் ஒரு பாடலும் (84, 207) இயற்றியுள்ளார்.  
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகத் தோழி கூறியது.
கூற்று விளக்கம் : தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருந்தனர். தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளைச் செய்யவில்லை. அவர்களுடைய உறவு ஊரில் பலருக்கும் தெரிய ஆரம்பித்தது. அதனால், அலர் தோன்றியது. தலைவன் திருமணத்திற்குக் காலம் தாழ்த்துவதை எண்ணி வருந்தித் தலைவி உடல் மெலிந்தாள். ஒருநாள் இரவு, தலைவியைக் காணவந்த தலைவன் வேலிக்குப் புறத்தில் மறைவான இடத்தில் நின்றுகொண்டிருக்கிறான்தலைவன் அங்கே இருப்பதை அறிந்த தோழி, அவன் காதில் கேட்கும்படி, “ உடல் மெலிந்தாலும், நீ இன்னும் மன அமைதியோடும் உறுதியோடும் இருக்கிறாயே ! அது எப்படி?” என்று தன் வியப்பைத் தலைவியிடம் கூறுகிறாள்.

எற்றோ வாழி தோழி முற்றுபு
கறிவளர் அடுக்கத் திரவின் முழங்கிய
மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்
கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி
வரையிழி அருவி உண்துறைத் தரூஉம்
குன்ற நாடன் கேண்மை
மென்தோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே. 

கொண்டுகூட்டு: தோழி ! வாழிகறிவளர் அடுக்கத்து  இரவின் முழங்கிய முற்றுபு மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க் கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனியை  வரையிழி அருவி உண்துறைத் தரூஉம் குன்றநாடன் கேண்மை மென்தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றேஎற்றோ !

அருஞ்சொற்பொருள்: எற்றுஎத்தகையது; முற்றுபு = முற்றிய; கறி = மிளகு; அடுக்கம் = மலைப்பக்கம்; மங்குல் = மேகம்; மா = பெரிய; பொங்குதல் = மிகுதல்; கலை = ஆண் கருங்குரங்கு; இழுக்கிய = நழுவிய; பூநாறு = பூ போன்ற மணத்தையுடைய; பலவுக்கனி = பலாப்பழம்; வரை = மலை; இழிதல் = விழுதல்; உண்துறை = நீர் உண்ணும் துறை; தரூஉம் = தரும்; கேண்மை = நட்புசால்பு = மன அமைதி, உறுதி போன்ற நற்பண்புகள்; ஈனுதல் = தருதல்.

உரை:  தோழிநீ வாழ்க ! மிளகுக்கொடி வளர்கின்ற மலைப்பக்கத்தில், இரவில் கரிய மேகம் முழக்கத்தோடு பெரிய மழையைப் பெய்ததால், மிகுந்த மயிரையுடைய ஆண் கருங்குரங்கு தீண்டியதால் நழுவிய, பூ போன்ற மணத்தை வீசும் பலாப்பழத்தை, மலைப்பக்கத்தில் விழும் அருவிநீருண்ணுந் துறைக்குக் கொண்டுவருகின்ற குன்றுகள் உள்ள நாட்டையுடைய தலைவனது நட்புஉன் மெல்லிய தோள்களை மெலியச் செய்தாலும், அமைதியைத் தந்தது ! இஃது எத்தகையது!
சிறப்புக் குறிப்பு: இரவில் பொழிந்த பெருமழையினால் குரங்கு தீண்டிய பலாப்பழம் ஊர் மக்கள் நீருண்ணும் துறைக்கு வந்து சேர்ந்தது என்பது களவொழுக்கத்தில் தலைவனோடு இருந்த தொடர்பு இப்பொழுது ஊர் மக்கள் பலருக்கும் தெரியும் வகையில் அலராகத் தோன்றியுள்ளது என்பதை உள்ளுறை உவமமாகக் குறிக்கிறது.

எற்றுஎன்றது தலைவனின் நட்பால் தோன்றிய அலரால் உடல் மெலிந்தாலும் தலைவி மன அமைதியோடும் உறுதியோடும் இருப்பதைக் கண்டு தோழி வியப்பதைக் குறிக்கிறது.