Tuesday, February 9, 2016

151. தலைவன் கூற்று

151. தலைவன் கூற்று

பாடியவர்
: தூங்கலோரியார். இவர் குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (151, 295), நற்றிணையில் ஒருபாடலும் (60) இயற்றியுள்ளார்.
திணை: பாலை.
கூற்று: பொருள் வலிக்கப்பட்ட (பொருளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்த) நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதில் மிகுந்த விருப்பமுடையவனாக இருக்கிறான். அதே சமயம், தன் மனைவியைவிட்டுப் பிரிய அவனுக்கு விருப்பமில்லை. பொருள் தேடிவரும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லத் துணிந்த தன் நெஞ்சை நோக்கி, “பாலைநிலம் செல்லுதற்கு அரிதென்று கருதாமல் தலைவியைப் பிரிந்து செல்லுதல் நம் இளமைக்கு முடிவாகும்என்று கூறித் தலைவன் வருந்துகிறான்.

வங்காக் கடந்த செங்காற் பேடை
எழாஅலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது
குழலிசைக் குரல் குறும்பல அகவும்
குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாது
மறப்பருங் காதலி யொழிய
இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே. 

கொண்டு கூட்டு: வங்காக் கடந்த செங்காற் பேடை எழாஅல் உற வீழ்ந்தெனக் கணவனைக் காணாது குழல் இசைக் குரல் குறும்பல அகவும், குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாது ”மறப்ப அருங் காதலி ஒழிய இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே. 

அருஞ்சொற்பொருள்: வங்கா = ஒருவகைப் பறவை (இது வக்கா எனவும் வழங்கும்); செங்கால் = சிவந்த கால்; பேடை = பெண்பறவை; எழாஅல் = புல்லூறு என்னும் பறவை; அகவும் = கூவும்; ஈண்டு = இங்கு; இறப்பல் = நீங்குதல்.

உரை: நெஞ்சே! ஆண் வங்காப் பறவை பிரிந்து சென்றதால் தனிமையில் இருந்த, சிவந்த காலையுடைய பெண் வங்காப்பறவையைத் தனக்கு இரையாகக் கொள்ளும் பொருட்டுபுல்லூறு என்னும் பறவை, அதனை நெருங்கி அதன்மேல் விழுந்ததால், தன்னுடைய  கணவனாகிய ஆண்பறவையை, குழலிசை போன்ற குரலோடு குறிய பல ஒலிகளால், பெண்பறவை அழைக்கும்  குன்றுகள் பொருந்திய, சிறிய வழிகளுடன் கடத்தற்கு அரிய இடம் என்று எண்ணாமல், ”மறத்தற்கரிய நம் தலைவி இங்கே தங்கியிருக்கும்பொழுது,  நான் அவளை விட்டுச் செல்வேன்.” என்று நீ துணிவது,  நம் இளமைப் பருவத்துக்கு முடிவாகும்.


சிறப்புக் குறிப்பு: தேடும் பொருள் கிடைப்பதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம். அதுவரை தலைவியைவிட்டுப் பிரிந்திருக்க வேண்டும். இளமையில் இன்பம் அனுபவிப்பதை விடுத்து, பொருள் தேடச் சென்றால், மீண்டும் வரும்வரை தலைவியோடு இன்பம் அனுபவிக்க முடியாது. ஆகவே, பொருள் தேடுவதகாகச் சென்றால், திரும்பி வருவதற்குள் தன் இளமை முடிந்துவிடும் என்று தலைவன் எண்ணுகிறான்

150. தலைவி கூற்று

150.  தலைவி கூற்று

பாடியவர்: மாடலூர் கிழார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: இரவுக்குறி நேர்ந்த தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: இரவில் வந்து தலைவியைச் சந்திக்குமாறு தோழி தலைவனிடம் கூறினாள். அதற்குத் தலைவனும் சம்மதித்தான். அந்தச் செய்தியைத் தோழி தலைவிக்குத் தெரிவிக்கிறாள். அதைக் கேட்ட தலைவி,தலைவனுடைய சந்தனம் பூசிய மார்பை நினைத்தால் என்னுடைய காமநோய் பெருகுகிறது. ஆனால், அவனைத் தழுவினால் அந்த நோய் மறைந்துவிடுகிறது. இது வியப்பாக இருக்கிறதே!” என்று கூறித் தலைவனை இரவில் சந்திப்பதற்குத் தன் சம்மதத்தைத் தோழிக்குத் தெரிவிக்கிறாள்.

சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம்
உள்ளின் உண்ணோய் மல்கும்
புல்லின் மாய்வ தெவன்கொல் அன்னாய்

கொண்டு கூட்டு: அன்னாய்! சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி வான மீனின் வயின்வயின் இமைக்கும்ஓங்குமலை நாடன் சாந்துபுலர் அகலம் உள்ளின் உள்நோய் மல்கும்.  புல்லின் மாய்வது எவன்கொல்

அருஞ்சொற்பொருள்: சேணோன் = உயரத்தில் இருப்பவன் (பரணில் இருப்பவன்); நறுமை = மணம்; ஞெகிழி = கொள்ளி; வயின் = இடம்; வயின்வயின் = இடந்தோறும்; ஓங்கல் = உயர்ச்சி; புலர்தல் = உலர்தல்; அகலம் = மார்பு; மல்குதல் = பெருகுதல்; மாய்தல் = மறைதல்; கொல்அசைச்சொல்.

உரை: தோழி! மரத்தின் உச்சியில், பரணின் மீது இருக்கும் குறவன் கொளுத்திய நல்ல மணமுள்ள புகையையுடைய கொள்ளியானது, வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போல,  இடந்தோறும் ஒளியை வீசும், உயர்ந்த மலை நாட்டையுடைய தலைவனது, சந்தனம் பூசிய மார்பினை, நினைத்தால் என் உள்ளத்தில் காமநோய் பெருகும்.  அவன் மார்பைத் தழுவினால், அந்த நோய் மறைந்துவிடுகிறது. இது வியப்பாக உள்ளதே!


சிறப்புக் குறிப்பு: தினைப்புனத்தைக் காக்கும் குறவர் தம்மைக் கொடிய விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, பரண்மீது ஏறிநின்று கொள்ளியைக் கொளுத்துவது வழக்கம்

149. தலைவி கூற்று

149. தலைவி கூற்று

பாடியவர்: வெள்ளி வீதியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 27-இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்விக்க அவள் பெற்றோர்கள் மறுத்தனர். ஆகவே, அவ்வூரைவிட்டுப் பெற்றோர்களுக்குத் தெரியாமல் வேறு ஊருக்குச் சென்றுவிடலாம் (உடன்போக்கு) என்று தலைவன் தலைவியை அழைக்கிறான். தலைவி அவனோடு செல்லுவதற்குத் தயங்குகிறாள். அவனுடன் செல்லுவதுதான் சரியான செயல் என்று தோழி கூறுகிறாள். அதற்குத் தலைவி, எப்பொழுதும் என்னுடனேயே இருந்த நாணம்இப்பொழுது காமநோய் மிகுந்ததால் என்னைவிட்டு நீங்கியது,” என்று கூறித் தலைவனுடன் செல்லுவதற்கு உடன்படுகிறாள்.


அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டுழந்தன்று மன்னே இனியே
வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை
தீம்புனல் நெரிதர வீய்ந்துக் காஅங்குத்
தாங்கு மளவைத் தாங்கிக்
காம நெரிதரக் கைந்நில் லாவே. 

கொண்டு கூட்டு: நாணே நம்மொடு நனி நீடு உழந்தன்று. மன்னே இனியே
வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை தீம்புனல் நெரிதர, வீய்ந்து உக்காஅங்குத்
தாங்கும் அளவைத் தாங்கிக் காமம் நெரிதரக் கைந்நில்லாவே.  தான் அளிதோ!

அருஞ்சொற்பொருள்: அளிது = இரங்கத் தக்கது; நாணம் = வெட்கம்; நனி = மிக; உழந்தன்று = வருந்தியது; மன் - அசைச்சொல்; வான் = வெண்மை; ஓங்கல் = உயர்ச்சி; சிறுசிறை = நீரைத் தடுப்பதற்காக இடப்பட்ட சிறிய வரம்பு (பாத்தி); தீ = கொடுமை; புனல் = ஆறு, நீர்; நெரிதருதல் = நெருங்கித் தாக்குதல்; வீய்ந்து = அழிந்து; உகுதல் = கரைதல்; தாங்கும் = தடுக்கும்; கைந்நில்லாது = என்னிடம் நிலைபெறாது.
உரை: தோழி! நாணம் நம்மோடு மிக நெடுங்காலம் கூடவே இருந்து வருந்தியது. இனிமேல், வெண்ணிறமான பூக்க்களையுடைய கரும்பிற்குப் போடப்பட்ட உயர்ந்த மணலையுடைய பாத்தி, வெள்ளம் பெருகி வந்ததால் அழிந்து விழுந்ததைப்போல,  பொறுக்கும் அளவிற்குப் பொறுத்து, காமம் நெருங்கித் தாக்கியதால், நாணம் என்பால் நிலைபெறாமல் போய்க்கொண்டிருக்கிறது. என்னுடைய நாணம் இரங்கத் தக்கது.

சிறப்புக் குறிப்பு: இதுவரை, தலைவி தனக்கு இயற்கையாக உள்ள நாணத்தால் காமத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள். இப்பொழுது காமத்தின் மிகுதியால், நாணம் நீங்கியது. அவள் உடன்போக்குக்குச் சம்மதித்தாள் என்பது இப்பாடலின் கருத்து

பெண்களின் காதல் வாழ்க்கை நாணத்திற்கும் காமத்திற்கும் இடையே நடைபெறும் ஒரு போராட்டம். ஒரு ஆண்மகனுடன் பழகினால், ஊர்மக்களும் உற்றாரும் பழிச்சொற்கள் கூறுவார்களோ என்ற அச்சம் ஒருபக்கமும், மற்றொருபக்கம் காம உணர்வும் பெண்களை வருத்துவதாக இலக்கியத்தில் பலபாடல்களில் காண்கிறோம். உதாரணமாக,  திருக்குறளில், நாணத்திற்கும் காமத்திற்கும், இடையே நடைபெறும் போராட்டத்தைத் திருவள்ளுவர் வெகு அழகாகச் சித்திரிக்கிறர்.

காமக் கணிச்சி உடைக்கும்  நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.                                      (குறள் 1251)

(பொருள்: நாணம் என்னும் தாழ்ப்பாளிட்டுப் பூட்டப்பட்ட நிறை (மனவுறுதி) என்னும் கதவைக் காமம் என்னும் கோடரி முறித்து உடைக்கும். நான் அதைத் தடுக்க இயலாதவளாய் உள்ளேன்.)

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே!
யானோ பொறேன்இவ் விரண்டு.                          (குறள் – 1247)

(பொருள்: என் நல்ல நெஞ்சமே! காமம் நாணம் எனும் இரண்டுள், நீ ஒன்று காமத்தைக் கைவிடு; அல்லது நாணத்தைக் கைவிடு. இவை இரண்டையும் நீ ஒருசேர வைத்துக் கொள்ள விரும்பினால், ஒன்றோடொன்று மாறுபட்ட அவ்விரண்டையும் தாங்கும் ஆற்றல் எனக்கில்லை.)

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பின் அகத்து.                                     (குறள் – 1163)


(பொருள்: பிரிவுத் துன்பத்தைத் தாங்க முடியாமல் வாடும் என் உடம்பில், ஒருபக்கம் காமமும், மறுபக்கம் அதனை வெளிப்படுத்தத் தயங்கும் வெட்கமும், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு தொங்குகின்றன. ஒரு பக்கத்தில் காமவுணர்வு இழுக்க, மறுபக்கத்தில் வெட்கவுணர்வு இழுக்க என் உயிர் ஊசலாடுகிறது.)

148. தலைவி கூற்று

148.  தலைவி கூற்று

பாடியவர்: இளங்கீரந்தையார். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: முல்லை.
கூற்று: பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி பருவமன்றென்று வற்புறுத்தத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான். கார்காலம் வந்தது. அவன் இன்னும் திரும்பிவரவில்லை. தலைவி வருத்தப்படுவாளே என்று எண்ணிய தோழி, இன்னும் கார்காலம் வரவில்லை. கார்காலம் வந்தவுடன் உன் தலைவர் வந்துவிடுவார்,” என்று கூறுகிறாள். அதற்குத் தலைவி, கொன்றையும் குருந்தமும் மலர்ந்திருக்கின்றன. இது கார்காலம் அல்லாமல் வெறும் கனவா?” என்று கேட்கிறாள்.

செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக்
காசி னன்ன போதீன் கொன்றை
குருந்தோ டலம்வரும் பெருந்தண் காலையும்
காரன் றென்றி யாயிற்
கனவோ மற்றிது வினவுவல் யானே. 

கொண்டு கூட்டு: செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக் காசின் அன்ன போது ஈன் கொன்றைகுருந்தோடு அலம்வரும் பெருந்தண் காலையும் ”கார் அன்றுஎன்றி ஆயின் மற்று இது கனவோ?  யான் வினவுவல். 

அருஞ்சொற்பொருள்: சீறடி = சிறிய அடி; பொலிவு = அழகு; பொலம் = பொன்; கிண்கிணி = சதங்கை (சலங்கை); போது = முற்றிய அரும்பு; அலம்வருதல் = சுழலுதல்; தண் = குளிர்ச்சி; காலை = பொழுது; கார் = கார்காலம்.

உரை: செல்வந்தர்களின் சிறு பிள்ளைகளுடைய, சிறிய பாதங்களில் அழகுடன் விளங்கும், தவளையின் வாயைப் போன்ற வாயையுடைய, பொன்னாற் செய்யப்பட்ட சலங்கையில் உள்ள  காசைப் போன்ற, பெரிய (உருண்டையான) அரும்புகளை தோற்றுவிக்கும் கொன்றை மரமும்,  குருந்த மரமும்  சுழலும் மிகுந்த குளிரிச்சியையுடைய பருவத்தைக் கார் காலம் அன்று என்று  நீ கூறுவாயாயின், இவ்வாறு தோன்றுவது கனவோ?  நான் கேட்கிறேன். எனக்கு விடை கூறுவாயாக.


சிறப்புக் குறிப்பு:  கொன்றையும் குருந்தும் கார்காலத்து மலர்வன என்பது குறிப்பிடத் தக்கது

147. தலைவன் கூற்று

147. தலைவன் கூற்று

பாடியவர்: கோப்பெருஞ் சோழன். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 20-இல் காணலாம்.
திணை: பாலை
கூற்று: தலைமகன் பிரிந்தவிடத்துக் கனாக் கண்டு சொல்லியது
கூற்று விளக்கம்: தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் தன்னுடைய கனவில் தலைவியைக் காண்கிறான். அவன் தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்கிறான். அங்கே தலைவியைக் காணவில்லை. அவன், கனவை நோக்கி, “ என் தலைவியை இங்கு கொண்டுவந்ததுபோல் காட்டி,  நீ என்னை ஏமாற்றிவிட்டாய். நீ இப்படி ஏமாற்றினாலும், தங்கள் துணையைப் பிரிந்திருப்பவர்கள் கனவிலாவது அவர்களைக் காண முடிந்ததே என்று எண்ணுவார்கள். ஆகவே, உன்னை இகழ மாட்டார்கள்,” என்று கூறுகிறான்.

வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன
மயிரேர் பொழுகிய வங்கலுழ் மாமை
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல
இன்றுயில் எடுப்புதி கனவே
எள்ளார் அம்ம துணைப்பிரிந் தோரே.

கொண்டு கூட்டு: கனவே! வேனிற் பாதிரிக் கூன்மலர் அன்ன மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல இன்துயில் எடுப்புதி!
துணைப்பிரிந்தோர் எள்ளார் அம்ம!

அருஞ்சொற்பொருள்: வேனில் = கோடைக் காலம்; பாதிரி = ஒருவகை மரம்; கூன் = வளைந்த; ஏர்பு = எழுந்த; கலுழ்தல் = ஒழுகுதல்; மாமை = கருமை; பூண் = அனிகலன்; எடுப்புதி = எழுப்புகிறாய்; அம்மஅசைச்சொல்.

உரை: கனவே! கோடைக்காலத்தில் மலரும் பாதிரியின் வளைந்த மலரின் துய் (மகரந்தக் கம்பி) போன்ற மென்மையான மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாமை நிறத்தையும், நுண்ணிய வேலைப்பாடுடைய அணிகலன்களையும் உடைய, தலைவியைக் கொண்டுவந்து தந்ததைப் போல, இனிய தூக்கத்திலிருந்து என்னை எழுப்புகின்றாய். ஆனாலும், தம் துணையை பிரிந்து வாழ்பவர்கள் உன்னை இகழமாட்டார்கள்.

சிறப்புக் குறிப்பு: கனவு, உண்மையில் தலைவியைக் கொண்டுவராததால், ”தந்தோய் போலஎன்று தலைவன் கூறுகிறான். தலைவியைப் பிரிந்திருப்பதால் துன்புற்றுத் தூங்காமல் இருப்பவன் அரிதாகப் பெற்ற உறக்கமாதலால், தன் உறக்கத்தைஇன் துயில்என்கிறான். தூங்கும்பொழுது தலைவியைக் கண்டு திடீரென்று விழித்துக் கொண்டதால், தான் விழித்துக்கொண்டதற்குக் கனவுதான் காரணம் என்று கூறுகிறான். தன்னுடைய இனிய உறக்கத்திலிருந்து தன்னை எழுப்பியது இகழ்வதற்கு உரியது என்றாலும், கனவு தலைவியைக் காட்டியதால், அது எள்ளுதற்குரியது அன்று என்று கூறுகிறான்.  ”துணைப் பிரிந்தோர்என்றது தலைவன் தலைவி ஆகிய இருவருக்கும் பொதுவென்று கருதலாம்.

பாதிரியின் மலர் வளைந்திருப்பதால் அதுகூன் மலர்என்று அழைக்கப்பட்டது. அந்த மலரில் நடுவில் உள்ள மகரந்தக் கம்பிக்குத் துய் என்று பெயர். அது மயிர் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மயிர் என்பது பாதிரியின் துய்க்கு ஆகுபெயராய் வந்துள்ளது

146. தோழி கூற்று

146. தோழி கூற்று

பாடியவர்: வெள்ளி வீதியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 27-இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி வரைவு மறுப்பவோ எனக்கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனின் உறவினர்கள் தலைவியின் வீட்டிற்கு வந்து அவளுடைய பெற்றோர்களிடம் பெண் கேட்கின்றனர்.  தம்முடைய சுற்றத்தார் திருமணத்திற்கு சம்மதிப்பார்களோ அல்லது மறுப்பார்களோ என்று தலைவி மனக்கலக்கத்தோடு இருக்கிறாள்அப்பொழுது, தோழி,“ தலைவன் சார்பாக வந்துள்ள முதியவர்களும் உன் சுற்றத்தாரும் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, உன் திருமணத்திற்குத் தடை எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. நீ கவலையை விடு,” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னு மாக்களோ
டின்றுபெரி தென்னும் ஆங்கண தவையே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! அம்ம! ஆங்கணது அவை(யில்) தண்டுடைக் கையர், வெண்தலைச் சிதவலர்  ”நன்று, நன்றுஎன்னும் (தலைவனின் உற்றாரும் உறவினருமாகிய) மாக்களோடு,  ”இன்று பெரிது,” என்னும் (நம்மவரும் உள்ளனர்). நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்?

அருஞ்சொற்பொருள்: புணர்ப்போர் = சேர்த்துவைப்பவர்கள்; தண்டு = ஊன்றுகோல்; வெண்டலை = வெண்+தலை = நரைத்த முடி உடையவர்கள்; சிதவல் = கந்தைத் துணி (இங்கு தலைப்பாகையைக் குறிக்கிறது.); மாக்கள் = மக்கள்; ஆங்கண் = அங்கே; கொல் -  அசைச்சொல்.

உரை: தோழி! நான் சொல்லுவதைக் கேட்பாயாக! அங்கே, அந்தக் கூட்டத்தில், கையில் ஊன்றுகோல் உடையவர்களும்நரைத்த முடியையுடைய தலையில் தலைப்பாகை அணிந்தவர்களுமாகத் தலைவனது உறவினர்கள் வந்துள்ளார்கள். அவர்கள்  ”நன்று நன்று என்று கூறுகிறார்கள். நம்மவர்கள்,  ”இன்று நீங்கள் வந்தது எங்களுக்குப் பெருமை,” என்று கூறுகின்றனர். நம் ஊரில்  பிரிந்தவர்களைச் சேர்த்துவைப்பவர்களும் உள்ளனர்.

சிறப்புக் குறிப்பு: தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்என்றது, தலைவன் சார்பாக வந்தவர்களின் முதுமைப் பருவத்தைக் குறிக்கிறது. திருமணத்தைப் பற்றிப்  பேசுவதற்கு ஆண் வீட்டார் பெண்வீட்டிற்குப் பெரியோரை அழைத்துச் செல்லுதல் மரபு.


இருதரத்தாரும் மகிழ்ச்சியாக உரையாடுவதிலிருந்து, தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் நடைபெறுவதில் இருதரத்தாருக்கும் சம்மதம் என்பதை உணர்ந்த தோழி, “உன்னையும் தலைவனையும் சேர்த்துவைக்கப்போகிறார்கள். உன் திருமணம் உன் விருப்பப்படியே விரைவில் நடைபெறப்போகிறதுஎன்று தலைவியிடம் கூறுகிறாள்

145. தலைவி கூற்று

145. தலைவி கூற்று

பாடியவர்: கொல்லனழிசியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடலில் 26-இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: வரைவிடை ஆற்றாது தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவினால் துன்பமுற்ற தலைவி உறங்க முடியாமல் தவிக்கிறாள். தலைவி தோழியை நோக்கி, என் துன்பத்தை அறியாமல் நன்கு உறங்குகின்ற மக்கள் வாழும் இச்சிற்றூரில் என்னால் இனிமேல் வாழ முடியாது,” என்று கூறுகிறாள்.

உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி
கானலஞ் சேர்ப்பன் கொடுமை எற்றி
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள்
துஞ்சா துறைநரொ டுசாவாத்
துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே. 

கொண்டு கூட்டு: இத்துறைகெழு சிறுகுடி  கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றி,  ஆனாத் துயரமொடு வருந்திப் பால்நாள் துஞ்சாது உறைநரொடு உசாவாத் துயிற்கண் மாக்களொடு நெடு இரா உடைத்து.  உறைபதி அன்று.

அருஞ்சொற்பொருள்: உறைதல் = வாழ்தல்; பதி = இடம்; துறை = கடற்றுறை; சிறுகுடி = சிற்றூர்; கானல் = கடற்கரைச் சோலை; அம்  - சாரியை; சேர்ப்பன் = நெய்தல்நிலத் தலைவன்; எற்றி = நினைத்து; ஆனா = குறையாத; பால்நாள் = நள்ளிரவு; துஞ்சாது = தூங்காமல்; உசாவுதல் = வினவுதல்; துயில் = உறக்கம்; மாக்கள் = அறிவற்றவர்கள்; நெடு = நீண்ட; இரா = இரவு.

உரை:, இந்தக் கடற்றுறையை உடைய சிற்றூர், கடற்கரைச் சோலையையுடைய நெய்தல்நிலத் தலைவன் செய்த  கொடுமையை நினைத்து, மிகுந்த துன்பத்தோடு, துயரமுற்று, நள்ளிரவில், தூங்காமல் இருப்பவர்களை,  ”ஏன்?” என்றுகூடக் கேட்டு ஆறுதல் கூறாது, உறக்கத்தோடுகூடிய கண்களையுடைய அறிவற்றவர்களையும் நீண்ட இரவையும் உடையது. ஆதலால், இது நாம் தங்கியிருத்தற்குரிய ஊர் அன்று.


சிறப்புக் குறிப்பு: இப்பாடலுக்கு மற்றொரு விதமாகவும் பொருள் கொள்ளலாம். தலைவி வருத்தத்தோடு உறங்காமல் இருக்கிறாள். அவள் தோழி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள். தன்னைப் பற்றிக் கவலைப் படாமல், தோழி உறங்குவதைக் கண்ட தலைவி சினமுற்றாள். அதனால், நேரடியாகத் தோழியைத் திட்டாமல், மறைமுகமாக, ஊர்மக்களைத் திட்டுவதுபோல், “மாக்கள்என்று தோழியைக் குறிப்பிடுகிறாள்.