Monday, April 18, 2016

179. தோழி கூற்று

179. தோழி கூற்று

பாடியவர்: குட்டுவன் கண்ணனார்.  இவரது இயற்பெயர் கண்ணன். இவர் குட்ட நாட்டில் இருந்ததால் குட்டுவன் கண்ணனார் என்று அழைக்கப்பட்டார். சேரருக்கு குட்டுவன் என்ற ஒருபெயரும் உண்டு. ஆகவே, இவர் சேரர் மரபினர் என்று கருதுவாரும் உளர். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவுகடாயது.
கூற்று விளக்கம்: தலைவன் பகலில் வந்து தலைவியோடு அளவளாவுவது வழக்கம். ஒருநாள் அவன் வேட்டையாடிய பிறகு தலைவியைச் சந்திக்க வந்தான். அவன் வந்தபொழுது கதிரவன் மறைத்து இருள் சூழ ஆரம்பித்ததுஅவனைப் பார்த்த தோழி, “இப்பொழுது இருட்ட ஆரம்பித்துவிட்டதுஇன்றிரவு எங்கள் ஊரில் தங்கிச் செல்வாயாக என்று கூறுகிறாள். இரவில் திரும்பிப் போனால், போகும் வழியில், தலைவனுக்கு இன்னல்கள் நேருமோ என்று அஞ்சிய தோழி அவனை இரவில் தங்கிச் செல்லலாம் என்று கூறுவதாகத் தோன்றுகிறது. இரவில் தங்கிச் செல்லலாம் என்று கூறுவதால், தலைவன் தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று தோழி கூறுவதாகக் கருதுவது பொருத்தமானதாகத் தோன்றவில்லை.

கல்லென் கானத்துக் கடமா ஆட்டி
எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன;
செல்லல் ஐஇய உதுஎம் ஊரே
ஓங்குவரை யடுக்கத்துத் தீந்தேன் கிழித்த
குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப்
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே. 

கொண்டு கூட்டு: ஐய! கல்லென் கானத்து, கடமா ஆட்டி எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தனசெல்லல்! ஓங்குவரை அடுக்கத்துத் தீந்தேன் கிழித்த குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப் பேதை யானை சுவைத்த கூழை மூங்கில் குவட்டிடையது. உது எம் ஊர்.

அருஞ்சொற்பொருள்: கல் = ஒலிக் குறிப்பு; கானம் = காடு; கடமா = ஒரு விலங்கு; ஆடி = வேட்டை ஆடி; எல் = வெயில், ஓளிஞமலி = நாய்; அடுக்கம் = மலைப்பக்கம்; குவை = கூட்டம்; கழை = மூங்கில்; கயவாய் = ஆழமான வாய், பெரிய வாய்; கூழை = குட்டையானது; குவடு = மலையுச்சி.

உரை: ஐய! கல்லென்னும் ஆரவாரமான ஓசையையுடைய காட்டில், கடமாவை நீ வேட்டையாடினாய். இப்பொழுது, பகற்பொழுது மங்கியது.  வேட்டை ஆடுவதற்கு உனக்கு உதவியாக இருந்த நாய்களும் களைப்பாக இருக்கின்றன. இப்பொழுது, நீ திரும்பிச் செல்ல வேண்டாம். உயர்ந்த மலைப்பக்கத்தில், இனிய தேனடையைக் கிழித்த, கூட்டமாக வளர்ந்துள்ள பசிய மூங்கில்களின் குருத்தை, ஆழ்ந்த வாயையும் பேதைமையையும் உடைய யானைகள் தின்றன.  யானைகள் தின்றதால் குட்டையாகிய மூங்கிலையுடைய, மலையுச்சியின் இடையே எமது ஊர் உள்ளது.


178. தோழி கூற்று

178. தோழி கூற்று

பாடியவர்: நெடும்பல்லியத்தையார். இவர் ஒரு பெண்பாற் புலவர். இவர் நெடும்பல்லியத்தனாரின் உடன் பிறந்தவர் என்று சிலர் கருதுகின்றனர். பலவகையான பல்லியங்களில் (இசைக்கருவிகளில்) பயிற்சி உடையவராக இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம்.  இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: மருதம்.
கூற்று: கடிநகர் புக்க தோழி, தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு,முன்னர்க் களவுக் காலத்து ஒழுகலாற்றை நினைந்து அழிந்து கூறியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியாக வாழும் இல்லத்திற்குத் தோழி சென்றாள்.  தலைவன் தலைவியொடு கூடுவதற்கு ஆவலாக இருப்பதைக் கண்ட தோழி, “தலைவி எப்போழுதும் உன்னோடு இருக்கும்பொழுதே இவ்வளவு விரைகின்ற நீ, களவுக்காலத்தில், அவள் காண்பதற்கு அரியவளாக இருந்தபொழுது எப்படிப் பொறுத்துக் கொண்டிருந்தாயோ என்பதை நினைத்து வருந்துகிறேன்என்றாள்.

அயிரை பரந்த அம்தண் பழனத்து
ஏந்தெழில் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்குஇவள்
இடைமுலைக் கிடந்தும் நடுங்க லானீர்
தொழுதுகாண் பிறையின் தோன்றி யாம்நுமக்கு
அரியம் ஆகிய காலைப்
பெரிய நோன்றனிர் நோகோ யானே.

கொண்டு கூட்டு: அயிரை பரந்த அம்தண் பழனத்து ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால் ஆம்பல் குறுநர், நீர்வேட் டாங்கு, இவள் இடைமுலைக் கிடந்து நடுங்கலானீர்!
தொழுதுகாண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு அரியம் ஆகிய காலைப் பெரிய நோன்றனிர்.  யான் நோகு.

அருஞ்சொற்பொருள்: அயிரை = அயிரை மீன்; பரத்தல் = மிகுதல்; அம் = அழகிய; தண் = குளிர்ச்சி; பழனம் = நீர்நிலை; ஏந்தல் = உயர்ச்சி; ஏந்தெழில் = மிகுந்த அழகு; தூம்பு = துளை; திரள்கால் =திரண்ட தண்டு; குறுநர் = பறிப்போர்; இடைமுலை = முலையிடை; தொழுதுகாண் பிறை = கன்னிப்பெண்கள் தொழுது காத்திருந்து பார்க்கும் மூன்றாம் பிறை; அரியம் ஆகிய காலை = காண்பதற்கு அரிய களவுக் காலத்தில்; நோன்றனிர் = துன்பங்களைப் பொறுத்தீர்; நோகு = வருந்துகிறேன்.

உரை: அயிரைமீன்கள் நிறைந்த, அழகிய குளிர்ந்த நீர்நிலையில்நீர்பரப்பின் மேலெழுந்து நிற்கும் அழகுடைய மலர்களாகிய, உள்ளேதுளையையுடைய, திரண்ட தண்டுகளைக்கொண்ட ஆம்பலைப் பறிப்போர், நீருக்குள்ளே இருந்தும் குடிநீருக்கு வேட்கை கொண்டதுபோல், நீர் இத்தலைவியின் முலையிடத்தே உறங்கிய பின்பும், காமவேட்கையால் நடுங்குகின்றீர். யாம், கன்னிப் பெண்களும் பிறரும் தொழுது காணும் பிறையைப்போல் தோன்றி, எங்களைக் காண்பதற்கு அரியதாக இருந்த களவுக் காலத்தில், பெரிய வருத்தங்களைப் பொறுத்தீர் போலும்; நான் இப்போது அதனை எண்ணி வருந்துகிறேன்.


சிறப்புக் குறிப்பு: ”குடிப்பதற்குத் தகுந்த நீர் உள்ள குளத்தில் இருந்துகொண்டு ஆம்பல் மலரைப் பறிப்பவர், நீர் வேட்கை அடைந்தது போல், உன்னுடைய வேட்கையை முற்றிலும் தீர்ப்பதற்கு உன் மனைவி எப்பொழுதும் உன்னோடு இருக்கும் பொழுதும் நீ காமவேட்கையால் நடுங்குகிறாய். ஒருமாதத்தில் ஒருநாள் மட்டுமே தோன்றும் மூன்றாம் பிறை காண்பதற்கு அரியது. அதுபோல், நாங்கள் களவுக் காலத்தில் காண்பதற்கரியவர்களாக இருந்த பொழுது நீ எப்படிப் பொறுத்துக்கொண்டிருந்தாய் என்பதை நினைத்து நான் வருந்துகிறேன்என்று தோழி கூறுகிறாள்.

177. தோழி கூற்று

177. தோழி கூற்று

பாடியவர்: உலோச்சனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 175 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் வரப்போகிறான் என்பதை அறிந்த தோழி, அவனை நினைத்து வருத்தத்தோடு இருக்கும் தலைவியிடம் அச்செய்தியைக் கூறுகிறாள்.

கடல்பாடு அவிந்து கானல் மயங்கித்
துறைநீர் இருங்கழி புல்லென் றன்றே
மன்றவம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும் இன்றவர்
வருவர்கொல் வாழி தோழி நாம்தம்
புலப்பினும் பிரிவுஆங்கு அஞ்சித்
தணப்புஅருங் காமம் தண்டி யோரே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! கடல் பாடு அவிந்து கானல் மயங்கித் துறைநீர் இருங்கழி புல்லென்று. மன்றம் அம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை அன்றிலும் பை என நரலும். நாம் தம் புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித் தணப்பு அரும் காமம் தண்டியோர் அவர் இன்று வருவர் கொல்?

அருஞ்சொற்பொருள்: பாடு = ஒலி; அவிந்துஅடங்கி; கானல் = கடற்கரைச் சோலை; மயங்குதல் = மாறுபடுதல் ( ஒளி மங்குதல்); கழி = உப்பங்கழி; புலென்றன்று = பொலிவிழந்தது; மன்றம் = பொதுவிடம்; பெண்ணை = பனை; பை என = மென்மையாக; நரலுதல் = ஒலித்தல்; கூவுதல்; பலத்தல் = ஊடுதல்; ஆங்கு = அசைச்சொல்; தணப்பு = பிரிவு; தண்டுதல் = வசூலித்தல் (வலித்து அணைத்துக் காம இன்பத்தை நுகர்தல்); கொல் = அசைச்சொல்.

உரை: தோழி! கடல் ஒலி அடங்கியது.  கடற்கரைச் சோலை ஒளி மங்கியது.  துறையையும் நீரையும் உடைய கரிய உப்பங்கழி,  பூக்கள் கூம்பியதனால் அழகிழந்தது. பொதுவிடத்தில் உள்ள அழகிய பனைமரத்தின் மடலில் வாழும் அன்றிற் பறவையும், மெல்லக் கூவுகின்றது. முன்பு நீ அவரோடு ஊடினாலும், உன்னைப் பிரிவதற்கு அஞ்சி,  நீங்குதற்கரிய காம இன்பத்தை உன்னுடன் நன்றாக அனுபவித்த உன் தலைவர்  இன்று வருவார்.

சிறப்புக் குறிப்பு: கடல் ஒலி அடங்குதல் முதலியன இரவு வந்ததைக் குறிக்கின்றன. கடல் ஒலியடங்குதலாவது, மீனவர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு அவர்களுடைய இல்லங்களுக்குச் சென்றதால், அவர்கள் எழுப்பும் ஆரவாரம் அடங்கியது என்பதைக் குறிக்கிறது.


இப்பாடலைத் தோழியின் கூற்றாகக் கருதாமல் தலைவியின் கூற்றாகக் கருதலாம்.  தலைவனைக் காணத் துடிக்கும் தலைவி, ”இன்று வருவர் கொல்?” என்று தோழியிடம் கேட்பதாக இப் பாடலுக்குப்  பொருள் கொள்ளுதல் சிறந்ததாகத் தோன்றுகிறது.

Saturday, March 26, 2016

176. தோழி கூற்று

176. தோழி கூற்று
.

பாடியவர்: வருமுலையாரித்தியார். இவர் பாடியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: தோழி, கிழத்தியைக் குறைநயப்பக் கூறியது.  (குறை நயப்ப - தலைவனது காரியத்தை விரும்பி நிறைவேற்றுதற்கு.)
கூற்று விளக்கம்: தலைவன் ஒருபெண்ணைப் பார்த்தான், அவள் அழகில் மயங்கினான். அவளை அடைய விரும்பினான். தனக்குத் தலைவியின் மேல் உள்ள விருப்பத்தைத் தலைவியின் தோழியிடம் கூறி, தலைவியைச் சந்திப்பதற்கு அவள் உதவியை நாடினான். ஒருமுறை அன்று; இருமுறை அன்று; அவன் பலமுறை தோழியின்  உதவியை வேண்டினான். தோழி தலைவியிடம் அவனுக்காகப் பரிந்துரைத்தாள். ஆனால், தலைவி அவனை ஏற்கவில்லை.  அதனால் ஏமாற்றம் அடைந்த தலைவன் இப்பொழுது எங்கோ சென்றுவிட்டான்தோழி, உன்னை அவன் மிகவும் விரும்பினான். அவன் மிகவும் பணிவானவன்; நல்லவன். உன்னைச் சந்திப்பதற்கு என் உதவியை வேண்டினான். நான் சொன்ன சொற்களை நீ ஏற்கவில்லை. இப்பொழுது அவனைக் காணவில்லை. அவன் இப்பொழுது எங்கே இருக்கின்றானோ என்று தோழி தலைவியிடம் தன் வருத்தத்தைக் கூறுகிறாள்.

ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி என்
நன்னர் நெஞ்சம்  நெகிழ்த்த பின்றை
வரைமுதிர் தேனின் போகியோனே
ஆசுஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ?
வேறுபுலன் நன்னாட்டுப் பெய்த
ஏறுடை மழையின் கலிழும் என் நெஞ்சே. 


கொண்டு கூட்டு: ஒருநாள் வாரலன், இருநாள் வாரலன்பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி  என் நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றைவரைமுதிர் தேனிற் போகியோன்.
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோவேறு புலன் நன்னாட்டுப் பெய்த ஏறுடை மழையிற் கலிழும் என் னெஞ்சே. 

அருஞ்சொற்பொருள்: பணிமொழி = பணிவான சொற்கள்; பயிற்றி = கூறி; நன்னர் = நன்மை ( நல்ல); பின்றை = பிறகு; வரை = மலை; ஆசு = பற்றுக்கோடு ; எந்தை = என் தலைவன் ( நம் தலைவன்); புலன் = புலம் = இடம்; ஏறு = இடி; கலிழும் = கலங்கும்.

உரை: தலைவன் ஒருநாள் வரவில்லை; இரண்டு நாட்கள் வரவில்லை. பல நாட்கள் வந்து, பணிவான சொற்களைப் பலமுறை கூறி எனது நல்ல நெஞ்சத்தை இரங்கச் செய்த பிறகு மலையிலிருந்து முதிர்ந்து விழுந்த தேனடையைப் போலப் போனவனும், நமக்குப் பற்றுக்கோடாக இருக்கும் எம் தந்தை போன்றவனுமாகிய நம் தலைவன் இப்பொழுது  எங்கே இருக்கின்றானோ? வேற்றுப் புலங்களையுடைய நல்ல நாட்டில், இடியுடன் பெய்த மழைநீர் கலங்கி நம் நாட்டிற்கு வருவது போல, எங்கோ இருக்கும் தலைவனை நினைத்து என் நெஞ்சு கலங்குகின்றது.


சிறப்புக் குறிப்பு: மலையில் முதிர்ர்ந்த தேனடை, தன்னிடம் உள்ள தேன் ஒருவருக்கும் பயன்படாது விழுந்து அழிந்ததைப் போல, தான் கூறுவதை யாரும் ஏற்றுக் கொள்ளாததால்  தலைவன் எங்கோ சென்றான் என்பது குறிப்பு. வேற்று நாட்டில் இடியுடன் பெய்த மழை கலங்கித் தலைவி இருக்கும் நாட்டிற்கு வருவதைப் போல் எங்கோ இருக்கும்  தலைவனைப் பற்றிய நினைவு தோழிக்கு மனக்கலக்கத்தைத் தருகின்றது.

175. தலைவி கூற்று

175. தலைவி கூற்று

பாடியவர்: உலோச்சனார். இவர் சோழ நாட்டில் இருந்த கண்ப வாயில் என்னும் ஊரைச் சார்ந்தவராகக் கருதப்படுகிறது.  இவர் நெய்தல் திணைப் பாடல்களை இயற்றுவதில் வல்லவர்.  இவர் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி உறையூரிலிருந்து ஆட்சிபுரிந்த போது அவனைப் பாடிப் பரிசில் பெற்றவர் (புறநானூறு - 377).  இவர் புறநானூற்றில் மூன்று பாடல்கள் ( 258, 274, 377) இயற்றியதோடு மட்டுமல்லாமல், நற்றிணையில் இருபது பாடல்களும் (11, 38, 63, 64, 74, 131, 149, 191, 203, 223, 249, 254, 278, 287, 311, 331, 354, 363, 372, 398), அகநானூற்றில் எட்டுப் பாடல்களும் ( 20, 100, 190, 200, 210, 300, 330, 400), குறுந்தொகையில் நான்கு பாடல்களும் (175, 177, 205, 248) இயற்றியுள்ளார்.
திணை: நெய்தல்.
கூற்று: பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லி வற்புறுத்துவாட்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பிரிந்திருந்த பொழுது, வருத்தத்தோடு இருந்த  தலைவியை நோக்கி, “தலைவனுடைய பிரிவினால் நீ வருந்துவது எனக்குப் புரிகிறது. அவர் விரைவில் வந்துவிடுவார். அதுவரை பொறுத்துக்கொள். ஊரில் உள்ளவர்கள் உன்னைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்என்று தோழி கூறுகிறாள். தோழியின் கூற்றுக்கு மறுமொழியாக,  “ஊரார் எதை வேண்டுமானாலும் பேசட்டும். அதற்காக நான் வருந்தப் போவதில்லை.” என்று தலைவி கூறுகிறாள்.    

பருவத் தேன் நசைஇப் பல்பறைத் தொழுதி
உரவுத் திரை பொருத திணிமணல் அடைகரை
நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம்
மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்கு
இரங்கேன் தோழி ஈங்கு என் கொல் என்று
பிறர்பிறர் அறியக் கூறல்
அமைந்தாங்கு அமைக, அம்பல் அஃது எவனே. 


கொண்டு கூட்டு: தோழி! பருவத் தேன் நசைஇப் பல்பறைத் தொழுதி உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம் மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்கு இரங்கேன். ஈங்கு என் கொல் என்று பிறர்பிறர் அறியக் கூறல் அமைந்தாங்கு அமைக! அம்பல் அஃது எவன்

அருஞ்சொற்பொருள்: நசைஇ = விரும்பி; பறை = பறவை (வண்டு); தொழுதி = கூட்டம்; உரவு = வலிமை; உரவுத்திரை = வலிய கடலலை; பொருத = மோதிய; திணிதல் = செறிதல்; மா = பெரிய, கரிய; சினை = கிளை; தொகூஉம் = கூடுகின்ற; அம்பல் = பழிச்சொல்.

உரை: தோழி! பருவ காலத்தில் உள்ள தேனை விரும்பி, பல வண்டுக்கூட்டங்கள், வலிமையான அலைகள் மோதுகின்ற மணல் செறிந்த கரை ஓரத்தில் உள்ள நனைந்த புன்னை மரத்தின் பெரிய கிளையில் மொய்க்கும்படி மலர்ந்த மலர்களையும், கரிய நீரையுமுடைய கடற்கரைத் தலைவன் என்னைப் பிரிந்ததற்காக நான் வருந்தேன். இங்கு,”இவள் ஏன் இங்ஙனம் ஆனாள்?” எனப் பிறர், பிறர் அறியும்படி கூறுதல், அவர்களுடைய மனத்திற்கேற்றபடி  அமையட்டும். அவர்கள் கூறும் பழிச்சொற்கள் என்னை  என்ன செய்யும்?

சிறப்புக் குறிப்பு: பறப்பதைத் தொழிலாகக் கொண்டதால் பறை என்ற சொல்  பறவையைக் குறிக்கிறது. தேன் நசைஇஎன்ற குறிப்பால் பறை என்ற பொதுப்பெயர் இங்கே வண்டைக் குறிக்கிறது     “தலைவன் என்னைப் பிரிந்தான் என்று நான் வருந்தவில்லை; ஆயினும் என்னை அறியாமால் என்னிடம் சில மாற்றங்கள் உண்டாகின்றன. அவற்றைக் கண்டு பிறர் என்ன வேண்டுமானாலும் கூறட்டும்; அவற்றால் என் காமம் வலிமையடையுமே தவிர எனக்குத் துன்பம் ஒன்றுமில்லைஎன்று தலைவி கூறுகிறாள்.


பலவிடங்களிற் பறந்து செல்லும் வண்டுகள் சரியான காலத்தில் பருவத் தேனை உண்ண வருவதைப்போல், தலைவன் பலவகை முயற்சிகளில் ஈடுபட்டு என்னைப் பிரிந்து சென்றாலும், உரிய காலத்தே வந்து என்னோடு மகிழ்ச்சியாக இருப்பான் என்ற நம்ம்பிக்கை எனக்கு உள்ளதால் நான் அவன் பொருட்டு வருந்த மாட்டேன்என்று தலைவி கூறுவதாகவும் பொருள் கொள்ளலாம்

174. தலைவி கூற்று

174. தலைவி கூற்று

பாடியவர்: வெண்பூதியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 97 – இல் காணலாம். திணை: பாலை.
கூற்று: பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிவதாக முடிவு செய்துவிட்டான். இதை அறிந்த தோழி, தலைவியிடம் வந்து தலைவனின் முடிவைப் பற்றிக் கூறுகிறாள். அதைக் கேட்ட தலைவி, அவர் செல்லும் பாலை நிலத்து வழிகள் கடத்தற்கு அரியவை. அவற்றைக் கடப்பதில் உள்ள இன்னல்களை எண்ணிப் பார்க்காமல் அவர் என்னைவிட்டுப் பிரியப் போகிறார் என்றால், இவ்வுலகில், பொருள்தான் பெறுதற்கரியது என்பதும் அருளை மதிப்பவர் யாரும் இல்லை என்பதும் தெளிவு என்று தோழியிடம் கூறுகிறாள்.

பெயன்மழை துறந்த புலம்பு உறு கடத்துக்
கவைமுள் கள்ளிக்காய் விடு கடுநொடி
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார் நம் துறந்து
பொருள்வயிற் பிரிவாராயின் இனி இவ்வுலகத்துப்
பொருளே மன்ற பொருளே
அருளே மன்ற ஆரும் இல்லதுவே. 


கொண்டு கூட்டு: பெயல் மழை துறந்த புலம்புறு கடத்து, கவைமுள் கள்ளிக் காய்விடு கடுநொடிதுதை மென்தூவித் துணைப்புறவு இரிக்கும் அத்தம் அரிய என்னார், நம் துறந்து பொருள் வயின் பிரிவாராயின் இவ்வுலகத்து மன்ற பொருளே பொருள்மன்ற அருளே ஆரும் இல்லது. 

அருஞ்சொற்பொருள்: பெயல் = பெய்யும்; துறந்த = நீங்கிய; புலம்பு = தனிமை; கடம் = காடு; கவை = பிளப்பு; கடு = விரைவு; நொடி = வெடிக்கும் ஒலி; துதைத்தல் = செறித்தல்; தூவி = சிறகு; புறவு = புறா; இரிக்கும் = ஓடச் செய்யும்; அத்தம் = பாலை நிலம்; மன்ற = உறுதியாக; பொருள் = செல்வம், மதிக்கத் தக்கது; ஆரும் = யாரும்.

உரை:  மழை பெய்யாத்தால் வறட்சி மிகுந்துள்ள, தனிமைமிக்க பாலை நிலத்தில், பிளவுபட்ட, முள்ளையுடைய கள்ளியின் காய்கள் வெடிக்கும் பொழுது எழும் விரைவான ஒலியானது, நெருங்கிய மெல்லிய சிறகுகளையுடைய, ஆணும் பெண்ணுமாக இணைந்திருக்கும் புறாக்களைப் பிரிந்து ஓடச் செய்யும். அரிய வழிகள் உள்ள பாலைநிலம், கடத்தற்கரியது என்று கருதாமல், பொருளைத்தேடும் பொருட்டு நம் தலைவர் பிரிவாராயின், உறுதியாக, இந்த உலகத்தில் செல்வம் மட்டுமே மதிக்கத் தக்கது என்பதிலும், அருளை ஒரு பொருளாக ஏற்றுக் கொள்வார் யாரும் இல்லை என்பதிலும் நிச்சயமாக ஐயமில்லை.


சிறப்புக் குறிப்பு: பாலை நிலம் கடத்தற்கரியதாக இருப்பதை எண்ணிப் பார்க்காமல், தம் துணையைப் பிரிந்து செல்லுவது அருளுக்கு மாறுபாடான செயலாக இருப்பதால் பொருள்தான் பெறுதற்கரியது என்று இவ்வுலத்தில் உள்ளவர்கள் கருதுவதாகத் தலைவி கூறுகிறாள். கள்ளிக்காய் வெடிப்பதால் தோன்றிய ஒலி, இணைந்திருக்கும் புறாக்களைப் பிரிப்பதைப்போல், பொருள்மேல் தலைவனுக்கு உள்ள விருப்பம் தலைவனையும் தலைவியையும் பிரிக்கிறது என்ற கருத்து இப்பாடலில் உள்ளுறையாக இருப்பதாகத் தோன்றுகிறது.

173. தலைவன் கூற்று

173.  தலைவன் கூற்று

பாடியவர்: மதுரைக் காஞ்சிப்புலவன்.  மதுரைக் காஞ்சிப் புலவர், மாங்குடி கிழார், மாங்குடி மருதனார் என்ற மூன்று பெயர்களும் ஒருவரையே குறிப்பதாக உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். இந்தப் புலவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 164 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: குறைமறுக்கப்பட்ட தலைமகன் தோழிக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவியைக் காண்பதற்கு உதவி செய்யுமாறு தலைவன் தலைவியின் தோழியை வேண்டினான். தோழி உதவி செய்ய மறுத்தாள். ”நீ உதவி செய்யாவிட்டால், என்ன செய்வது என்று எனக்குத் தெரியும். மடலேறுவதுதான் இதற்குச் சரியான வழிஎன்று கூறி அங்கிருந்து செல்கிறான்.
பொன்நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க ஏறி நாண் அட்டு
அழிபடர் உள்நோய் வழிவழி சிறப்ப
இன்னள் செய்தது இது என முன்னின்று
அவள் பழி நுவலும் இவ்வூர்
ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகுமார் உளெனே. 

கொண்டு கூட்டு: பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த பல்நூல் மாலைப் பனைபடு கலிமாப் பூண்மணி கறங்க ஏறி, நாண் அட்டு அழிபடர் உள்நோய் வழிவழி சிறப்பஇன்னள் செய்தது இது என, இவ்வூர் முன்னின்று அவள் பழி நுவலும்.  ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகுமார் உளென். 

அருஞ்சொற்பொருள்: ஆவிரை = ஒரு மலர்; மிடைந்த = கலந்த; பன்னூல் = பல நூல்கள்; படுதல் = உண்டாதல்; கலிமா = குதிரை; கறங்க = ஒலிக்க; நாண் = நாணம்; அடுதல் = அழித்தல்; அழிபடர் = மிகுந்த துன்பம்; வழிவழி = பரம்பரை (மேலும் மேலும்); சிறப்ப = மிகுதியாக; நுவலுதல் = கூறுதல்; ஆங்கு = அவ்வாறு (அப்படி); ஈங்கு = இவ்விடம்; ஏகுதல் = செல்லுதல்.


உரை: பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய பூக்களை நெருக்கமாகக் கட்டிய,  பல நூல்களாலான மாலைகளை அணிந்த, பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரையை, அதன் கழுத்திற் பூட்டிய மணி ஒலிக்கும்படி ஊர்ந்து,  நாணத்தைத் தொலைத்து, என்  உள்ளத்தேயுள்ள காமநோய், மேலும் மேலும் மிகுதியாகுமாறு, ”இது (இந்தக் காம நோய்) இன்னாளால் உண்டாக்கப்பட்டதுஎன்று நான் கூற, அதைக் கேட்ட இவ்வூரில் உள்ளவர்கள், எல்லோர்க்கும் முன்னே நின்று, தலைவியைப் பழி தூற்றுவர். அப்படி ஒரு வழி உண்டு என்பதை நான் அறிந்திருப்பதால், இவ்விடத்திலிருந்து செல்கிறேன்.