Monday, September 12, 2016

248. தோழி கூற்று

248. தோழி கூற்று

பாடியவர்: உலோச்சனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 175 – இல் காணலாம்.
திணை: நெய்தல்
கூற்று: வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி ஆற்றுவித்தது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்குக் காலம் தாழ்த்துகிறான். அதனால் தலைவி வருத்தமாக இருக்கிறாள். தோழி, “உன் தாய் வேலனை அழைத்து வெறியாட்டு நடத்தியபொழுது, உனக்கும் தலைவனுக்கும் உள்ள காதலைப் பற்றித் தெரிந்துகொண்டாள். ஆகவே, உனக்கும் தலைவனுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். நீ வருந்தாதே.” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.  

அதுவர லன்மையோ அரிதே அவன்மார்
புறுக வென்ற நாளே குறுகி
ஈங்கா கின்றே தோழி கானல்
ஆடரை புதையக் கோடை யிட்ட
அடும்பிவர் மணற்கோ டூர நெடும்பனைக்
குறிய வாகுந் துறைவனைப்
பெரிய கூறி யாயறிந் தனளே. 

கொண்டு கூட்டு: தோழி! கானல் ஆடு அரை புதையக் கோடை இட்ட அடும்பு இவர் மணற்கோடு ஊர, நெடும்பனைக் குறியவாகும் துறைவனைப் பெரிய கூறி யாய் அறிந்தனள். அதுவரல் அன்மையோ அரிதே அவன் மார்பு உறுக என்ற நாள் குறுகி  ஈங்கு ஆகின்று.

அருஞ்சொற்பொருள்: அதுவரல் அன்மையோ அரிது = அது வராமல் இருப்பது அரிது; உறுதல் = அடைதல்; அரை = அடிப்பாகம்; கோடை = மேல் காற்று; அடும்பு = அடும்புக்கொடி; இவர்தல் = படர்தல்; கோடு = குவியல்; ஊர = பரவ; துறைவன் = நெய்தல் நிலத் தலைவன்; பெரிய கூறுதல் =. இது தெய்வத்தான் வந்ததெனக் கூறுதல்.

உரை: தோழி!, கடற்கரைச் சோலையில் உள்ள, அசையும் அடிமரம் புதையும்படி, மேல்காற்றுக் கொண்டுவந்து குவித்த அடும்பங்கொடியுடன் கூடிய மணல் பரவியதால் நெடிய பனைமரங்கள் குட்டையாகத் தோன்றுகின்றன. அத்தகைய கடற்கரைக்குரிய தலைவனைப் பற்றி, தெய்வத்தால் நேர்ந்தது என்று வெறியாட்டு நடத்தியபொழுது உன் தாய் அறிந்துகொண்டாள். அதனால், திருமணத்திற்குரிய நாள் வராமல் இருப்பது அரிது. நீ அவனது மார்பை அடையும் நாள் விரைவில் வரும்.  

சிறப்புக் குறிப்பு: மேல்காகாற்றினால் பனைமரத்தின் அடிப்பாகம் மறைந்து, பனைமரம் கைக்கு எட்டும் அளவு குட்டையானது என்பது, நாட்கள் செல்லச் செல்லத் திருமணத்திற்கான நாள் விரைவில் வந்துகொண்டிருக்கிறது என்பதைக் குறிக்கிறது.


247. தோழி கூற்று

247. தோழி கூற்று

பாடியவர்: சேந்தம் பூதனார். இவர் இயற்பெயர் பூதன். இவர் சேந்தன் என்பவருடைய மகனாகையால் சேந்தம் பூதனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறதுஇவர் குறுந்தொகையில் ஒருபாடலும் (247) நற்றிணையில் ஒருபாடலும் (261) இயற்றியுள்ளார்.
திணை:
குறிஞ்சி.
கூற்று - 1: கடிநகர்த் தெளிவு விலங்கினமை யறிய, தோழி கூறியது.    (கடிநகர் – காவல் உள்ள வீடு; தெளிவு விலங்கினமை - தலைவன் தான் கூறித் தெளிவித்த சூளுரையிலிருந்து மாறுபட்டமை)
கூற்று – 2:  வரைவுடன் பட்ட தோழி தலைமகட்குக் கூறியதூஉமாம்.
கூற்று விளக்கம் - 1: தலைவி தன் இல்லத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தாள். தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்வதாக உரைத்த சூளுரையிலிருந்து மாறுபட்டானா என்பதைத் தெரிந்துகொள்வதற்காகத் தோழி, “ தலைவன் உன்னை விரைவில் மணந்துகொள்ளப்போகிறான்’” என்று தலைவியிடம் கூறுகிறாள்.
கூற்று விளக்கம் 2: தலைவன் தலைவியை விரைவில் மணந்துகொள்ளப்போகிறான் என்பதை அறிந்த தோழி, அந்த மகிழ்ச்சிகரமான செய்தியைத் தலைவியிடம் கூறுகிறாள். இக் கருத்து, முதற் கூற்றில் உள்ள கருத்தைவிட ப் பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

எழின்மிக வுடைய தீங்கணிப் படூஉம்
திறவோர் செய்வினை அறவ தாகும்
கிளையுடை மாந்தர்க்குப் புணையுமா ரிவ்வென
ஆங்கறிந் திசினே தோழி வேங்கை
வீயா மென்சினை வீயுக யானை
ஆர்துயில் இயம்பு நாடன்
மார்புரித் தாகிய மறுவில் நட்பே.

கொண்டு கூட்டு: தோழி! வேங்கை வீயா மென்சினை வீ உக,  யானை ஆர்துயில் இயம்பும் நாடன்  மார்பு உரித்தாகிய மறுஇல் நட்பு எழில் மிக உடையது. ஈங்கு அணிப் படூஉம்;  திறவோர் செய்வினை அறவது ஆகும்கிளையுடை மாந்தர்க்குப் புணையுமார் இவ்வென ஆங்கு அறிந்திசின்.

அருஞ்சொற்பொருள்: எழில் = அழகு; அணிப்படூஉம் = விரைவில் கைகூடும்; திறவோர் = திறமை உள்ளவர்; புணை = தெப்பம் (ஆதரவு); மார்அசைச் சொல்; அறிந்திசின் = அறிந்தேன்; வீயா = கெடாத; சினை = கிளை; ஆர் = அரிய; உகுதல் = உதிர்தல்; மறு = குற்றம்.

உரை: தோழி! வேங்கை மரத்தின், கெடாத மெல்லிய கிளையில் இருந்து மலர்கள் உதிரும் இடத்தில் யானை ஆழ்ந்த உறக்கத்தில் மூச்சு விடுவதால் ஒலி உண்டாக்கும் நாட்டை உடைய தலைவனது, மார்பை உரியதாகப் பெற்ற உன்னுடைய குற்றமற்ற நட்பு மிக அழகுடையது. இவ்விடத்தில், அந்த நட்பின் பயன் விரைவில் கைகூடும் ( அதாவது, உனக்கும் தலைவனுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும்). திறமை உள்ளவர் செய்யும் செயல்கள் அறத்தொடு பொருந்தியவையாகும்.  சுற்றத்தை உடைய மக்களுக்கு இவை ஆதரவாக இருக்கும் என்பதை அறிந்தேன்.

சிறப்புக் குறிப்பு:     வேங்கை மலர் தன் மேல் உதிரும் பொழுது, ஒலியோடு யானை தூங்கும் நாடன் என்றது, தலைவனின் சுற்றத்தார் பாராட்ட, தலைவியை மணந்து கொண்டு வெளிப்படையாகத் தலைவியோடு அவன் இன்பம் நுகர்வான் என்ற குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


246. தலைவி கூற்று

246. தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: சிறைப்புறம்.
கூற்று விளக்கம்: ”நேற்று இரவு ஒருதேர் இங்கு வந்து திரும்பிச் சென்றது என்று ஊர்மக்கள் பேசிக்கொண்டார்கள்அது, என் தாய்க்குத் தெரிய வந்தது. அது தொடங்கி, என் தாய் அதைப் பற்றி ஆராய்கிறாள்; என்னைத் துன்புறுத்துகிறாள். இனி, நான் இரவு நேரத்தில் தலைவனைச் சந்திக்க முடியாது போலிருக்கிறது.” என்று தலைவனின் காதுகளில் கேட்குமாறு தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள். தன் நிலையைத் தலைவன் புரிந்து கொண்டால், திருமணத்திற்குத் தேவையான ஏற்படுகளை விரைவில் செய்வான் என்று அவள் எண்னுகிறாள்.

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
களிற்றுச்செவி யன்ன பாசடை மயக்கிப்
பனிக்கழி துழவும் பானாள் தனித்தோர்
தேர்வந்து பெயர்ந்த தென்ப வதற்கொண்
டோரு மலைக்கு மன்னை பிறரும்
பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளிர்
இளையரு மடவரும் உளரே
அலையாத் தாயரொடு நற்பா லோரே. 

கொண்டு கூட்டு: பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை களிற்றுச்செவி அன்ன பாசடை மயக்கிப்பனிக்கழி துழவும் பால்நாள், தனித்தோர் தேர்வந்து பெயர்ந்தது என்ப. அதற்கொண்டு அன்னை ஓரும்; அலைக்கும். பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளிர்  பிறரும்,  இளையரும் மடவரும் உளர்அலையாத் தாயரொடு நற்பாலோர்

அருஞ்சொற்பொருள்: பாசடை = பாசு அடை = பசுமையான இலை; மயக்கி = கலக்கி; கழி = உப்பங்கழி; பால்நாள் = நடு இரவுஓர்தல் = ஆராய்தல்; அலைக்கும் = துன்புறுத்தும்; கதுப்பு = பெண்ணின் தலைமுடி; மடவர் = மடப்பம் உடையவர் (அதிகம் பேசாது, தெரிந்தவற்றையும் தெரியாதவை போல் காட்டிக் கொள்ளும் இயல்பு); பால் = ஊழ்வினை.

உரை: (தோழி!)  பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்காக்கை,  யானையின் காதைப்போல் அகன்று இருக்கும் பசுமையான இலைகளைக் கலக்கி,  குளிர்ச்சியை உடைய உப்பங்கழியில் இரைதேடும் பொருட்டுத் துழாவுகின்ற நடு இரவில்,  தனியாக ஒருதேர் இங்கே வந்து திரும்பிச் சென்றது என்று ஊரார் பேசிக்கொண்டார்கள். அது தொடங்கி, என் தாய் அதைப் பற்றி ஆராய்கின்றாள். என்னைத் துன்புறுத்துகின்றாள். பின்னித் தொங்கவிடப்பட்ட கூந்தலை உடைய, மின்னும் அணிகலன்களை அணிந்த மகளிர்,  இளமையும், மடப்பமும்  உடையவர்களாகப்  பலர் இவ்வூரில் உள்ளனர். அவர்கள் எல்லாம், தம்மை வருத்தாத தாயார்களுடன் வாழும் நற்பேற்றைப் பெற்றனர்.


சிறப்புக் குறிப்பு: ஊரில் உள்ள மற்ற பெண்களின் தாயார் அவர்களைத் துன்புறுத்தாமல் இருக்கும் பொழுது, தன் தாய் மட்டும் தன்னைத் துன்புறுத்துவதை எண்ணித் தன் வருத்தத்தைத் தலைவி தோழியிடம் பகிர்ந்து கொள்கிறாள்.  

Monday, August 29, 2016

245. தலைவி கூற்று

245.  தலைவி கூற்று

பாடியவர்: மாலைமாறனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவைத் பொறுத்துக்கொள்ள முடியாமல் தலைவி வருந்துவாளே என்று எண்ணித் தோழி கவலைப்படுகிறாள். தோழி கவலைப்படுவதை அறிந்த தலைவி, “தலைவன் என்னைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான் என்பதைப் பலரும் அறிந்தால், நான் என் அழகை இழந்ததை நினைத்து வருந்துவதைவிட அதிகமாக வருந்துவேன்ஆகவே, நான் தலைவனின் பிரிவை எப்படியாவது பொறுத்துக் கொள்வேன்என்று கூறுகிறாள்.

கடலங் கான லாய மாய்ந்தவென்
நலமிழந் ததனினு நனியின் னாதே
வாள்போல் வாய கொழுமடல் தாழை
மாலைவேல் நாட்டு வேலி யாகும்
மெல்லம் புலம்பன் கொடுமை
பல்லோர் அறியப் பரந்துவெளிப் படினே. 

கொண்டு கூட்டு: வாள்போல் வாய கொழுமடல் தாழைமாலைவேல் நாட்டு வேலி ஆகும் மெல்லம் புலம்பன் கொடுமை பல்லோர் அறியப் பரந்து வெளிப்படின்கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என்நலம் இழந்ததனினும் நனி இன்னாது.

அருஞ்சொற்பொருள்: கானல் = கடற்கரைச் சோலை; ஆயம் = தோழியர் கூட்டம்; ஆய்ந்த = பாராட்டிய; நலம் = பெண்மை நலன் (அழகு); நனி = மிகவும்; இன்னாதது = துன்பம் தருவது; வாய = வாயையுடைய; மாலை = வரிசை; புலம்பன் = நெய்தல் நிலத் தலைவன்.

உரை: (தோழி!) கருக்குடைய வாயையுடைய வாள் போன்ற விளிம்புடன்கூடிய,   கொழுவிய மடலை உடைய தாழையானது, வரிசையாக வேல்களை நட்டு வைத்த வேலியைப்போல் காக்கும், மெல்லிய கடற்கரைக்குரிய தலைவன் எனக்குச் செய்த கொடுமை, பலர் அறியும் வண்ணம் பரவினால், அது, அழகிய கடற்கரைச் சோலையிலே விளையாடும் மகளிர் கூட்டத்தினர், பாராட்டிய என்னுடைய பெண்மை நலத்தை நான் இழந்ததைக் காட்டிலும், மிகுந்த துன்பத்தைத் தருவதாகும்..


சிறப்புக் குறிப்பு: தன்னோடு விளையாடும் பெண்கள், தங்களைக் காட்டிலும் அழகானவள் என்று தன்னை வியந்து பாராட்டியதை, “ஆயம் ஆய்ந்த என் நலம்என்று தலைவி குறிப்பிடுகிறாள். தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்து சென்றதைத் தலவி, தலைவன் தனக்குச் செய்த கொடுமையாகக் கருதுகிறாள்

244. தோழி கூற்று

244. தோழி கூற்று

பாடியவர்: கண்ணனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: இரவுக்குறி வந்தொழுகா நின்ற தலைமகற்குத் தம் காவல் மிகுதியாற்  புறப்பட்டு எதிர்கொள்ளப் பெறாதவழி, பிற்றை ஞான்று (மறுநாள்) தோழி, "வரைந்து கொளினல்லது இவ்வொழுகலாற்றின் (களவொழுக்கத்தில்) இனிக் கூடல் அரிது" என வரைவு கடாயது.
கூற்று விளக்கம்:  முதல்நாள் இரவு, தலைவன் தலைவியின் வீட்டிற்கு வந்து, தாழிடப்பட்ட கதவைத் திறக்க முயன்றான். ஆனால், தலைவி வீட்டைவிட்டு வெளியே வந்து அவனைச் சந்திக்கவில்லை. மறுநாள், தலைவனும் தோழியும் சந்திக்கிறார்கள். “தலைவ, நேற்றிரவு நீ வந்து ஒலியெழுப்பியதை நாங்கள் கேட்டோம். ஆனால், தலைவி எழுந்துவருவதற்கு முயன்றபொழுது, அவள்தாய் அவளை இறுகத் தழுவிக்கொண்டாள். ஆகவே, இனி நீ இரவில் வந்து தலைவியைக் காணமுடியாது.” என்று தோழி கூறுகிறாள்.

பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவு முயறல்
கேளே மல்லேங் கேட்டனெம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்கியாம்
உயங்குதொறு முயங்கும் அறனில் யாயே. 

கொண்டு கூட்டு: பெருமபல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து, உரவுக்களிறு போல் வந்து இரவுக் கதவம் முயறல் கேளேம்  அல்லேம்;  கேட்டனெம்.  ஓரி முருங்கப் பீலி சாய நன்மயில் வலைப்பட் டாங்கு, யாம் உயங்குதொறும் அறனில் யாய் முயங்கும். 

அருஞ்சொற்பொருள்: துஞ்சுதல் = தூங்குதல் ; நள்ளென் = இருள் செறிந்தயாமம் = நள்ளிரவு ; உரவு = வலிய; கதவம் = கதவு; முயறல் = முயலுதல்; ஓரி = ஆணின் தலைமுடி (இங்கு ஆண்மயிலின் உச்சிக் கொண்டையைக் குறிக்கிறது); முருங்குதல் = அழிதல்பீலி = தோகை; சாய்தல் = மெலிதல்; உயங்குதல் = அசைதல்; முயங்கும் = தழுவும்.

உரை: தலைவ!  ஊரில் உள்ளவர்கள் பலரும் தூங்கும் இருள் செறிந்த நடுஇரவில், வலிமையான யானையைப் போல் வந்து,  நீ இராக் காலத்தே தாழிட்ட கதவைத் திறக்க முயன்றதனால் உண்டான ஒலியை, நாங்கள் கேட்காமல் இல்லை; கேட்டோம். தலைக்கொண்டை நெரியவும்,  தோகை மெலியவும்,  நல்ல மயில் வலையில் அகப்பட்டதைப் போல், நாங்கள் அசையுந்தோறும், எம் அறமில்லாத தாய் எம்மைத் தழுவினாள்.


சிறப்புக் குறிப்பு: ’நீ அவளைக் காண விரும்பினால், திருமணம் செய்துகொளவதுதான் சிறந்த வழி. அதற்கான முயற்சிகளை விரைந்து செய்.” என்று தோழி தலைவனிடம் மறைமுகமாகக் கூறுகிறாள்.  

243. தலைவி கூற்று

243. தலைவி கூற்று

பாடியவர்: நம்பி குட்டுவனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 109 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: வன்புறை யெதிர் அழிந்து சொல்லியது (வன்புறை - வற்புறுத்துதல். அழிந்து - இரங்கி.)
கூற்று விளக்கம்: தலைவனைப் பிரிந்திருப்பதால் தலைவி உறக்கமின்றி வருந்துகிறாள். “தலைவர் விரைவில் வந்துவிடுவார். அதுவரை நீ பொறுமையக இருஎன்று வற்புறுத்திய தோழிக்கு மறுமொழியாகத் தலைவி, “ நான் தலைவன் நினைவாகவே இருப்பதால்தான் என்னால் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை; உறங்க முடியவில்லை. இனிமேல், நான்  அவரை நினைக்க மாட்டேன். ஆகவே, என் கண்கள் இனி நன்கு உறங்கலாம்என்று கூறுகிறாள்.

மானடி யன்ன கவட்டிலை அடும்பின்
தார்மணி யன்ன ஒண்பூக் கொழுதி
ஒண்தொடி மகளிர் வண்ட லயரும்
புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை
உள்ளேன் தோழி படீஇயர்என் கண்ணே. 

கொண்டு கூட்டு: தோழி மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின் தார்மணி அன்ன ஒண்பூக் கொழுதிஒண்தொடி மகளிர் வண்ட ல் அயரும் புள் இமிழ் பெருங்கடல் சேர்ப்பனை  உள்ளேன்; படீஇயர் என் கண்ணே. 

அருஞ்சொற்பொருள்: கவடு = பிளவு; அடும்பு = நெய்தல் நிலத்தில் படரும் ஒரு வகைக்  கொடி; தார் = கழுத்துப் பட்டை, மாலை (இங்கு குதிரை அல்லது மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மாலையைக் குறிக்கிறது); கொழுதுதல் = கிழித்தல், வலிந்து கையால் மலரச் செய்தல்; வண்டல் = சிறுமியர் விளையாட்டு; அயர்தல் = விளையாடுதல்; இமிழ்தல் = ஒலித்தல்; படீஇயர் = உரங்குக.

உரை: தோழி! மானின் குளம்பைப் போன்ற பிளவுபட்ட இலைகளை உடைய அடும்பினது, குதிரையின் கழுத்தில் இடும் மாலையின்கண் உள்ள மணியைப் போன்ற ஒள்ளிய பூவை வலிந்து மலரச் செய்து, ஒளிபொருந்திய வளையல்களையுடைய பெண்கள் விளையாடுகின்ற,  பறவைகள் ஒலிக்கின்ற, பெரிய கடற்கரைக்குத் தலைவனை, இனி நினைக்க மாட்டேன்; ஆதலின், என் கண்கள் உறங்குவனவாக.


சிறப்புக் குறிப்பு: பெண்கள் மலர்களின் மொட்டுக்களைத் தங்கள் விரல்களால் வலிய மலரச் செய்து விளையாடிய பொழுது, பூக்களைத் துன்புறுத்தியது போல், தலைவன் தன் பணியிலேயே கவனம் செலுத்தித் தலைவியை த் தனிமையில் தவிக்கவிட்டுக் கொடுமை செய்தான் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.

242. செவிலித்தாய் கூற்று

242.  செவிலித்தாய் கூற்று

பாடியவர்: குழற்றத்தனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை:
முல்லை.
கூற்று: கற்புக் காலத்துக் கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது.

கூற்று விளக்கம்: திருமணத்திற்குப் பிறகு, தலைவனும் தலைவியும் தனிக்குடுத்தனம் நட்த்துகிறார்கள். ”அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? தலைவி மகிழ்ச்சியாக இருக்கிறாளா?” என்று தெரிந்துகொள்ளத் தலைவியின் தாய் ஆவலாக இருக்கிறாள். தலைவியின் செவிலித்தாய், தான் தலைவியின் இல்லத்திற்குச் சென்று தலைவி எப்படி இருக்கிறாள் என்று பார்த்து வருவதாக கூறித் தலைவியின் இல்லத்திற்குச் சென்றாள். தலைவியின் இல்லத்திற்குச் சென்ற பிறகு, தலைவனும் தலைவியும் ஒற்றுமையாகக் குடும்பம் நடத்துவதையும், தலைவன் அதிகமாக வெளியூருக்குப் போகாமல் தலைவியோடு இருப்பதையும், வேந்தன் ஏவிய பணிக்காக வெளியூருக்குச் சென்றாலும், தலைவன் அங்கே தங்காமல் உடனே திரும்பி வந்துவிடுவதையும் செவிலித்தாய் காண்கிறாள்.  தலைவனும் தலைவியும் இனிமையாகக் குடும்பம் நடத்துகிறார்கள் என்ற மகிழ்ச்சிகரமான  செய்தியைத் தலைவியின் தாய்க்குச்  செவிலித்தாய்  கூறுகிறாள்.


கானங் கோழி கவர்குரற் சேவல்
ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப்
புதனீர் வாரும் பூநாறு புறவிற்
சீறூ ரோளே மடந்தை வேறூர்
வேந்துவிடு தொழிலொடு செலினும்
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே
. 

கொண்டு கூட்டு: மடந்தை கானம் கோழி கவர்குரல் சேவல் ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப் புதல்நீர் வாரும், பூநாறு புறவிற் சிறு ஊரோள். செம்மல் தேர், வேந்துவிடு தொழிலொடு வேறூர் செலினும்சேந்துவரல் அறியாது. 

அருஞ்சொற்பொருள்: கானம் = காடு; கவர் குரல் = பலகுரல்கள் ஒன்றுசேர்ந்தது போல் உள்ள குரல்; பொறி = புள்ளி; எருத்து = கழுத்து; சிதர் = துளிகள்; உறைதல் = தங்குதல்; புதல் = புதர்; வாரும் = ஒழுகும்; புறவு = முல்லை நிலம்; சீறூரோள் = சிறு + ஊரோள் = சிறிய ஊரில் உள்ளவள்; மடந்தை = தலைவி; வேந்துவிடு தொழில் = அரசனால் ஏவப்பட்ட தொழில்; சேந்து வரல் = தங்கி வருதல்; செம்மல் = தலைவன்.

உரை: தலைவி,  காட்டுக் கோழியின் பலகுரல்கள் ஒன்று சேர்ந்ததைப்போல் உள்ள குரலையுடைய சேவலின்,  ஒளியுள்ள புள்ளிகளை உடைய கழுத்தில், குளிர்ந்த நீர்த்துளிகள் படும்படி, புதரிலிருந்து நீர் ஒழுகும், மலர் மணம் வீசுகின்ற முல்லை நிலத்தில் அமைந்த, சிறிய ஊரில் உள்ளாள். வேந்தனால் ஏவப்பட்ட தொழிலை மேற்கொள்வதற்காகத் தலைவனது தேர்  வெளியூருக்குச் சென்றாலும், சென்ற ஊரில் அதிக நாட்கள்  தங்கியிருக்காமல், உடனே வந்து விடுகிறது.


சிறப்புக் குறிப்பு:. ”புதனீர் வாரும் பூநாறு புறவிற் சீறூரோள்என்றது தலைவி, நிலவளமும் நீர்வளமும் நிறைந்த முல்லை நிலத்தில் உள்ள சிறிய ஊரில் வாழ்கிறாள் என்பதைக் குறிக்கிறது. வேறூர் வேந்துவிடு தொழிலொடு செலினும்” என்பதிலிருந்து, தலைவன் செல்வாக்குள்ளவன் என்றும் அரசனோடு தொடர்புடையவன் என்றும் தெரிகிறது. “செலினும்என்றது, தலைவன் அடிக்கடித் தலைவியைவிட்டுப் பிரிந்து செல்வதில்லை என்பதை வலியுறுத்துகிறது. ”சேந்துவரல் அறியாதுஎன்றது, தலைவிமீது மிகுந்த அன்புடையனாகையால் அவளைவிட்டுப் பிரிய விரும்பாமல், வெளியூருக்குச் சென்றாலும், விரைவில் பணியை முடித்துத் திரும்பி வருகிறான் என்பதைக் குறிக்கிறது. தேரில் செல்கிறான் என்றது அவன் செல்வமும் செல்வாக்கும் உள்ளவன் என்பதை வலியுறுத்துகிறதுஆகவே, தலைவி செல்வமும், செல்வாக்கும், மிகுந்த அன்பும் உடைய தலைவனோடு நீர்வளமும் நிலவளமும் நிறைந்த முல்லை நிலத்தில் வாழ்கிறாள் என்பதைச் செவிலித்தாய் தலைவியின் தாயிடம் உரைக்கிறாள்