Monday, September 12, 2016

246. தலைவி கூற்று

246. தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: சிறைப்புறம்.
கூற்று விளக்கம்: ”நேற்று இரவு ஒருதேர் இங்கு வந்து திரும்பிச் சென்றது என்று ஊர்மக்கள் பேசிக்கொண்டார்கள்அது, என் தாய்க்குத் தெரிய வந்தது. அது தொடங்கி, என் தாய் அதைப் பற்றி ஆராய்கிறாள்; என்னைத் துன்புறுத்துகிறாள். இனி, நான் இரவு நேரத்தில் தலைவனைச் சந்திக்க முடியாது போலிருக்கிறது.” என்று தலைவனின் காதுகளில் கேட்குமாறு தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள். தன் நிலையைத் தலைவன் புரிந்து கொண்டால், திருமணத்திற்குத் தேவையான ஏற்படுகளை விரைவில் செய்வான் என்று அவள் எண்னுகிறாள்.

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
களிற்றுச்செவி யன்ன பாசடை மயக்கிப்
பனிக்கழி துழவும் பானாள் தனித்தோர்
தேர்வந்து பெயர்ந்த தென்ப வதற்கொண்
டோரு மலைக்கு மன்னை பிறரும்
பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளிர்
இளையரு மடவரும் உளரே
அலையாத் தாயரொடு நற்பா லோரே. 

கொண்டு கூட்டு: பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை களிற்றுச்செவி அன்ன பாசடை மயக்கிப்பனிக்கழி துழவும் பால்நாள், தனித்தோர் தேர்வந்து பெயர்ந்தது என்ப. அதற்கொண்டு அன்னை ஓரும்; அலைக்கும். பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளிர்  பிறரும்,  இளையரும் மடவரும் உளர்அலையாத் தாயரொடு நற்பாலோர்

அருஞ்சொற்பொருள்: பாசடை = பாசு அடை = பசுமையான இலை; மயக்கி = கலக்கி; கழி = உப்பங்கழி; பால்நாள் = நடு இரவுஓர்தல் = ஆராய்தல்; அலைக்கும் = துன்புறுத்தும்; கதுப்பு = பெண்ணின் தலைமுடி; மடவர் = மடப்பம் உடையவர் (அதிகம் பேசாது, தெரிந்தவற்றையும் தெரியாதவை போல் காட்டிக் கொள்ளும் இயல்பு); பால் = ஊழ்வினை.

உரை: (தோழி!)  பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்காக்கை,  யானையின் காதைப்போல் அகன்று இருக்கும் பசுமையான இலைகளைக் கலக்கி,  குளிர்ச்சியை உடைய உப்பங்கழியில் இரைதேடும் பொருட்டுத் துழாவுகின்ற நடு இரவில்,  தனியாக ஒருதேர் இங்கே வந்து திரும்பிச் சென்றது என்று ஊரார் பேசிக்கொண்டார்கள். அது தொடங்கி, என் தாய் அதைப் பற்றி ஆராய்கின்றாள். என்னைத் துன்புறுத்துகின்றாள். பின்னித் தொங்கவிடப்பட்ட கூந்தலை உடைய, மின்னும் அணிகலன்களை அணிந்த மகளிர்,  இளமையும், மடப்பமும்  உடையவர்களாகப்  பலர் இவ்வூரில் உள்ளனர். அவர்கள் எல்லாம், தம்மை வருத்தாத தாயார்களுடன் வாழும் நற்பேற்றைப் பெற்றனர்.


சிறப்புக் குறிப்பு: ஊரில் உள்ள மற்ற பெண்களின் தாயார் அவர்களைத் துன்புறுத்தாமல் இருக்கும் பொழுது, தன் தாய் மட்டும் தன்னைத் துன்புறுத்துவதை எண்ணித் தன் வருத்தத்தைத் தலைவி தோழியிடம் பகிர்ந்து கொள்கிறாள்.  

No comments:

Post a Comment